பலதும் பத்தும்

தெற்கையும் வடக்கையும் இணைக்கும் நல்லிணக்கத்தின் தரிப்பிடம் !

தெற்கு மற்றும் வடக்குக்கு இடையிலான நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்குடனும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் நீண்டதூரப் பயணிகளுக்கான ஓய்வு வசதிகளை வழங்கும் நோக்குடனும் நிர்மாணிக்கப்பட்ட “தெற்கையும் வடக்கையும் இணைக்கும் நல்லிணக்கத்தின் தரிப்பிடம்” எனும் புதிய சேவை மையம் 2026 மார்ச் 10 ஆம் திகதி வவுனியா, இரட்டை பெரியகுளம் பகுதியில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோரின் தலைமையில் இந்த ஆரம்ப விழா நடைபெற்றது.

யாழ்ப்பாணம் – கண்டி A9 பிரதான வீதிக்கு முகப்பாக வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சேவை மையத்தில் 20 வர்த்தக விற்பனை கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், வடக்கு மாகாணத்திற்கே உரித்தான கலாசார உற்பத்திப் பொருட்கள் மற்றும் உள்ளூர் உணவுகளை விற்பனை செய்வதற்கான விசேட வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தூர இடங்களுக்குப் பயணம் செய்யும் மக்கள் தமது களைப்பை நீக்கிக் கொள்வதற்காக வசதியான சூழல், நவீன சுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பான ஓய்விடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இம்மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்ட பணிகளுக்காக 15 மில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வின் போது, வடக்கிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஏனைய பிரதேசங்களுக்குப் பயணம் செய்யும் மக்களுக்குத் தேவையான வசதிகளைத் திட்டமிடும் நோக்கில் கிராமிய அபிவிருத்தி அமைச்சினால் உருவாக்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையத்தளமும் அமைச்சர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் ஊடாக இப்பிரதேசத்திலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும், அவர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், வடக்கு மாகாண உற்பத்திகளுக்கு புதிய சந்தையொன்றை உருவாக்குவதும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத்சந்திர, வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் அசங்க காஞ்சன, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையின் தவிசாளர் சுதர்ஷன வீரகோன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *