குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க முயற்சிக்கும் அரசியல்வாதிகள் -அநுர அரசாங்கம் இல்லையேல் நாட்டின் நிலை என்ன?

அநுர அரசாங்கம் இல்லையென்றால் திக்வா புயல் மற்றும் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளினால் என்ன நிலைமை ஏற்பட்டிருக்கும் என்பது மக்களுக்கு தெரியும். அரசியல்வாதிகள் இன்று குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க முயற்சிப்பதாக கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான நஸ்ட ஈடு மற்றும் புதிய படகுகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் சுனாமி அனர்த்தம்,வெள்ள அனர்த்தங்களில் மக்களுக்கு நஸ்ட ஈடுவழங்காமல் அன்று அந்த பணங்களை அரசியல்வாதிகள் கொள்ளையிட்டனர்.கடந்த காலங்களில் அரசியலுக்குவந்தவர்கள் பலர் இன்று செல்வந்தர்களாக காணப்படுகின்றனர்.அவர்களுக்கு இந்த பணம் எவ்வாறு வந்தது என்று மக்களுக்கு தெரியும்.
நாங்கள் சிறந்த அரசியலை முன்னெடுப்பதன் மூலமே இவ்வாறானவர்கள் எங்களை ஆட்சிசெய்வதை தடுக்கமுடியும்.சிறந்த அரசியலை முன்னெடுப்பதன் மூலமே மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்க்கமுடியும்.கடந்தகாலத்தில் இடம்பெற்ற கொள்ளைகள் நிறுத்தப்பட்டதன் காரணமாகவே இன்று அந்த பணத்தினைக்கொண்டு மக்களுக்கான அபிவிருத்திகளை முன்கொண்டுசெல்லமுடிகின்றது.
இன்று வளைகுடாவில் ஏற்பட்டுள்ள போர் நெருக்கடிகள் இங்கும் தாக்கத்தினை செலுத்துகின்றது.எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.இந்த நெருக்கடி இலங்கைக்குமட்டுமான நெருக்கடி அல்ல.உலக நாடுகளுக்கான நெருக்கடி.இந்த நாட்டில் ஒரு மாதத்திற்கான எரிபொருட்களையே சேமிக்கமுடியும்.
நாங்கள் தற்போது மூன்று மாதத்திற்கான ஆறு மாதங்களுக்கான எரிபொருட்களை சேகரித்துவைப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றோம்.
ஆனால் இன்றைய நிலைமையினை வைத்து அரசியல்வாதிகள் குளம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்துவருகின்றனர்.இந்த நாட்டில் அனுரகுமார திசாநாயக்க என்பவர் ஆட்சியதிகாரத்தினை பொறுப்பேற்காவிட்டிருந்தால் என்ன நிலைமை ஏற்பட்டிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.
தித்வா புயலினால் மீன்பிடித்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. 10000 மில்லியன் ரூபா பாதிப்புகள் ஏற்பட்டிருந்தது.அதிலிருந்தும் மீன்பிடித்துறையினை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றோம்.
இந்த நாட்டில் ஒரு மாற்றமான அரசியல்முன்னெடுத்துவரும் நிலையில் உலகளவிலும் ஒரு மாற்றமான அரசியல் சூழ்நிலையேற்பட்டுள்ளது.அதனை சிலர் பயன்படுத்தும் நிலைமைகளை காணமுடிகின்றது.
இதேபோன்று இந்த நாட்டில் முழநாட்டினையும் ஒன்றிணைக்கும் வகையிலான போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தினை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம். இந்த நாட்டில் வெள்ளைப்பக்கம் ஒன்று இருப்பதுபோது கறுப்பு போதைப்பொருள் பக்கம் ஒன்று இருக்கின்றது.
பொலிஸ்,இராணுவம்,புலனாய்வுப்பிரிவு,குடிவரவு,நடிகர்,நடிகைகள் என அனைத்து பகுதிகளிலும் இன்று இந்த போதைப்பொருள் வலைப்பின்னல் பரவிக்காணப்படுகின்றது. அதனை நாங்கள் சும்மா கடந்துசெல்வதற்கு தயாராகயில்லை.இந்த நச்சுப்போதைப்பொருளை இந்த நாட்டிலிருந்து அடியோடு ஒழிக்கும் வரையில் எமது செயற்பாடு முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
![]()