பலதும் பத்தும்

இந்தியாவில் முதன்முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி

கண்ணியமாக மரணமடைவது ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்பதை அங்கீகரித்து, இந்தியாவில் முதன்முறையாக கருணைக் கொலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிஷ் ராணா என்ற இளைஞர், 13 ஆண்டுகளுக்கு முன்பு மாடியிலிருந்து விழுந்ததில் படுகாயமடைந்து கோமா நிலைக்குச் சென்றார். அன்றிலிருந்து இன்று வரை எவ்வித முன்னேற்றமும் இன்றி, செயற்கை சுவாசத்தின் உதவியுடனேயே அவர் உயிர் வாழ்ந்து வந்தார்.

தனது மகனின் வேதனையான நிலையை முடிவுக்குக் கொண்டு வருமாறு கோரி ஹரிஷ் ராணாவின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், ஹரிஷ் ராணாவின் செயற்கை சுவாசத்தை நிறுத்துவதற்கு அனுமதி வழங்கியது.

இந்தத் தீர்ப்பின் போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ‘கண்ணியமாக மரணமடைவது’ என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை எனத் தெரிவித்தனர். மருத்துவ ரீதியாக குணமடைய வாய்ப்பே இல்லாத நிலையில், ஒருவரைத் தொடர்ந்து செயற்கை முறையில் உயிர் வாழ வைப்பது தேவையற்றது என்ற அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய நீதித்துறை வரலாற்றில் இது ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *