இந்தியா

தமிழக தேர்தல் திகதி அறிவிப்பு எப்போது தெரியுமா?

தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ம் திகதியுடன் நிறைவடைகிறது.

இதேபோல், புதுச்சேரி (ஜூன் 15), மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20), கேரளா (மே 23) ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது.

எனவே, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகள் உள்பட 5 மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 824 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.

இது தொடர்பாக, ஒவ்வொரு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரடியாக சென்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த மாதம் இறுதியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை வந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உடன் ஆலோசனை நடத்தினார். மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், இன்னும் 3 முதல் 5 நாட்களுக்குள் தமிழ்நாடு தேர்தல் திகதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக டெல்லியில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் 3 முதல் 4 கட்டங்களாகவும், அசாமில் இரு கட்டங்களாகவும் தேர்தல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் 5 மாநிலத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 23-ம் திகதி (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற அதிகம் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமுலுக்கு வந்துவிடும்.

தமிழகம் முழுவதும் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவை நடத்துவதற்கு ஒரு தலைமை அதிகாரி இருப்பார்.

அவருக்கு உதவியாக 3 வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் ஒரு அலுவலக உதவியாளர் இருப்பார்கள்.

அந்த வகையில், மொத்தம் 3 இலட்சத்து 45 ஆயிரத்து 160 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *