இலங்கை

மத்திய கிழக்கு போரின் எதிரொலி;  இலங்கையில் எகிறிய எரிபொருள் விலைகள்; போக்குவரத்து கட்டண அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் ஆரம்பம் ;மீண்டும் நெருக்கடி நிலைக்கு செல்லும் நாடு

மத்திய கிழக்குநாடுகளில் உக்கிரமடைந்து வரும் போர்ச்சூழலை காரணம் காட்டி இலங்கையில் எரிபொருள் விலைகளை அரசாங்கம் திடீரென பாரியளவில் அதிகரித்துள்ளதால் நாட்டின் அத்தியாவசிய சேவைகள் மற்றும் அத்தியவாசியா பொருட்களின் விலைகளும் சடுதியாக அதிகரிஅதிகரித்துள்ளதுடன் அத்தியாவசிய பொருட்களின் பதுக்கல்களும் ஆரம்பித்துள்ளதால் நாடு மீண்டுமொரு நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் நிலைமைக்கு தள்ளப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

திடீரென எகிறியஎரிபொருள் விலைகள்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் திடீரென திங்கட்கிழமை நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டன.வழமையாக ஒவ்வொரு மாதத்தின் முதலாம் திகதிகளில் எரிபொருள் கட்டண மறுசீரமைப்புக்கமைய எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்படும் நிலையில், உலக சந்தையில் தற்போது அதிகரித்துள்ள மசகு எண்ணெய் விலையேற்றத்தை தொடர்ந்து முன்னெப்போதும் இல்லாதவாறு மாதத்தின் இடையில் திடீரென நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி ஒரு லீட்டர் 92 ரக ஒக்டேன் பெற்றோலின் விலை 24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 317 ரூபாவாகும். அத்துடன் ஒரு லீட்டர் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 365 ரூபாவாகும்.

இதேவேளை ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் விலை 22 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 303 ரூபாவாகும். ஒரு லீட்டர் லங்கா சுப்பர் டீசலின் விலை 24 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இதன் புதிய விலை 353 ரூபாவாகும். அத்துடன் மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 195 ரூபாவாகும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.இதேவேளை லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்கொண்ட விலைத் திருத்தத்திற்கு சமாந்திரமாக தமது விலைகளை திருத்தம் செய்துள்ளதாக அறிவித்தது.

விலை அதிகரிப்பு, பதுக்கல் ஆரம்பம்

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து கொழும்பு புறக்கோட்டை மொத்த வியாபார நிலையங்களில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலுடன் அவற்றின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .இவ்வாறாகா சீனி, தேங்காய் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட தானிய வகைகள் பதுக்கப்பட்டு விலையேற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்றைய தினத்தில் மாத்திரம் ஒரு கிலோ சீனியின் மொத்த விலை 10 முதல் 15 ரூபாவினாலும், ஒரு கிலோ பருப்பின் விலை 20 முதல் 25 ரூபாவினாலும், ஒரு கிலோ தேங்காய் எண்ணெய் விலை 40 முதல் 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த வியாபார தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, விலை அதிகரிப்பை செய்யும் நோக்கில் அத்தியாவசிய பொருட்களை பதுக்கும் செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் கூறப்படுகின்றது.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் , டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிக்கப்பட்டதனைத் தொடர்ந்து நேற்று முதல் பாடசாலை சேவை வாகன கட்டணங்களை அதிகரிப்பதற்கு பாடசாலை வாகன சேவை சங்கங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.அத்துடன் முச்சக்கர வண்டி கட்டணங்களை அதிகரிப்பதற்கு முச்சக்கர வண்டி சங்கங்கள் ஆராய்ந்து வருகின்றன. அதேபோன்று பஸ் கட்டணங்களையும் உயர்த்த வேண்டும் என்றும், இது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்ப்பதாகவும் பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன.அதேவேளை எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து தூர இடங்களுக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் லொறிகள் உள்ளிட்ட வாகனங்களின் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பு

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து பாடசாலை மாணவர்களுக்கான வாகன சேவைக் கட்டணங்களை 5 வீதத்தால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அந்த சங்கத்தினால் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் எரிபொருள் விலைகளில் மறுசீரமைப்பு இடம்பெற்ற போதும், நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஆனால் இம்முறை எரிபொருள் விலைகள் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாடசாலை சேவை வாகன கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் லலித் சந்திரசிறி பெர்னாண்டோ ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதன்படி பாடசாலை மாணவர் போக்குவரத்துடன் தொடர்புடைய ஏனைய சங்கங்களுடன் கலந்துரையாடி 5 வீதத்தால் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கட்டண அதிகரிப்புக்கமைய தற்போது மாணவர் ஒருவருக்காக 10,000 ரூபா அறவிடப்படுமாக இருந்தால் அந்த தொகை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என்று லலித் சந்திரசிறி பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எரிபொருள் விலை உயர்வை தொடர்ந்து பஸ் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்களால் கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்ற போதும், தற்போதைய நிலைமையில் பஸ் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்தது.

எனினும் எரிபொருள் விலையேற்றத்துடன் பஸ் கட்டணம் தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் . இது தொடர்பில் பஸ் சங்கங்கள் கூடி தீர்மானங்களை எடுக்கும் என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.இதன்போது கெமுனு விஜேவர்தன மேலும் தெரிவிக்கையில்,

உலக சந்தையின் நிலைமைக்கமைய எரிபொருள் விலைகள் இந்த வரையறைக்குள் நின்றுவிடும் என்று எதிர்பார்க்கவில்லை. எதிர்காலத்தில் இன்னும் விலைகள் அதிகரிக்கலாம். ஆனால் ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாகவே அரசாங்கம் கூறியது. அப்படியென்றால் பழைய எரிபொருளுக்கான விலை அதிகரிப்பு செய்துள்ளது. இதனால் அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளது என்றே கூற வேண்டும்.

இதேவேளை, டீசல் விலை 22 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ் கட்டணம் தொடர்பான கட்டண சூத்திரம் தொடர்பான பிரச்சினைகள் எழுகின்றன. கடந்த வருடம் ஜுலை மாதத்திலேயே பஸ் கட்டணம் சிறிய தொகையில் அதிகரிக்கப்பட்டது. 24 வருடங்களாக தொடர்ந்து கட்டண சூத்திரமே இருந்தது. இதனை மாற்றுமாறு நாங்கள் கோரிக்கை விடுத்து வந்தோம். ஆனால் அதனை செய்யாமல் சம்பந்தமில்லாத விடயங்களையே செய்தன. இந்த விலை சூத்திரத்திற்குள் எமது கட்டணம் சிக்கிக்கொண்டுள்ளது. இதனால் பஸ் சங்கங்களுடன் கலந்துரையாடி இது தொடர்பில் தீர்மானங்களை எடுக்கவுள்ளோம்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பஸ் கட்டணத்தை அதிகரிக்க முடியாது என்று கூறியுள்ளது. ஆனால் நாங்களே பஸ்களின் உரிமையாளர்கள். பாதிப்பு எங்களுக்கே தெரியும். இது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடி தீர்மானங்களை எடுப்போம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *