வளைகுடா நாடுகள் மீது இடைவிடாது தாக்கும் ஈரான்; கொத்துக்குண்டுகளினால் அழிவுகள் அதிகரிப்பு; இஸ்ரேல், அமெரிக்க தளங்கள் ,எரிசக்தி உள்கட்டமைப்பே இலக்கு

மத்திய கிழக்கில் இடம்பெறும் போர் நாளுக்கு நாள் தீவிரமடையத் தொடங்கியிருக்கும் அதேவேளை, நேற்று முன்தினம் அதிகாலையில் சவுதி அரேபியா மற்றும் குவைத்தை நோக்கி ஈரான் ஏவிய ட்ரோன்கள், ஒட்டுமொத்த உலகையுமே அதிர வைத்த நிலையில், ஈரான் நேற்று வளைகுடா நாடுகள் மீது மீண்டும் கடும் தாக்குதலை தொடுத்துள்ளது
மத்திய கிழக்கில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் 20 அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் இராணுவம் தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி வரும் அதேவேளை,இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் இராணுவம் அடுக்கடுக்காக கொத்து குண்டுகளை வீசி வருகிறது.சுமார் 8 கி.மீ. பரப்பளவுக்கு இந்த கொத்து குண்டுகள் சிதறி விழுந்து வெடிப்பதனால் அழிவுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன .
இதேவேளை, ஈரானுக்கு ஆதரவாக லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படை இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைகளை ஏவி வருகிறது. இதற்கு பதிலடியாக வான், தரைவழியாக லெபனான் மீது இஸ்ரேல் இராணுவம் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் லெபனான் முழுவதும் 339 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேலின் ராணுவ தலைமையகமான டெல் அவிவ் மற்றும் முக்கிய ராணுவ தளங்கள், பல்வேறு நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. வான் வழி தாக்குதலை முறியடிக்க இஸ்ரேல் ராணுவம் சார்பில் அயர்ன் டோம் மற்றும் சி டோம் பாதுகாப்பு கவச அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
ஆனால் கடந்த சில நாட்களாக இஸ்ரேலை குறிவைத்து ஈரான் இராணுவம், தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகளை வீசி வருகிறது. ஈரானின் ஏவுகணை சுமார் 23,000 அடி உயரத்தில் வெடித்து 20 சிறிய குண்டுகளாக பிரிகிறது. இந்த கொத்து குண்டுகள் சுமார் 8 கி.மீ. பரப்பளவு வரை சிதறி விழுகின்றன. இவற்றை நடுவானில் இடைமறித்து அழிப்பது கடினமாக உள்ளது. இதனால் பல நகரங்களில் பெரும் சேதம் ஏற்பட்டு வருகிறது.
டெல் அவிவ் நகரில் மட்டும் 350-க்கும் மேற்பட்ட பொது பதுங்கு குழிகள் உள்ளன. டெல் அவிவ், ஹைபா உள்ளிட்ட நகரங்களில் பூமிக்கு அடியில் பிரம்மாண்ட மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. இதன்காரணமாக போர்க் காலங்களில் இஸ்ரேலில் உயிரிழப்பு குறைவாக உள்ளது.
அதேபோல்,ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள டுபாய் மற்றும் பஹ்ரைனில் நேற்று அதிகாலையில் ஏவுகணை தாக்குதலுக்கான சைரன்கள் ஒலித்த அதே நேரத்தில், சவுதி அரேபியாவின் எண்ணெய் வளம் மிக்க கிழக்குப் பகுதியில் இரண்டு ட்ரோன்களை அழித்ததாகவும், குவைத்தின் இராணுவம் ஆறு ஈரான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் கூறியது.
இதுகுறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஈரானில் இருந்து வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வான் பாதுகாப்பு தற்போது பதிலளித்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசுவதோடு மட்டுமல்லாமல், ஈரான் அந்நாடுகளின் எரிசக்தி உள்கட்டமைப்பையும் குறிவைத்து வருகிறது.
இதேவேளை,மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரான் தொடர் தாக்குதல் நடத்துவதால் அங்கு மிகவும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில்,இந்தப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இந்த நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவது இனி தங்களது நிகழ்ச்சி நிரலில் இல்லை எனவும், மேற்காசியாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தளங்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் தொடரும் எனவும் ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை,ஈரான் உடனான அமெரிக்கா, இஸ்ரேல் மோதலில் பிராந்தியம் முழுவதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், மத்திய கிழக்கு முழுவதும் விமானப் பயணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விமான பகுப்பாய்வு நிறுவனமான சிரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பெப்ரவரி 28 முதல் மார்ச் 9 வரை மத்திய கிழக்கு நாடுகளில் 40,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த காலகட்டத்தில் சுமார் 72,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் பிராந்தியத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இயக்க முதலில் திட்டமிடப்பட்டிருந்ததாக நிறுவனத்தின் தரவு காட்டுகிறது.
![]()