இலங்கை

45 நாட்களுக்கு கையிருப்பிலிருந்த எரிபொருட்கள் தீர்ந்து விட்டதா?; விலை அதிகரிப்பு தொடர்பில் நாமல் கேள்வி

நிலக்கரி மோசடியினால் ஏற்பட்ட நஷ்டத்தை மக்கள் மீது சுமத்தி அதனை ஈடுசெய்வதற்காகவே எரிபொருள் விலைகளை அவசரமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஶ்ரீலங்கா பொதுஜனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குற்றம்சாட்டியுள்ளார்

பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே குற்றம் சாட்டிய நாமல் ராஜபக்‌ஷ அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் 45 நாட்களுக்கு தேவையான எரிபொருள் இருக்கின்றது. இதனால் விலைகள் அதிகரிக்கப்படாது என்றும் இந்த விடயத்தில் குழப்பமடையத் தேவையில்லை என்றும் அண்மையில் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். ஆனால் இப்போது எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலையேற்றத்திற்கு அமையவே விலை அதிகரிப்பை செய்துள்ளதாக கூறுகின்றனர். இங்கு விலை அதிகரிக்கப்பட்டு 24 மணித்தியாலம்கூட ஆகவில்லை உலகச் சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ளது.

இந்த விடயத்தில் எங்களுக்கு சந்தேகங்கள் நிலவுகின்றன. 45 நாட்களுக்கு தேவையான எரிபொருள் இருக்கின்றன என்று அரசாங்கம் கூறுகின்றது என்றால் அவசரமாக எரிபொருள் விலைகளை ஏன் அதிகரிக்க வேண்டும்? நிலக்கரி மோசடியினால் ஏற்பட்ட நஷ்டத்தை மக்கள் மீது சுமத்தி அரசாங்கம் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

தற்போது ஏற்பட்டுள்ள சவால்களுக்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது தொடர்பில் அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும். இதற்காக நடுத்தர மற்றும் குறுகிய கால வேலைத்திட்டங்களை தயாரிக்க வேண்டும். ஆனால் அரசாங்கத்திற்கு இந்த விடயத்தில் முறையான வேலைத்திட்டங்கள் மற்றும் முன்னேற்பாடுகள் உள்ளனவா என்ற சந்தேகங்கள் எழுகின்றன. அரசாங்கம் சகல தரப்பினருடன் கலந்துரையாடி மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நிலைமைகளால் ஏற்படக்கூடிய சவால்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *