ஈரான் கடற்படைக் கப்பல்களுக்கு இலங்கை அழைப்பு விடுத்திருந்தது; அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு

இந்தியாவில் நடைபெற்ற கடற்படையினரின் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஈரான் கப்பல்கள் பெப்ரவரி 26ஆம் திகதியளவில் இலங்கையை கடந்து சென்ற போது, அவர்கள் அந்த பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் போது இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும், இதன்படி மார்ச் 9 – 13ஆம் ஆம் திகதியளவில் அந்த கப்பல்கள் இலங்கை வரவிருந்ததாகவும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், இலங்கைக்கு அருகில் தாக்குதலுக்கு இலக்கான ஈரான் கடற்படைக் கப்பல் மற்றும் இலங்கை துறைமுகத்தில் அனுமதி கோரியுள்ள இன்னுமொரு ஈரான் கப்பல் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அஅமைச்சர் இதனை கூறியுள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தப் பிரச்சினையில் நடுநிலை வகிக்கும் நாடாகவே நாங்கள் இருக்கின்றோம். யுத்தத்தில் ஒரு நாடு சம்பந்தப்படவில்லை. இந்நிலையில் சமுத்திரம் தொடர்பான சட்டங்கள் மற்றும் சர்வதேச சமவாயங்களின்படி நாங்கள் செயற்படுகின்றோம். இதற்கமைய எங்களால் மீட்கப்பட்ட 84 சடலங்கள் எங்களிடம் உள்ளன. ஈரான் அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் அவற்றை நாங்கள் அவர்களிடம் ஒப்படைக்கத் தயாராக இருக்கின்றோம்.
அத்துடன் தாக்குதலில் சிக்கிய 32 பேர் கடற்படையினரின் பொறுப்பிலும், வைத்தியசாலையிலும் உள்ளனர். அவர்கள் தொடர்பில் இதற்கு முன்னர் நடுநிலையான நாடுகள் பின்பற்றிய முறைமைகளை நாங்கள் பின்பற்றுவோம். அதேபோன்று இன்னுமொரு கப்பலில் இருந்த 206 பேர் அரசாங்கத்தின் பொறுப்பில் இருக்கின்றனர். இவர்கள் தொடர்பிலும் சட்டதிட்டங்கள் மற்றும் சர்வதேச சமவாயங்களுக்கமைய நாங்கள் செயற்படுவோம்.
இதேவேளை இவர்கள் எமது பொறுப்பில் இருக்கும் வரையில் அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தல் மற்றும் செலவுகளை அரசாங்கம் செய்யும். சர்வதேச சமவாயங்களுக்கு அமைய செயற்படுவோம்.
குறிப்பிட்ட கப்பல்கள் இந்தியாவில் நடைபெற்ற கடற்படையினரின் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பெப்ரவரி 26ஆம் திகதியளவில் எமது நாட்டை கடந்து சென்ற போது, அந்த பயணத்தை முடித்து நாடு திரும்பும் போது இங்கு நட்பு ரீதியான பயணத்தை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மார்ச் 9 – 13ஆம் ஆம் திகதியளவில் திரும்பும் போது இலங்கை வருவதற்கு அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். இதனை தவிர வேறு விடயங்கள் எதுவும் பதிவாகவில்லை.
அத்துடன் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ள கப்பல் தற்போது இலங்கை கடற்பரப்பில் இருந்து 9 கடல்மைல் தூரத்தில் இருக்கின்றது. அந்த கப்பலில் இயந்திரத்தில் கோளாறு உள்ளது. அதனை சீர் செய்த பின்னர் அது கடற்படையின் பொறுப்பில் எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட இடத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்,.
![]()