பலதும் பத்தும்

உக்கிரமடையும் போர்; லெபனானில் 7 இலட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் இடம்பெற்று வரும் உக்கிரமான போர் காரணமாக இதுவரை சுமார் 7 இலட்சம் பேர் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லெபனானின் சமூக விவகார அமைச்சர் ஹனீன் சையத் இது குறித்துத் தெரிவிக்கையில், இடம்பெயர்ந்த மக்களுக்காக அரசாங்கத்தினால் இதுவரை 560 தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் நிவாரண முகாம்கள் திறந்து விடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே போர் தீவிரமடைந்து வருவதால் இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஈரானின் முன்னாள் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பழிவாங்கும் நடவடிக்கையாக லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்தனர்.

இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் இராணுவம் லெபனான் மீது பாரிய வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளமையே பாரிய இடப்பெயர்வுக்குக் காரணமாகும். இஸ்ரேலின் தாக்குதல்களினால் லெபனானின் தெற்குப் பகுதி மற்றும் தலைநகர் பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காகத் திண்டாடி வருவதாக மனிதாபிமான அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *