முச்சந்தி

ஈரான் போரில் ரஷ்ய நிலைபாடு: தெஹ்ரானுக்கு மாஸ்கோவால் உதவ முடியாதா?….  ஐங்கரன் விக்கினேஸ்வரா

( ஈரானிய ஆட்சியை ஆதரிக்க உண்மையான விருப்பம் இருந்தாலும், அவ்வாறு செய்வதற்கு ரஷ்யாவிடம் மிகக் குறைந்த திறனே இருக்கிறது. மத்திய கிழக்கில் நீடித்த போர் அமெரிக்க ஆயுதக் கிடங்குகளைக் குறைக்கும். அதனால் உக்ரைனுக்குக் கிடைத்திருக்கும், குறிப்பாக முக்கியமான வான் பாதுகாப்பு ஏவுகணைகள் கண்டிப்பாக குறையும் என ரஷ்ய தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது)

வளைகுடா போரில் ரஷ்யாவின் தற்போதைய நிலைப்பாட்டை தீவிரமான ரஷ்ய இராணுவ ஆய்வாளர்களும் , அரசியல் விமர்சகர்களும் காரசாரமாக கண்டித்து வருகின்றனர். குறிப்பாக பனிப்போரின் பின்னர் அமெரிக்க அரசுடன் அமைதியான மென் போக்கையே தொடர்ந்து முன்னெடுத்து வருவதால் ஈரான் போரில் ரஷ்யாவின் கையலாகா நிலையை வெளிப்படுத்தி உள்ளது.

ஆனால் உக்ரைன் போரில் அமெரிக்கா தேவையற்ற நிலையில் கீவ் அரசுக்கு உதவுவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும் பல ஆண்டுகளாக சர்வதேச நாடுகளின் மீதான அமெரிக்க தாக்குதல்களை ரஷ்யா வெறுமனே மூன்றாந் தரப்பு நிலையில் தான் அவதானித்து வரும் நிலையில் இருந்தது, தற்போதும் இருக்கிறது.

மொஸ்கோ அரசிடம் பிரம்மாண்டமான அணு ஆயுத வளங்கள் இருந்தாலும், அவற்றை பாதுகாக்க வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டுள்ளது. எப்போதாவது ரஷ்யா தாக்கப்பட்டால் அதை சமாளிக்க ரஷ்யா தயாராக இருக்கிறதா என்பது சந்தேகமே.

மாஸ்கோ தலையிடுமா?

போர் நெருக்கடி ஏற்பட்டால் ரஷ்யா கைகொடுக்கும் என ஈரான் நம்பிக்கை வைத்து இருந்தது. ஆனால் ரஷ்ய-ஈரானிய உறவுகள் இந்த நேரத்தில் மிகவும் மோசமாக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மாஸ்கோ இப்போது ஈரானிய தரப்பில் தலையிடும் அளவுக்கு வலுவாக இல்லை என்பதை காட்டுகிறது. மேலும் என்னவென்றால், கிரெம்ளினுக்கு இஸ்ரேலுடன் முறைசாரா ஒப்பந்தம் ஒன்றும் உள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் மேற்கத்திய பொருளாதாரத் தடைகளைப் பின்பற்றி வருவது இல்லை. ரஷ்யாவுடன் பல வர்த்தக ஒப்பந்தங்களை இன்னும் தொடர்ந்து செய்து வருகிறது. அத்துடன் வரலாற்று ரீதியாக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது. அத்துடன் பல ரஷ்ய பெரும் பணக்கார நபர்களுக்கு (ஒலிகார்) டெல் அவிவ் ஒரு புகலிடமாக நீண்டகாலமாக மாறியுள்ளது.

ரஷ்யாவின் நடுநிலைமைக்கு இன்னொரு காரணம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின், ரஷ்ய-உக்ரைன் மோதல் குறித்த நடுநிலையான நிலைப்பாடும் காரணமாகும். உக்ரைன் போரை நிறுத்த பேச்சுவார்த்தை மேசையில் அதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அவரது முயற்சிகளும் ரஷ்ய அரசு டிரம்புடன் நெருங்கிய நட்பான தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. ஐரோப்பிய தலைவர்கள் உக்ரைன் போரை நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் மாஸ்கோ மாத்திரமன்றி டிரம்ப் அரசும் அதை விரும்பவில்லை என கூறப்படுகிறது.

அதேவேளை ஈரானிய ஆட்சியை ஆதரிக்க உண்மையான விருப்பம் இருந்தாலும், அவ்வாறு செய்வதற்கு ரஷ்யாவிடம் மிகக் குறைந்த திறனே இருக்கிறது. ஈரானுக்கு உதவக்கூடிய ஒரே வழி, நான்கு வருட உக்ரைன் போரில் அது உருவாக்கிய இராணுவ தொழில்நுட்ப அறிவு தான். ஆனால் இப்போது உதவினால் அது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான உறவுகளைப் பாதிக்கக்கூடும் என்று ரஷ்யா நினைக்கிறது.

எண்ணெய் – எரிவாயு விலை உயர்வு:

அமெரிக்க-இஸ்ரேல் நடவடிக்கை ஈரானுக்கு எதிராக இருப்பது உண்மையில் குறுகிய காலத்தில் ரஷ்யாவுக்கு நன்மை பயக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். போர் ஏற்கனவே எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளில் பாரிய உயர்வை ஏற்படுத்தியுள்ளது, அதாவது ரஷ்ய அரச பொருளாதாரத்திற்கு எரிசக்தி விற்பனையிலிருந்து அதிக வருவாய் கிடைக்கும். அதிக எரிசக்தி விலைகள், தற்போது உக்ரைனின் முக்கிய நிதியளிப்பாளரான ஐரோப்பிய ஒன்றியத்தின், நாட்டின் போர் முயற்சிக்கு நிதியளிக்கும் திறனையும் பாதிக்கும் என ரஷ்யா நம்புகிறது.

மேலும் மத்திய கிழக்கில் நீடித்த போர், அமெரிக்க ஆயுதக் கிடங்குகளைக் குறைக்கும். அவை இல்லையெனில் உக்ரைனுக்குக் கிடைத்திருக்கும், குறிப்பாக முக்கியமான வான் பாதுகாப்பு ஏவுகணைகள் கண்டிப்பாக குறையும் என்று ரஷ்ய தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கில் அமெரிக்கா சிக்கித் தவிப்பது, உக்ரைனுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளில் மாஸ்கோவுக்கு அதிக செல்வாக்கைப் பெற்றுத் தரும். அமெரிக்க உள்நாட்டிலும், ஈரானில் அழிவு மற்றும் குழப்பத்தின் காட்சிகளிலிருந்து புடின் மேலதிக பயனடைய வாய்ப்புள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இப்போது ஈரானியர்களுக்கு சுதந்திரமான மற்றும் வளமான நாட்டைக் கட்டியெழுப்ப உதவ முடியும் என்று நம்புகிறார்கள். ஆனால் அது சாத்தியமில்லை என்று ரஷ்யா கூறுகிறது. இறுதியில் இந்த போர் ஈராக், ஆப்கான் போரை போல் அமெரிக்கா தோல்வி அடையும் என ரஷ்யா நம்புகிறது,

மாஸ்கோ கவலை மட்டுமே :

ஈரான் மீதான தாக்குதல் மாஸ்கோவில் கவலைக்குரிய விஷயமாக இருந்தாலும், அது உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு உள்ளிட்ட தனது சொந்த புவிசார் அரசியல் மூலோபாயத்தின் நியாயத்தன்மையையே முதன்மையாக பார்க்கிறது. அமெரிக்க தலைமையிலான மேற்கத்திய நாடுகளை ஒரு கட்டுக்கடங்காத மற்றும் நம்பகத்தன்மையற்ற தலைமை என்ற கிரெம்ளினின் நீண்டகால பார்வையை மேலும் உறுதிப்படுத்துகிறது.

மேலும் ஈரானுக்கு எதிரான அமெரிக்க , இஸ்ரேல் கூட்டு படை தாக்குதலில் ரஷ்ய உதவியால் உருவாகிய அணு ஆராய்ச்சி மையம் பலத்த சேதம் அடைந்துள்ளது என ரஷ்ய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் அரசியல் நிலைபாடு:

1980களில் ஈரான் ரஷ்யாவின் முக்கிய கூட்டாளியாக இருந்தது. இந்த உறவுநிலை ஆதரவு வர்த்தக நட்பின் இலட்சியத் தன்மையான செயலாக ஈரானுக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள வர்த்தகம் செய்யப்பட்டது. அதுவே சோவியத் காலகட்ட சிக்கலான பொருளாதாரத்தைத் தக்கவைக்க உதவியது என்பதை மறுக்க முடியாது.

தற்போது ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களும், உச்சத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி படுகொலையும் மாஸ்கோவில் பாரிய அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையே. ஏனெனில் எதிர்காலத்தில் ரஷ்யாவுடன் போர் ஏற்படுவதற்கான சாத்தியக் குறிப்புகளை முக்கிய மேற்கத்திய அதிகாரிகள் வெளிப்படுத்தும் பொறுப்பற்ற அறிக்கைகளில் இருந்து, ரஷ்யா தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

2003இல் ஈரான் மீதான அமெரிக்கப் போர், 2011 இல் லிபியாவில் நடந்த சம்பவங்களில் ரஷ்யாவின் பங்கு உலகம் அறிந்ததே. இது குறித்து நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டது. அப்போது அமெரிக்க தன்னிச்சையாக இந்த நாடுகளை தாக்கிய போது மொஸ்கோ அரசு மௌனம் சாதித்தது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு இவை நினைவூட்டுவதுடன், அவரது அரசியல் கௌரவத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நேட்டோ தலைமையிலான இராணுவத் தலையீடு லிபிய தலைவர் முஅம்மர் கடாபியை ஆட்சியில் இருந்து அகற்றுவதில் இறுதியில் முடிந்தது.

லிபியா மீதான நேட்டோ தாக்குதலின் போது, அப்போதைய அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் வாக்கெடுப்பின் போது ரஷ்யா வாக்களிப்பதில் இருந்து விலகியிருக்க வேண்டுமென வலியுறுத்தினார். மேலும் இந்த விவகாரத்தில் ரஷ்யா தனது நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்கவில்லை. இதனால் அமெரிக்க தலையீட்டை ரஷ்யா ஒப்புக்கொண்டது என்று மேற்குலகால் கூறப்படுகிறது.

இறுதியில் அக்டோபர் 2011 இல், கடாபி கிளர்ச்சியாளர்களால் கொடூரமாக கொல்லப்பட்டார். அவரது மரணத்தின் வீடியோ உலகின் பல்வேறு பகுதிகளில் இணையத்தில் வைரலானது. அப்போது மேற்கத்திய தலைவர்களால் கொண்டாடப்பட்ட அவரது ஆட்சியின் முடிவு, லிபியாவுக்கு மக்களாட்சியையோ செழிப்பையோ இன்னும் கொண்டு வரவில்லை. மாறாக லிபிய நாட்டை உள்நாட்டுப் போரிலும் பிளவிலும் ஆழ்த்தியது.

இதன் பின்னர் மே 2012 இல் ரஷ்யா புட்டின் மீண்டும் தனது அதிபராக பதவியேற்றார். அதற்கு மாஸ்கோவில் பல போராட்டங்களை திட்டவட்டமாக ஒடுக்கியும் இருந்தார்.

2014இல் ரஷ்யாவின் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கையில் ஒரு திருப்புமுனையாக பல மாற்றங்கள் நிகழ்ந்தன. சில ஆண்டுகளுக்குள் உக்ரைனின் மைதான் புரட்சி கலவரத்தில் தலையிட வேண்டிய சூழல் ரஷ்யாவுக்கு ஏற்பட்டது.

ஈரானில் அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்:

இப்போது ஈரானில் தொடரும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, உக்ரைனில் தனது படைகளின் நடவடிக்கைகள் நியாயமானவை என்று புடின் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவில் ரஷ்யாவின் நெருங்கிய அண்டை நாட்டிற்கு எதிராக ஒரு போரில் தனது நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்துள்ளார். புடின் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலக ஒழுங்கில் தன்னை வலிமையானவராக இன்னும் கருதுகிறார்.

2007 இல் உக்ரைன் மற்றும் ஜோர்ஜியாவை நேட்டோவில்
உறுப்பினர்களை அனுமதிக்க முடிவு செய்தபோது, அவை எதிரி பிரதேசமாக ரஷ்யாவிற்கு மாறின. அதன் விளைவாக 2008 இல் ஜார்ஜியாவில் நடந்த குறுகிய கால மோதலின் போது ரஷ்யா தனது வெற்றிகரமான படை நடவடிக்கையை மேற்கொண்டது.

2014 இல் உக்ரைன் மீதான தாக்குதல்களும், பின்னர் 2022 இல் படையெடுப்பும் ரஷ்யாவை மேற்குலகுடன் முரண்பட வைத்துள்ளது. ஆனால் ஈராக், லிபியா மற்றும் சிரியாவில் அமெரிக்க தலைமையிலான படை நடத்திய தாக்குதல்களை ரஷ்யா உதட்டளவில் கண்டித்தாலும், அதனை எதிர்க்க முடியாத நிலையே இருந்தது. ஆனால் சிரியாவில் சிறிய அளவிலான எதிர் தாக்குதலை ரஷ்யா நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது ஈரான் எதிர்கொள்ளும் நெருக்கடியில் அமெரிக்க இராணுவத் தலையீட்டைத் தடுக்கும் விதமாக கிரெம்ளினால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை உலக அரங்கில் விமர்சிக்கப்படுகிறது.

உக்ரைனை மோதலின் தீர்க்கமான போர்க்கள வெற்றியாக மாற்றுவது, போரின் எந்தவொரு உறுதியான தாக்கத்திலிருந்தும் பெரும்பான்மையான ரஷ்ய மக்களைப் பாதுகாக்க கிரெம்ளின் முயற்சி செய்துள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடந்த பத்தாண்டு கடினமான உறவுகளைக் கருத்தில் கொண்டு, ரஷ்ய-உக்ரைன் மோதலின் களத்தில் பாரிய தாக்கம் உள்ளது.
இது ரஷ்ய சமூகத்திற்கு தவிர்க்க முடியாத வெற்றி என்று புட்டின் தலைமையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஈரானிய ஆட்சியை ஆதரிக்க உண்மையான விருப்பம் இருந்தாலும், அவ்வாறு செய்வதற்கு ரஷ்யாவிடம் மிகக் குறைந்த திறனே இருக்கிறது. எனவே ஈரான் போரில் ரஷ்ய நிலைபாடு என்பது தெஹ்ரானுக்கு மாஸ்கோவால் உதவ முடியாத நிலை என்பதே உண்மை ஆகும்.

ஆனாலும் மத்திய கிழக்கில் நீடித்த போர் அமெரிக்க ஆயுதக் கிடங்குகளைக் குறைக்கும். அதனால் உக்ரைனுக்குக் கிடைத்திருக்கும், குறிப்பாக முக்கியமான வான் பாதுகாப்பு ஏவுகணைகள் கண்டிப்பாக குறையும் என ரஷ்ய தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *