ஈரான் கப்பலை இஸ்ரேலுக்கு இந்தியாவே காட்டிக் கொடுத்தது; விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

ஈரான் கடற்படைக் கப்பல் தொடர்பில் இஸ்ரேலுக்கு தகவல்களை வழங்கி காட்டிக்கொடுக்கும் வேலையை இந்தியா செய்தது மட்டுமன்றி இலங்கையையும் சிக்கலுக்குள் தள்ளியுள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
வழக்கு நடவடிக்கையொன்றுக்காக கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு சென்றிருந்த போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டிய விமல் வீரவன்ச மேலும் தெரிவிகையில்,
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள இந்திய இராணுவ பிரதானி, இந்திய கடல்பரப்பில் ஈரான் கப்பல்கள் பயணிக்கும் வரையில் பாதுகாப்பை வழங்கியிருந்தோம். ஆனால் சர்வதேச கடல் எல்லைக்குள் சென்ற பின்னர், இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான உபாயமார்க்க உடன்படிக்கைக்கு அமைய அவர்கள் அந்த கப்பல் இருக்கும் தொடர்பான தகவல்களை இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.
தமது நிகழ்வுக்கு வருமாறு அழைப்பு விடுத்துவிட்டு, அவர்கள் அதில் கலந்துகொண்டு திரும்பிச் சென்ற போது, அவர்களின் எதிரிக்கு அவர்கள் போகும் பாதை தொடர்பில் தகவல்களை வழங்குகின்றனர். இவ்வாறான கீழ்த்தரமான நிலைமையை நாடொன்றால் செய்ய முடியுமா?
இலங்கை – இந்தியா இடையில் பாதுகாப்பு உடன்படிக்கைகள் உள்ளன. அவற்றில் என்ன இருக்கின்றன என்று தெரியாது. ஜனாதிபதிக்கு அது தெரியுமாக இருக்கலாம். இந்தியாவின் செயற்பாட்டால் இலங்கையே சிக்கிக்கொண்டது. இந்தியா இலங்கையின் நண்பன் என்று கூறினாலும் அந்த இந்தியாவே இலங்கைக்கு இவ்வாறு செய்துள்ளது. இவ்வாறு காட்டிக்கொடுக்கும் நிலைமையில் இந்தியா இருக்கின்றது என்றார்.
![]()