உலகம்

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா தலைமையில் இஸ்ரேல் மீது பாயும் ஏவுகணைகள் குவைத்துக்குள் நுழைந்த ட்ரோன்கள்

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் தலைமையின் கீழ் இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான ஏவுகணைத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ள நிலையில் மத்திய கிழக்கில் போர் பதற்றம் மீண்டும் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை ஒன்றில் “உங்கள் சேவையில், செய்யித் மொஜ்தபா (At Your Service, Sayyid Mojtaba)” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட புகைப்படத்தை ஈரான் வெளியிட்டுள்ளது டன் அமெரிக்காவும் இஸ்ரேலும் தம் மீது தாக்குதல் தொடுக்கும்வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என ஈரான் அறிவித்துள்ளது.

இதேவேளை,ஈரானின் புதிய தலைமை தனது அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில் இஸ்ரேல் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதனை அந்நாட்டு அரச ஒளிபரப்பு நிறுவனமான ஐ.ஆர்.ஐ.பி. உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை,ஈரான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் பஹ்ரைன் உட்பட பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை,பாரசீக வளைகுடா பகுதியில்பல நாடுகளின் மீது நடத்தப்பட்ட பாரிய வான்வழித்தாக்குதல்களால் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

பஹ்ரைனின் சித்ரா பகுதியில் ஈரான் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 32 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இவ்வாறு காயமடைந்தவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதோடு அதில் அறுவை சிகிச்சை தேவைப்படும் சிறுவர்களும் அடங்குவர் என பஹ்ரைன் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எரிசக்தி உள்கட்டமைப்புக்கு அருகிலுள்ள பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.இப்பகுதியில் நிலவி வரும் இராணுவ மோதல்களுக்கு மத்தியில், பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, அபுதாபியிலும் நேற்றுக் காலை பல சத்தமான வெடிப்புகள் பதிவாகியுள்ளதுடன்,போர் தொடங்கியதிலிருந்து கேட்ட மிக அதிக சத்தம் இது என்று வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

நேற்றுக்காலை பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைந்த ட்ரோன்களை குவைத் தேசிய பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.நாட்டின் முக்கியமான இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகள் மீதும், அங்குள்ள அமெரிக்க படைகள் மற்றும் ராணுவ நிலைகள் மீதும் ஈரானின் தாக்குதல் தீவிரமடைந்துவரும் நிலையில்,சவுதியிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று, தனது தூதரக அதிகாரிகளுக்கு அமெரிக்கா அவசர அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, இப்படியான அறிவிப்பு வெளியாவது இதுவே முதல் முறையாகும்.

கடந்தமாதம் 28 ஆம் திகதியன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்திய பிறகு, அமெரிக்க அரசின் இத்தகைய கட்டாய வெளியேற்ற நடவடிக்கை அறிவிக்கப்படுவது இதுவே முதன்முறை. இங்குள்ள அமெரிக்க ஊழியர்களுக்கு முன்பு விருப்பத்தின் பேரில் வெளியேறலாம் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால், இப்போது இது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ரியாத்தில் உள்ள தூதரகம் முக்கிய பணியாளர்களுடன் செயல்படும் என்றும், இது தற்காலிக நடவடிக்கை என்றும் செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தினார்.

இதேவேளை, ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்க கூட்டுப் படைகள் ஒரு வாரத்துக்கும் மேலாக தொடா் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இதுவரை 1,230 பேர் ஈரானில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனானில் 397 பேரும், இஸ்ரேலில் 11 பேரும், அமெரிக்கர்கள் 7 பேரும் போர் தொடங்கிய பிறகு பலியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.லெபனானில், கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் வாழ்விடங்களிலிருந்து குடிபெயர்ந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக் கூடும் என கூறப்படுகிறது.

இஸ்ரேலில் தெற்கு லெபனானின் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது. இவர்கள் தற்போது பள்ளிகள், திறந்தவெளிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.இந்த போரைத் தாண்டியும் மனிதாபிமான உதவிகளும் பொருளாதார பாதிப்புகளும்தான் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்க – இஸ்ரேல் படைகள் கூட்டாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரானும் ஏவுகணைகள் மூலமும், ட்ரோன்கள் மூலம் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில், வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவத்துக்குச் சொந்தமான ரேடாா்கள், வான் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்டவை பலத்த சேதமடைந்துள்ளன.

மறுபக்கம், அமெரிக்க ரேடாா்கள், வான் பாதுகாப்பு அமைப்பு குறித்து செயற்கைக்கோள் மூலம் திரட்டப்படும் தகவலை ஈரானுக்கு ரஷியாதான் வழங்கி வருவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *