குருதிக்குள் கிடக்கும் சங்கதிகள்… சிறுகதைத் தொடர் – 13 …. சொடலை …. மீனாசுந்தர்

மார்கழிப் பனியின் சிலும்பல் வெண்புகை மண்டலமாய் அப்பிக் கிடந்தது. உதறலெடுக்கும் அதிகாலை நடுக்கத்தைச் செம்பாதியாய்க் கிழித்தவாறு சொடலையின் குரல் தெருவெங்கும் அலையலையாய்ப் பரவியோடிற்று. பாப்பாத்திக்குச் சொடலை ஒரே மகன். சிறுவயதிலேயே தந்தையை இழந்துவிட்ட அவனை உலகத்தின் மகா செல்லமாய் நினைத்து வளர்த்து வந்தாள் அவள். ஏனெனில், அவளுக்கென்று வாழ்க்கையில் இருக்கும் ஒரே பற்றுக்கொடி இப்போதைக்குச் சொடலை மட்டும்தான்.
இருள் விலகாத அவ்வதிகாலையி்ல் பாப்பாத்தி அவனிடம் சொல்லிக்கொள்ளாமல் எங்கோ சென்று விட்டிருந்தாள். உடலலுப்பிலும் அசதியிலும் அயர்ந்து உறங்கிய சொடலை எழுந்ததும் தாயைக் காணாமல் தவித்தான். அவளிடம் இரண்டு வாய் பழைய குருணைக் கஞ்சியை வாங்கிக் குடித்துவிட்டுப் சென்றால்தான் வேலைத்தலைமாட்டில் வயிறு எரியாமலிருக்கும் சொடலைக்கு. மீண்டுமொரு முறை, முன்னைவிடச் சப்தம் கூட்டித் தாயை அழைத்துப் பார்த்தான்.
“ய்யேஏஏஏ… யாத்தோஓஓ… ய்ய்ஏஏ… யாத்தோஓஓ…?”
அவன் கத்தியவாறே தெருமுனைக்கு ஓட எத்தனிப்பதற்குள் பாப்பாத்தியின் பதில் குரல் கேட்டது. காலையிலேயே அப்படிக் கத்துவது அவளுக்குக் கடும் எரிச்சலைத் தந்தாலும் சகித்துக்கொண்டு மென்மையாகவே கேட்டாள்.
“ஏஞ் சொடலை…. காலங்காத்தால ஏன்ய்யா இப்புடி தொண்டை கிழியறாப்பல கத்துறே…? நான் எங்கய்யா போயிடப் போறேன்? ஆத்தங்கரத் தோப்புல இலுப்பைப் பூ கொட்டுதுன்னு நேத்தி செல்லாச்சி சொன்னிச்சி. அதான்ம் பொறுக்கிக்கிட்டு வரலாம்ன்னு ஒரு நடை பொயிட்டு வர்றேன்.“
சுக்கத்திலிருந்த சிறிய மூங்கில் கூடையைக் கீழே இறக்கி வைத்தாள். இடுப்பு கொசுவத்தை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்ட பாப்பாத்தி, “அடுப்பாங்கரயில மண்ஞ்சட்டியிலதான் பழையகஞ்சி மூடியிருக்கும்ன்னு ஒனக்குத் தெரியாதா? ஊத்திக் குடிச்சிட்டுப் போவ வேண்டியதுதான? எதுக்குக் காத்தாலயே இந்தக் கூப்பாடு? இவ்ளோ தாமதிச்சி வேலக்கிப் போனா ஐயா திட்டுவாருன்னு தெரியாதா?”
அவன் அவளது வார்த்தைகளைக் கவனம் கொடுத்துக் கேட்காமல் முத்து முத்தாய் கிடந்த இலுப்பைப் பூக்களையள்ளி, அதன் வாசனையை நுகர்ந்தான். இனிப்பும் புளிப்பும் கலந்த அப்படியொரு மணம். ருசியின் புதிய மணம். ஒரு பூவையெடுத்து வாயில் போட்டு ருசித்துப் பார்த்தான். பூவின் சாறு நாக்கில் ஒட்டிக்கொண்டு சுவைத்தது. அதில் லயித்துக் கிடந்தவன் அடுத்தப் பூவை எடுக்க கூடைக்குள் கையை நீட்டினான்.

“ஏங்கண்ணு நேரமாகுதுய்யா… கஞ்சி குடிச்சிட்டு வெரசா போவப் பாரு.. பொறுக்கிக்கிட்டு வந்த இலுப்பப் பூவு ஓடியாப் போவப் போவுது? சாயிந்திரம் வந்து நோட்டம் பார்க்கலாம்” என்றாள் பாப்பாத்தி. அவன் கவனம் கொள்ளாமல் விளையாட்டுப் பிள்ளையாகவே இருந்ததால் பாப்பாத்திக்கு சினம் உச்சியில் ஏறி நின்றது.
பாப்பாத்தி நறுக்கென்று தலையில் ஒரு குட்டு வைத்தாள். சொடலை கஞ்சியைக் கரைத்து மடக்…மடக் கெனக் குடித்தான். தொட்டுக்கொள்ள இரவு வைத்த வயல்நத்தைக் குழம்பு வாசனையோடு இருந்தது. அதிலொன்றை எடுத்து வாயில் போட்டுக்கொண்டான். கொழுத்திருந்த கறியைச் சப்பு கொட்டி மென்றான். பாப்பாத்தி அவன் சாப்பிடும் அழகை வைத்தகண் வாங்காமல் சிறிதுநேரம் ரசித்துக்கொண்டிருந்தாள். கஞ்சியைக் குடித்து முடித்த சொடலை, கொடியில் கிடந்த கட்டம் போட்ட சிவப்புத் துண்டையெடுத்து தோளில் போட்டுக்கொண்டு பண்ணையார் வீட்டை நோக்கி ஓடத் தொடங்கினான்.
…………………………
“எலே சொடலை… பக்கத்து வீட்டு பரமசிவம் கொல்லையில காளை மாடுக ரெண்டும் உள்ளே நொழஞ்சிடுச்சாமில்ல.?. காலங்காத்தாலே வந்து காட்டுக் கத்தா சுத்திட்டுப் போறான்.. நிய்யி என்னடா மயிறு வேல பாக்குற? மாட்டைக் கொண்டு விட்டுட்டு சுத்தப் போய்டுறியாமே…? ஆளு வந்து சொல்லிச்சி… ஒழுங்கா வேலையப் பாரு. இல்லன்னா தோலை உரிச்சி உப்பு போட்டுருவேன்…. படவா!”
பண்ணையார் ஜெகதீஸ்வரலிங்கம் விழிகளில் கனல் தெறித்தது. வார்த்தைகளைக் கொட்ட, கொட்ட பத்து வயது சொடலைக்குக் கை, கால்கள் உதறல் எடுத்தன.
“இல்லீங்கய்யா… நா..ன்.. வ..ந்..து…” எதையோ சொல்ல முற்பட்டுத் தடுமாறினான்.
“நிய்யி காரணம் மயிறு சொல்ல வேண்டாம். இனிமே ஒழுங்காப் பாத்துக்கோ. என்னைய பாத்தாலே பத்தடிக்கு முன்ன சகலத்தையும் பொத்துற பயலுகள்ட்ட இனிமே அவமானப்பட முடியாது. அவ்வளவுதான் சொல்லுவேன். நீ ரொம்ப சின்னப்பய.. எம்புத்தி ஒனக்குத் தெரியாது. குணம் திரும்பினிச்சின்னா மசிரே போச்சின்னு பொலி போட்டுருவன் ஆமா!”
சொடலைக்கு வெடவெடப்பில் வியர்த்துக் கொட்டிற்று. துண்டைச் சுருட்டி இடுப்பில் வைத்துக்கொண்டு அவன் நின்ற பாங்கே பரிதாபமாய் இருந்தது.
“இன்னிக்கி காளை மாடுக ரெண்டையும் ஓட்ட வேண்டாம்… அதுங்களுக்கு தீனி வச்சி தண்ணிய காட்டிட்டு மத்ததுங்கள ஒட்டிட்டுப் போ” ஜெகதீஸ்வரலிங்கத்தின் கட்டளைக்கு இயந்திரம்போல் இயங்கினான் சொடலை.
பத்து நிமிடத்தில் காளை மாடுகளுக்குத் தீனி வைத்து முடித்தான். வைக்கோல் போரிலிருந்து இரண்டு கொடங்கை வைக்கோலைப் பிடுங்கி வந்து கவணை நிறைய திணித்தான். மற்ற மாடுகளை அவிழ்த்துக்கொண்டு, கூரையில் செருகியிருந்த தார்க்குச்சியை எடுத்துக்கொண்டு தோப்பை நோக்கி ஓட்டத் தொடங்கினான். வெயில் அதிகமாக இருந்ததால் கையிலிருந்த சிவப்புத்துண்டை தலையில் போட்டுக்கொண்டான். மாடுகளைப் பசித்தீ படுத்தியெடுக்க புற்களைத் தேடி கால்களை றெக்கையாக்கியிருந்தன. மாடுகளோடு மாடாய் அவனும் ஓடினான்.
…………………………
சூரியன் மேற்கில் சன்னமாய்ப் புதைந்திருந்தான், பறவைகள் தத்தம் கூடுகள் நோக்கி பறக்கத் தொடங்கியிருந்தன. வெளியில் வரலாமாவென நிலா யோசித்துக் கொண்டிருந்த நேரம், சொடலை வெயிலில் வதங்கி சோர்ந்து போனவனாய், மாடுகளை விரட்டிக்கொண்டு பண்ணைக்குத் திரும்பினான். மாடுகளின் வயிறு நன்கு புடைத்து இருந்ததால் சுறுசுறுப்பாய் நடந்தன. ஆனால், சொடலையின் வயிறோ வற்றிப்போய் பசியின் போர்க்களமாய் சத்தமெழுப்பிக் கொண்டிருந்தது.
பண்ணைக்குள் மாடுகள் புகும்போது முழுதாய் இருட்டி விட்டிருந்தது. மாடுகள் தொட்டிக்குச் சென்று தண்ணீரை உறிஞ்சின. ஒவ்வொன்றையும் பிடித்துக் கவணையில் கொண்டு கட்டினான். இரவுத் தீனிக்கு வைக்கோலைப் பிடுங்கி வைத்தான். பசி ரொம்பவும் அரற்றியதால் அடி பைப்பில் தண்ணீரை அடித்துக் குடித்துவிட்டு, பண்ணையார் வீட்டுக்கு எதிரே வந்து கூலிக்காக நின்றான்.
ஜெகதீஸ்வரலிங்கம் இன்னும் வந்தபாடில்லை. எங்கே போயிருக்கிறார் என்பதும் தெரியவில்லை. யாரிடமும் விவரம் கேட்கவும் முடியாது. சொடலை அப்படியே ஓரமாயிருந்த வேப்பமரத்தில் சாய்ந்து கொண்டான். அலுப்பின் அடையாளமாய் வந்த கொட்டாவியை வெளியேற்றிவிட்டு நின்றவனுக்குக் கண்கள் உள்வாங்கி இழுத்தன. தன்னையுமறியாமல் விழிகள் லேசாய் அயர்ந்தன.
“ஐயா, விட்டுருங்கய்யா…. ஐயா விட்டுருங்கய்யா.”
கெஞ்சி இறைஞ்சும் குரல், ஆபத்தில் பரிதவிக்கும் பெண்ணின் குரல். தவிப்பும், நடுக்கமும் கலந்த குரலின் தொனி. வார்த்தைகளில் இறைஞ்சுமொலி தொடர்ந்து கொண்டேயிருந்ததில் சொடலை சடக்கென விழித்துக்கொண்டான். நெஞ்சு படக்..படக்கென தாளம் போட்டது. அவனுக்குத் துணையாய்க் கூடவே குந்தியிருந்த இருள் பயமுறுத்திற்று.
இது கனவில்லையென்று உறுதி செய்து கொண்டான். இன்னும் கெஞ்சல் தொடர்ந்து கொண்டேயிருப்பது மெல்லிய குரலில் காற்று வாக்கில் கரைந்து வந்து கொண்டேயிருந்தது. சொடலைக்கு என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. எங்கிருந்து குரல் கேட்கிறதென்றும் விளங்கவில்லை.
சொடலைக்குப் பேரச்சம் உடலெங்கும் பரவி நின்றது. நேரம் வேறு கூடிக்கொண்டே போனது. கும்மிருட்டுக்குள் போகவே பயமாய் இருந்தது. அன்று வெள்ளிக்கிழமை வேறு. குளத்தங்கரை ஐயனார்கோவில் குதிரை நடுராத்திரியில் மணியடித்துக்கொண்டு ஓடுகிறதென்று தெருவில் பலரும் பேசிக்கொண்டிருந்தது ஞாபகத்தில் எழ, சொடலைக்கு மேலும் பதட்டம் நெஞ்சுக்குள் ஏறி மிதித்தது. யாராவது வீட்டுப்பக்கம் போனால் அவர்களுடன் கூலி வாங்காமல் கூட வீட்டிற்கு ஓடிவிடலாம் போலிருந்தது.

இன்னுமந்த இறைஞ்சும் குரல் நிற்கவில்லை. இந்தமுறை சொடலை காதுகளை நன்கு கூர்மையாக்கி உற்றுக் கேட்டான். குரல் இப்போது கொஞ்சம் தெளிவாய்க் கேட்டது. வடக்குக் கோடியிலுள்ள மாட்டுக்கொட்டகை அருகிலிருந்து வருவதுமாதிரி தெரிந்தது.
என்ன சப்தமாய் இருக்கும்? கொல்லிவாய் பிசாசு ஏதும் புகுந்து விட்டதா? நினைக்கும்போதே உடம்பு ஒருமுறை அச்சத்தில் குலுங்கி அடங்கிற்று. ஐயாவை வேறு காணவில்லை. ஐயாவுக்கு ஏதும் கெடுதல் நிகழ்ந்து விட்டதா? ஆனால் பெண் குரலல்லவா கதறுவதுபோலக் கேட்கிறது?! சொடலை மனதைத் திடப்படுத்திக்கொண்டு அருகில் சென்று பார்த்து விடுவதென முடிவெடுத்தான். காற்றுக்கும் கேட்காமல் பூனையாய் நடைபோட்டு முன்னேறினான். இருட்டுக்குள் பார்த்துப் பார்த்து நகர்ந்தான். மாட்டுக்கொட்டகை ஓரமாய் ஒதுங்கி நின்று, மெல்ல தலையை நீட்டி எட்டிப் பார்த்தவன், மின்சாரத்தை மிதித்தவன் போலத் துடித்து அதிர்ந்தான்.
ஜெசுதீஸ்வரலிங்கம் வேலைக்காரி பவுனாத்தாவை அதிகார மிடுக்கோடு துரத்திக் கொண்டிருந்தார். சொடலைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. திக்…திக்..கென நிமிடங்கள் நகர்ந்தன. வியர்வையில் உடம்பு நசநசத்தது.
பவுனாத்தாவின் சேலை உருவப்பட்டு மூலையில் பாவமாய்க் கிடந்தது. பாவாடையோடும், ஜாக்கெட்டோடும் பவுனாத்தா, கைகள் இரண்டையும் குறுக்காக கட்டிக்கொண்டு மார்புகளை மறைத்தவாறு, கண்ணீர் மல்க ஜெகதீஸ்வரலிங்கத்தைக் கெஞ்சிக் கொண்டிருந்தாள். அவர் எதையும் சட்டை செய்யும் நிலையில்லை. கண்களும் உடலும் உச்சகட்ட காமத்தில் றெக்கை கட்டி மிதந்தன.
‘ய்யேஏய்… பவுனாத்தா என்னய ரொம்பவும் நிய்யி வெறுப்பேத்திறடி.. என்கிட்டப் படுக்க எத்தனையோ பேரழகிக வரிசையில நிக்கிறாளுங்க. ஈனச்சிறுக்கி மொவளே.. நிய்யி ரொம்ப சோதிக்கிற? வாடி.. ஒன்னய என்னா கடிச்சா திங்கப் போறேன்.? கொஞ்ச நேரம்… இன்னக்கி மட்டும்… ஒனக்கு என்ன வேணும்னாலும் வாங்கித் தாரேன்!’
ஜெகதீஸ்வரலிங்கம் பவுனாத்தாவின் காலைப் பிடிக்காத குறைதான். காம இச்சையில் அவர் ரொம்பவும் இறங்கிப் போய்ப் பேசிக்கொண்டிருந்தார். பவுனாத்தா எதற்கும் மசியவில்லை. மீண்டும் மீண்டும் கைகளைக் கூப்பிக் கெஞ்சினாள்.
“ஐயா… ஒங்க அந்தஸ்த்துக்கு வேண்டாம்ய்யா நான்? நீங்க ஆசப்பட்டா உங்க சாதியிலயும், கொலத்திலயுமே அழகழகா ஆயிரம் பேரு இருக்காங்க.. கேவலமான இந்த ஒடம்புக்கு ஆசப்பட்டு, ஒங்க கௌரவத்தையும் மரியாதையையும் விட்டுட வேண்டாம்ய்யா…”
“ச்சீ… இங்க பேசற பேச்சாடி இது? சாதியென்னடி, சாதி? எந்தச் சாதிக்காரியா இருந்தாலும் இருக்குறதுதான்டி இருக்கப் போவுது? ஆனா.. ஒன் ஒடம்பு இருக்கே.. அது ஒரு தனி ரகம்ன்டி. ச்சேச்சே… உன்னைப் படைச்ச பிரம்மன் பயல புடிச்சி ஒதைச்சா தேவலாம் போலருக்கு.’
மனசாட்சியே இல்லாமல் பேசியவாறே பவுனாத்தாவை நெருங்கிப் போக பவுனாத்தா மீண்டும் விலகி ஓடினாள். சட்டென அவளைத் தாவி அணைக்க, பவுனாத்தா அங்கிருந்த மூங்கில் தட்டியைத் தள்ளிக்கொண்டு வெளியே ஓட…, இருட்டுக்குள் தொடர்ந்து ஓடினார் ஜெகதீஸ்வரலிங்கம்.
ஒரு கணத்தில், இடி இறங்கியதுமாதிரி ஜெகதீஸ்வரலிங்கம் அலறினார். சொடலை இரும்புக் கம்பியோடு அவ்விடத்தில் நின்றுகொண்டிருந்தான். சொடலைக்கு உள்ளூர அட்டைப்புழுவாய்ப் பயம் சுருண்டு கொண்டது. இனி இங்கு நிற்கிற ஒவ்வொரு நிமிடமும் ஆபத்தென ஆழ்மனது சொல்ல, கண்களை இறுக மூடிக்கொண்டு வீட்டை நோக்கி மின்னலாய் ஓடத் தொடங்கினான் சொடலை.
பயத்தில் தடுமாறி தடுமாறி ஓடும் வழியெங்கும் விழுத்தான். கைகள் உராய்ந்து இரத்தம் வருமிடங்களில் எச்சிலை தொட்டு வைத்துக்கொண்டு மீண்டும் ஓடினான். வீடு வந்து சேர்ந்தபோது சிம்னி விளக்கு மெலிதாய் எரிந்து கொண்டிருந்தது. ஓடி வந்ததில் மூச்சு ஏறியேறி இறங்கிற்று. நடுக்கத்தோடு தன் தாயை அழைத்தான்.
“யாத்தாஆஆ… யாத்தாஆஆ…”
………………..
“ய்யேஏ… யாத்தாஆஆஆ… ய்யேஏ… யாத்தோஓஓ…”
பதில் குரல் இல்லை. சொடலைக்கு முன்னை விடப் பயம் அதிகரித்துக்கொண்டே சென்றது. சாத்தியிருந்த மூங்கில் தட்டியைத் தள்ளியபடி மெல்ல குடிசைக்குள்ளே போனான். படுத்திருந்த பாப்பாத்தியிடமிருந்து முனகல் சப்தம் கேட்டது கூர்ந்தது பார்த்தான். பாப்பாத்தி மயக்க நிலையில் நிதானமின்றிக் கிடந்தாள்.
“சொ….ட…லை… சொட..ட..லை” முனகிக் கொண்டேயிருக்க,
“யாத்தா… என்ன பண்ணுது ஆத்தா ? சொல்லாத்தா சொல்லு?
சொடலை சொல்வதைக் கேட்குமளவில் அவளில்லை.
“சொடலை.. ஒன்… ஒன்.. அப்பா?” திக்கி திக்கிப் பேசினாள்.
“ஆத்தாஆஆ… அப்பா… சொல்லாத்தா சொல்லு? யாருன்னு அடிக்கடி கேட்பேன்ல்ல?”
சொடலை தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான். பாப்பாத்தி சொடலையின் கண்களைத் தடவியபடி மேலேயிருந்த பழைய தகரப் பெட்டியைக் காட்டினாள். திடீரென வாயில் நுரை தள்ளிக்கொண்டு பொங்கிற்று.
“ஆத்தா.. ஆத்தா….”

சொடலை பைத்தியம்போல அரற்றினான். கதறினான். பாப்பாத்திக்குக் கையும் காலும் வெட்டிவெட்டி இழுத்தது. தாயின் முகத்தைத் தடவியவாறே அள்ளியள்ளி முத்தமிட்டான். சற்று நேரத்திற்குள் நுரைதள்ளிய வாய் அடங்கி தலை துவண்டது. அந்நேரத்தில் சரியாகப் தகரப்பெட்டி கீழே விழுந்து திறந்து கொள்ள, மேலும் அதிர்ந்தான் சொடலை.
ஜெகதீஸ்வரலிங்கம் புகைப்படத்தில் வெட்கமின்றி புன்னகைத்துக் கொண்டிருந்தார்.
“ஐயோ.. ஆத்தா… இவனா…?”
வெடித்து வந்த அழுகையோடு தனது கைகளில் ஒட்டியிருந்த ஜெகதீஸ்வரலிங்கத்தின் ரத்தத் தெறிப்புகளைப் பார்த்தான். பாப்பாத்தியின் தலையைத் தூக்கி தனது மடியில் வைத்துக்கொண்டு அவன் தேம்பிக்கொண்டே அம்மாவிற்குத் திடீரென என்ன நடந்தது என யோசித்த நொடியில், அவனுக்கும் தெரியாமல் அவளின் தலையணையின் அடியிலிருந்து மெல்ல மெல்ல ஊர்ந்து சென்று சுவற்றிலுள்ள வலைக்குள் புகுந்து கொண்டது ஒரு நாகம்.
![]()