இலங்கை

கொக்கல விமானப் படை முகாமில் 22 ஈரான் படையினர்;  போர்க் கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்கள் 

அமெரிக்க நீர்மூழ்சிக் கப்பலின் தாக்குதலு இலக்கான ஈரான் போர்க் கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 22 பேர் குணமடைந்த நிலையில், காலி மாவட்டத்திலுள்ள கொக்கல விமானப்படை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 10 பேர் கராபிட்டிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

காலி துறைமுகத்தில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த போது கடந்த மார்ச் 4ஆம் திகதி ”ஐஆர்ஐஸ் டெனா” என்ற ஈரானின் போர்க் கப்பல் மீது அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் கப்பல் நீரில் மூழ்கியது.

இதன்போது இலங்கைக் கடற்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கடல் பகுதியில் காயங்களுடன் தத்தளித்துக்கொண்டிருந்த 32 பேர் மீட்கப்பட்டு காலி கராபிட்டிய வைத்தியசாலைலயில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 22 பேர் குணமடைந்த நிலையில் தற்போது கொக்கல விமானப் படை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அந்தக் கப்பலில் பயணித்த மேலும் 84 ஈரானியர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதுடன், அந்த சடலங்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ‘மிலன் 2026’ கூட்டுப் பயிற்சியில் பங்கேற்று நாடு திரும்பிக்கொண்டிருந்த மூன்று ஈரான் கப்பல்களில் ஒன்றே இவ்வாறு அமெரிக்காவின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

இதேவேளை குறித்த கப்பல் மீதான தாக்குதலின் பின்னர் ‘ஐஆர்ஐஸ் புஷேர் என்ற போர்க்கப்பல், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாணந்துறைக்கு அப்பால் கடல்பகுதியில் இலங்கை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி கோரிய நிலையில் கடந்த 5ஆம் திகதி இரவு அந்தப் கப்பலின் ஊழியர்கள் உட்பட 204 பேர் இலங்கை கடற்படையினரால் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு, வெலிசர கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் அத்துடன் அந்தக், கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதேவேளை இன்னுமொரு கப்பலுக்கு இந்தியாவின் துறைமுகமொன்றில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *