மஹிந்த தலைமையில் கூடிய ‘மொட்டு’வின் அரசியல் குழு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.
பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.
இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் சிரேஷ்ட பேராசிரியர் வணக்கத்துக்குரிய உதுராவல தம்மரதன தேரர், கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் குழு உறுப்பினர்கள் எனப் பலரும் இதில் பங்கேற்றனர்.
எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைகள், கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன,
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் நாடு தழுவிய ரீதியில் கட்சியை மறுசீரமைக்கும் பாரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவித்தார்.
இதற்கமைய கட்சியின் உயர்மட்டப் பதவிகளான சிரேஷ்ட உபதலைவர்கள், உபதலைவர்கள் மற்றும் பிரதிச் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க செயற்குழு ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. அடிமட்டத்திலுள்ள கிளைச் சங்கங்களை பலப்படுத்தி, புதிய உறுப்பினர்களை உள்வாங்குவதன் ஊடாக கட்சியை மீண்டும் ஒரு பலமிக்க அரசியல் சக்தியாக மாற்ற தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த லக்ஷ்மன் யாப்பா, தற்போது மக்கள் மத்தியில் நாமல் ராஜபக்ஷ மீது பாரிய எதிர்பார்ப்பும் வரவேற்பும் காணப்படுவதாகத் தெரிவித்தார். எவ்வாறிருப்பினும், கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் குறித்த உத்தியோகபூர்வ தீர்மானம் உரிய நேரத்தில் எடுக்கப்படும் என்றும், அடுத்த ஜனாதிபதி தமது கட்சியிலிருந்தே தெரிவு செய்யப்படுவார் என்பது உறுதி என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

![]()