வட,கிழக்கில் உயிருக்கு அச்சுறுத்தலான சட்டம்; இப்போது குறிவைக்கப்படுகின்றனர்; கஜேந்திரகுமார் எம்.பி.

டித்வா சூறாவளியை காட்டி அவசரகால சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இந்த சட்டத்தை பயன்படுத்தி தெற்கில் ஜனநாயக செயற்பாடுகளை தடுப்பதற்கு முயற்சிக்கப்பட்டாலும் வடக்கு, கிழக்கில் இது உயிர்களுடன் தொடர்புடைய பெரும் அச்சுறுத்தலான சட்டமாக இருக்கலாம் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசரகால சட்டம் நீடிப்பு தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது கஜேந்திரகுமார் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,
அவசரகால சட்ட நீடிப்பு தொடர்பில் நாங்கள் வாக்கெடுப்பை கோரி அதற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளோம். அவசரகால சட்ட நீடிப்பு என்பது அவசியமற்ற விடயமாகும். இப்போது அவசரமாக விடயங்களை அனுகுவதற்கான எந்தத் தேவையும் கிடையாது. அனர்த்த நேரங்களில் இது தேவைப்பட்டது. ஆனால் இப்போது பல மாதங்களின் பின்னர் அந்த சூறாவளியை காட்டி அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு கூறும் நியாயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவையே.
இப்போது அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு காரணமானது ஜனநாயக ரீதியில் மக்கள் அல்லது அரச உத்தியோகத்தர்கள் தடுப்பதற்கே ஆகும். எத்தனையோ மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சூறாவளியை காட்டி அவசரகால சட்டத்தை நீடிக்க முயற்சி செய்கின்றீர்கள். தெற்கில் வாழும் சிங்கள மக்கள் மாற்றமொன்றை எதிர்பார்த்து தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தனர். இவ்வாறு எதிர்பார்ப்பில் வாக்களித்த மக்களுக்கு வயிற்றில் அடிக்கும் செயற்பாட்டில் ஒன்றே இது.
இதேவேளை அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு இன்னுமொரு காரணம் உள்ளது. போர் காலம் முழுவதும் அவசரகால சட்டம் இருந்த நிலையிலேயே அநியாயமாக பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். எவ்வித பொறுப்புக்கூறலும் இன்றி அதனை செய்தனர். இப்போதும் அதே இராணுவமே வடக்கு, கிழக்கில் உள்ளன. எந்தவொரு இராணுவ சிப்பாய்க்கு எதிராகவும் பொறுப்புக்கூறல் விடயத்தில் நடவடிக்கை எடுக்காத வகையில் தொடர்ச்சியாக அவர்களை பாதுகாத்துக்கொண்டிருக்கும் பின்னணியிலேயே இப்போது அவசரகால சட்டம் நீடிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு மறுசீரமைப்பு எதுவும் நடக்காத சூழலில் அவசரகால சட்டம் நீடிப்பதால் வடக்கு, கிழக்கு மக்கள் குறிவைக்கப்படும் அபாய நிலையில் இருக்கின்றனர். அல்லைப்பிட்டி சம்பவம் உள்ளிட்ட விடயத்தை இதில் குறிப்பிடலாம். ஏன் இது நடக்கின்றது. இதுவொரு கலாச்சாரமாகியுள்ளது. முப்படையும், பொலிஸாரும் எதனையும் செய்யலாம். தாம் பாதுகாப்பை பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கலாம். தெற்கில் ஜனநாயகத்தை மறுக்க வேண்டும். அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று செய்தாலும் வடக்கு, கிழக்கில் இது உயிர் சம்பந்தமான பிரச்சினையே. இதனால் இந்த சட்டம் நீடிக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கின்றோம் என்றார்.
![]()