இலங்கை

திருகோணமலை செல்லும் ஈரான் போர்க் கப்பல்;  இலங்கையின் பாதுகாப்பில் 200 ஈரானிய கடற்படையினர்!; ஜனாதிபதி அநுரவின் நடவடிக்கையால் பேராபத்து தணிந்தது 

இலங்கை கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டிருந்த ஈரானுக்கு சொந்தமான ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேஹர் போர்க்கப்பல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எடுத்த நடவடிக்கையை தொடர்ந்து கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டு, தரித்து நிற்பதற்காக திருகோணமலை துறைமுகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள அதே நேரம் அதிலிருந்த 200 க்கும் மேற்பட்ட ஈரான் கடற்படையினருக்கு அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளது.

200 க்கும் மேற்பட்ட ஈரான் பணியாளர்களுடன் வியாழக்கிழமை பாணந்துறை கடல் பகுதியில் இலங்கை கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டிருந்த மேற்படி கப்பல் இலங்கைக்குள் வருவதற்கு அரசிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில்,வியாழக்கிழமை மாலை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தேசிய பாதுகாப்பு சபையை அவசரமாக கூட்டியிருந்தார்.

இதன்போது இலங்கையின் கடல் எல்லையில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், காலி துறைமுகத்தில் இருந்து 19 கடல் மைல் தொலைவில் தாக்குதலுக்கு உள்ளான ஈரான் போர் கப்பல் தொடர்பிலும் பாணந்துறை கடல் எல்லையில் 200 க்கும் மேற்பட்ட ஈரான் கடற்படையினருடன் நங்கூரமிட்டிருந்த அதேவேளை, இலங்கைக்குள் நுழைவதற்கு அனுமதி கேட்டிருந்த ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேஹர் போர்க்கப்பல் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இந்த கூட்டத்தில் அனைத்து பக்க விடயங்களும் ஆராயப்பட்ட அதேவேளை, நடுநிலைமையைப் பாதுகாக்கும் அதேவேளை, மனிதநேயத்திற்கு முதலிடம் வழங்கும் வகையில், குறித்த கப்பலை கொழும்புக்கு கொண்டுவருவது என ஜனாதிபதியால் முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்டது.

அவசரமாக அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, கப்பலில் உள்ள பணியாளர்கள் மனிதாபிமான அடிப்படையில் தரையிறக்கப்படுவார்கள் என்றும், கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்தார்.

ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேஹர் என்ற ஈரானியக் கப்பலின் பணியாளர்கள் முதலில் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் பாதுகாப்புடன் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று ஜனாதிபதி கூறினார். கப்பலில் உள்ள 208 பணியாளர்களையும் பாதுகாப்பாக கொழும்புக்கு அழைத்து வருவதற்கு இலங்கை கடற்படை ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

அவர்களுக்கு முதலில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். உணவு உள்ளிட்ட அவர்களின் அத்தியாவசியத் தேவைகளை அரசாங்கம் கவனித்துக்கொள்ளும். ஈரானியக் கப்பலில் 300 சிறுவர்கள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை மறுத்த ஜனாதிபதி, அந்தத் தகவல் முற்றிலும் பொய்யானது என்று வலியுறுத்தினார்.

இதற்கமைய அந்த கப்பலிலிருந்த 208 பேர் கடந்த வியாழக்கிழமை இரவு இலங்கை கடற்படையினரால் கொழும்பு துறைமுகத்துக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் 53 அதிகாரிகளும் 84 கெடேட் அதிகாரிகளும் 48 சிரேஸ்ட கடற்படையினரும் 23 கடற்படையினரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் வெலிசறையிலுள்ள கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார். ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேஹர் போர்க் கப்பல் திருகோணமலை துறைமுகத்துக்கு தரித்து நிற்பதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையால், பெப்ரவரி 15 – 25 ஆம் திகதி வரை விசாகபட்டினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச கடற்படை கண்காட்சியில் பங்கேற்று மீண்டும் நாடு திரும்பிக் கொண்டிருந்த ஈரானிய கடற்படை கப்பலான ஐரிஸ் டேனா என்ற போர்க்கப்பல் இந்து சமுத்திர பிராந்தியத்தில் கடந்த 4 ஆம் திகதி அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது.இந்நிலையிலேயே பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேஹர் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருவதற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சிடம் அனுமதி கோரியிருந்தது.

இதேவேளை, தாக்குதலுக்குள்ளான ஐரிஸ் டேனா கப்பலிலிருந்த 90 பேரது சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனைகள் வியாழக்கிழமை காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *