அமெரிக்கா தாக்கும் வரை தெரியாமல் போனது ஏன்?; பாரிய பிரச்சினை என்கிறார் சஜித்

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று நமது நாட்டின் தனித்துவ பொருளாதார வலயத்திற்குள் நுழைந்து ஈரான் கடற்படைக் கப்பல் மீது டொர்பிடோ தாக்குதல் நடத்தி அது அழிக்கப்படும் வரை, தேசிய பாதுகாப்பு உயர் மட்டத்தில் இருப்பதாகக் கூறும் இந்த அரசாங்கத்திற்கு அது தெரியாமல் இருந்தது ஒரு பாரிய பிரச்சினை என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2026.02.28ஆம் திகதிய 2477/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிமூலம் ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்ட அவசரகாலநிலை தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த
அவர் மேலும் பேசுகையில்,
தேசிய பாதுகாப்புச் சபையைக் கூட்டி, நாட்டின் பாதுகாப்பு உச்சக்கட்டத்தில் இருப்பதாக அரசாங்கம் கூறினாலும், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று நமது நாட்டின் தனித்துவ பொருளாதார வலயத்திற்குள் நுழைந்திருப்பதை அரசாங்கம் அறிந்திருக்கவில்லை.
அதேபோன்று, ஈரான் கடற்படைக் கப்பல் மீது டொர்பிடோ தாக்குதல் நடத்தப்பட்டு அது அழிக்கப்படும் வரை, தேசிய பாதுகாப்பு உயர் மட்டத்தில் இருப்பதாகக் கூறும் இந்த அரசாங்கத்திற்கு அது தெரியாமல் இருந்தது ஒரு பாரிய பிரச்சினை .
இவ்வாறான நீர்மூழ்கிக் கப்பல்கள் எமது கடல் பிராந்தியத்தில் நடமாடும் போது, அவற்றைக் கண்டறிவதற்குத் தேவையான தொழில்நுட்பம் நம்மிடம் இல்லையா ?அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி தேசிய பாதுகாப்பு உச்சகட்டமாக இருப்பதாகக் கூறும் அரசாங்கம், இந்தச் சம்பவங்கள் குறித்துக் கூட சரியான விளக்கத்தை அளிக்கவில்லை. இதன் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு நேர்ந்துள்ள நிலைமையை சிந்தித்துப் பார்க்க முடியும்.
இரண்டாவது ஈரான் கடற்படைக் கப்பலில் இருந்த 208 பேரைக் காப்பாற்றுவதற்கு முன்னர், முதலாவது ஈரான் கடற்படைக் கப்பலில் இருந்த 130 பேர் எமது நாட்டின் தனித்துவ பொருளாதார வலயத்தில் உயிரிழந்துள்ளனர்.
மேலும் எமது நாட்டு தூதரகங்கள் ஊடாக தனித்துவ பொருளாதார வலயத்தை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள இராஜதந்திர நடவடிக்கைகள் குறித்து அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தடைப்படும் என எதிர்க்கட்சிகள் எச்சரித்தபோது, அவ்வாறான சிக்கல் எதுவும் இல்லை என வெளிநாட்டு அமைச்சரால் கூறப்பட்டது. இருப்பினும், தற்போது அந்த நீரிணை மூடப்பட்டுள்ளதால், எண்ணெய் கொள்வனவு செய்வதில் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளன.
அத்துடன் தற்போதைய சூழ்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு இந்தியாவுக்கு அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைகளில் 30 நாட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, எமது நாட்டிலிருந்தும் பிரதிநிதிகள் குழுவை இந்தியா மற்றும் ரஷ்யாவிற்கு அனுப்பி, நாட்டுக்குத் தேவையான எரிபொருளை முறையாகப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால், எண்ணெய் கொண்டு வருவதற்கு பல வாரங்கள் தாமதமாகும் . இதனால் எரிபொருள் விலை அதிகரிக்கும். தற்போது எண்ணெய்க்கான யுத்த மேலதிக கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதால், எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் மட்டுமன்றி மருந்து மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும்.
ஆனால் இந்த நிலைமைக்கு அரசாங்கம் வழங்கும் தீர்வுகள் தெளிவற்றதாக உள்ளன. இது சுற்றுலாத்துறைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதுடன், ‘சிலோன் டீ’ வர்த்தக நாமத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இது குறித்து ஆராயப்பட வேண்டும்.
சர்வதேச கடல்சார் சட்டம் உள்ளிட்ட பல உடன்படிக்கைகள் மற்றும் சட்டதிட்டங்கள் இராஜதந்திர ரீதியாக காணப்படுகின்றன. இவை குறித்து பேசப்பட வேண்டும். எமது நாட்டின் தனித்துவ பொருளாதார வலயத்திலுள்ள கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் . ஆனால் அரசாங்கம் இதற்கு எதிராக ஒரு வார்த்தையேனும் பேசவில்லை.
இங்கு வந்த நீர்மூழ்கிக் கப்பல் குறித்தேனும் அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும். அரசாங்கத்திற்கு இது குறித்து எவ்வித அறிவும் இல்லை.தேசிய பாதுகாப்பு குறித்து தம்மால் ‘டியூஷன்’ எடுக்க முடியும் என்று கூறிய அரசாங்கத்திற்கு, இன்று தேசிய பாதுகாப்பைக் கூட உறுதிப்படுத்திக் கொள்ள முடியாமல் போயுள்ளது என்றார்.
![]()