உலகம்

மத்திய கிழக்கில் 7-வது நாளாக போர்; ட்ரம்பை கொல்ல முன் வாருங்கள்; ஈரான் மதகுரு அழைப்பு 

மத்திய கிழக்கு நாடுகளில் 7-வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொல்ல வேண்டும் என ஈரான் மதகுரு ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பெப்ரவரி 28-ம் திகதி ஈரான் மீது வான்வழி தாக்குதலை தொடங்கின. இதில், ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உட்பட சுமார் 50 உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைத்தலங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றன.

இந்தப் போர் வெள்ளிக்கிழமை(6) ஏழாவது நாளை எட்டியது. வெள்ளி அதிகாலையில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் குண்டு துளைக்காத புகலிடங்களில் தஞ்சமடைந்தனர். இதுவரை ஈரானில் 1,230 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சூழலில், ஈரானின் மூத்த ஷியா மதகுருக்களில் ஒருவரான அயத்துல்லா அப்துல்லா ஜவாதி அமோலி ஈரானிய அரசு தொலைக்காட்சியில் பேசும்போது,

“நாம் இப்போது ஒரு பெரிய சோதனையின் விளிம்பில் இருக்கிறோம். இந்த ஒற்றுமையை நாம் முழுமையாகப் பாதுகாக்க வேண்டும். யூதர்களின் (இஸ்ரேலியர்கள்) ரத்தம் சிந்தப்பட வேண்டும், ட்ரம்பின் ரத்தம் சிந்தப்பட வேண்டும்.அடக்குமுறை செய்யும் அமெரிக்காவை எதிர்த்துப் போராடுங்கள், அவனது (ட்ரம்பின்) ரத்தம் என் தோள்களில் உள்ளது என காலத்தின் இமாம் கூறுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

ஷியா இஸ்லாமிய மதகுருமார்களில் ‘அயத்துல்லா’ என்பது மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றாகும். ஈரானில் இத்தகைய மூத்த மதகுருக்கள் பலர் உள்ளனர். அவர்களின் மத மற்றும் அரசியல் ரீதியிலான கருத்துகள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.எனவே, இந்த அறிக்கை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அமெரிக்க செனட் ஒப்புதல்; இதற்கிடையே ஈரானுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களை நிறுத்துவதற்கான தீர்மானம் அமெரிக்க செனட்டில் தோற்கடிக்கப்பட்டது (53-47 வாக்குகள்). இதன் மூலம் தாக்குதலைத் தொடர ஜனாதிபதி ட்ரம்புக்கு அதிகாரம் கிடைத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *