இலங்கை

பாணந்துறை கடற்பரப்பிற்கு அருகில் நிற்கும் ஈரான் கப்பலை அனுமதித்தால் கொழும்பில் விமானத் தாக்குதல்

கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி கோரும் ஈரானிய கப்பலை துறைமுகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்றும், அவ்வாறு அனுமதித்தால் வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் என்று இலங்கை அரசாங்கத்திற்கும் துறைமுக அதிகாரிகளுக்கும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தமக்கு தகல்கள் கிடைத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணி தலைமைமயகத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடுமையான யுத்த நிலைமைக்கு மத்திய கிழக்கு நாடுகள் முகம்கொடுத்து வருகின்றன. இப்போது இலங்கைக்கு அருகிலும் சம்பவம் நடந்துள்ளது. ஊடகங்களில், ஈரானின் ஒரு கப்பல் தொடர்பில் மட்டுமே கதைக்கப்படுகின்றது. இந்திய கடற்படை கண்காட்சிக்கு ஈரானில் இருந்து மூன்று கப்பல்கள் வந்துள்ளன. அவற்றில் ஒன்று தொடர்பான பிரச்சினையே நேற்று(புதன்) தெரியவந்தது. அடுத்தது எங்குள்ளது என்று தெரியாது. இன்னுமொன்று பாணந்துறை கடலுக்கு அருகில் எமது கடல் எல்லைக்கு அருகில் இருக்கின்றது. ஆழ்கடலுக்கு அருகில் அது இல்லை. இதனால் நீர்மூழ்கிக் கப்பலில் வந்து தாக்குதல் நடத்த முடியாது. அந்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருவதற்கு ஈரான் தூதரகம் ஊடாக அனுமதி கோருகின்றனர். இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் எனக்கு கிடைத்துள்ள தகவல்களுக்கமைய, ஈரானின் எதிரி தரப்பு தூதரகம் ஊடாக கொழும்பு துறைமுக அதிகாரிகளுக்கும் அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கும், ஈரானின் கப்பலை துறைமுகத்திற்கு கொண்டுவர வேண்டாம் என்றும் அவ்வாறு கொண்டு வந்தால் விமானத் தாக்குதலை நடத்துவோம் என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.

ஈரான் என்பது எமது யுத்த காலத்தில் ஆயுதங்களை வழங்கியவர்கள். பெறுமதி பேசாமல் கேட்ட தொகையை கொண்டுவந்து கொடுத்தவர்களே அவர்கள். மத்திய கிழக்கில் எமது தேயிலையில் அதிகளவான பங்கை ஈரானே பெற்றுக்கொள்கின்றது. எமது அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றுக்கு நிதி உதவிகளும் வழங்கியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் அவர்கள் பிரச்சினைக்குள் சிக்கிக்கொண்டு துறைமுகத்திற்குள் வருவதற்கு அனுமதி கேட்கும் போது, ஈரானுக்கு எதிரான அமெரிக்க தூதரக அதிகாரிகள் அந்தக் கப்பலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவர வேண்டாம், அவ்வாறு கொண்டு வந்தால் தாக்குதல் நடத்துவோம் என்று கூறியுள்ளனர்.

ஜனாதிபதிக்கு தீர்மானம் எடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை. அமெரிக்காவுடனான ஒப்பந்தம் தொடர்பில் எங்களுக்கு எதுவும் தெரியாது. சோபா உடன்படிக்கை மங்கள சமரவீர காலத்தில் பக்கங்கள் அதிகரிக்கப்பட்டது. இந்த அரசாங்கம் மேலும் உடன்படிக்கைகளை செய்தது. இதில் அமெரிக்காவுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரியவில்லை.

இந்தியாவின் அழைப்பில் வந்து சென்ற மூன்று கப்பல்களில் ஒரு கப்பல் அழிக்கப்பட்டுள்ளது. இன்னுமொன்றை காணவில்லை. எஞ்சிய ஒன்றே இங்கு துறைமுகத்திற்குள் வர அனுமதி கேட்கின்றது. இந்த நேரத்தில் யுத்த நடவடிக்கைகளுக்காக அது வரவில்லை. இங்கு வந்து சர்வதேச கடலுக்கு சென்ற பின்னர் என்ன வேண்டுமென்றாலும் செய்யுங்கள் என்று ஜனாதிபதி கூறலாம். இப்போது அவர்கள் கேட்பது மனிதாபிமான நடவடிக்கையே. அதற்கான முதுகெலும்பு இல்லையென்றால் நாங்கள் ஒரு தரப்பினருக்கு சார்பானவர்களாக மாறிவிடுவோம்.

இலங்கையின் அணிசேராக் கொள்கையை (Non-aligned foreign policy) ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும் .வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியாமல் ஜனாதிபதி செயற்பட வேண்டும் .ஏன் நாங்கள் தெரியாமல் எவருடைய எதிரியாக வேண்டும் என்று கேட்கின்றேன். நாங்கள் நிலையான தீர்மானம் எடுக்காவிட்டால் ஏதேனும் தரப்பினரின் இரையாக நாங்கள் மாற நேரிடலாம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *