இலங்கை

சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்; விமல் வீரவன்ச குற்றச்சாட்டு 

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின் நீதி அமைச்சராக கடமை ஆற்றி வருகின்றார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். இரத்தினபுரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபோதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தற்போது நீதி அமைச்சராக பதவி வகிக்கும் ஹர்ஷண நாணயக்கார அன்று மட்டக்களப்பு சென்று சஹ்ரான் வழக்கில் முன்னிலையானதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் பாதுகாப்பிற்காக குறிப்பிடத்தக்களவு சேவையாற்றிய மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே போன்ற புலனாய்வு பிரிவு பிரதானிகளை கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்துகின்றனர்.எனினும் சஹ்ரான் போன்ற குற்றவாளிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இன்று அமைச்சர் பதவி வகிப்பது நகைப்பிற்குரியது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் ஊடாக விடுதலை புலிகளின் புலம்பெயர் சமூகம் மகிழ்ச்சி அடையும்.

நாட்டின் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு பலவீனமடையும்.படை வீரர் என்ற சொல்லை பயன்படுத்துவதற்கே இந்த அரசாங்கம் தயங்குகின்றது.

சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்களை அரசாங்கம் உதாசீனம் செய்கின்றது.அரசாங்கம் கலாச்சாரங்களை பேணுவதற்கு நாட்டம் காட்டவில்லை.தற்போதுள்ள அரசாங்கம் பொருளாதாரத்தை கையாள்வதில் தோல்வி அடைந்துள்ளது.

கள்வர்களை கைது செய்வதாக கூறி ஆட்சி பீடம் ஏறிய இந்த அரசாங்கம் பட்டப் பகலில் கொள்ளைகளில் ஈடுபடுகிறது.குறிப்பாக நிலக்கரி இறக்குமதியில், தரம் குறைந்த மருந்து பொருள் இறக்குமதியில் அரிசி கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்வதில் போன்ற பல்வேறு விடயங்களில் ஊழல் மோசடிகள் இடம் பெற்றுள்ளது.மக்களை துன்புறுத்தும் வகையில் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது .

கொள்கைகளை காட்டிக் கொடுக்காத,நாட்டின் கலாசாரத்தையும் இன உரிமைகளையும் அறிந்த புதிய தலைமை ஒன்று தற்பொழுது நாட்டுக்கு அவசியமாகின்றது எனவும் தெரிவித்தார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *