ஈரானிய கடற்படைக் கப்பல் மூழ்க தாக்குதலா, விபத்தா, காரணம்?; தெரியாது என்கிறது இலங்கை கடற்படை

மத்திய கிழக்கில் தொடரும் யுத்த நிலைமைக்கு மத்தியில் இலங்கை கடற்பரப்புக்கு அருகே விபத்துக்கு உள்ளாகி மூழ்கிய ஈரானிய கடற்படை கப்பலில் இருந்து 33 பேர் இலங்கை கடற்படையினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த பலரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு தெற்கே காலியில் இருந்து 40 கடல் மைல் தொலைவிலேயே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், ஈரானிய கடற்படை கப்பலான ”ஐஆர்ஐஎஸ் டெனா” என்ற கப்பலே விபத்துக்கு உள்ளாகியுள்ளது என்றும், நீர்மூழ்கித் தாக்குதலுக்கு இந்த கப்பல் இலக்காகியுள்ளது என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கப்பலில் ஈரானிய கடற்படையினர் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர் என்றும், அவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், நீர்மூழ்கி தாக்குதல்தான் இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்ற சர்வதேச செய்திகளை தாம் நிராகரிப்பதாகவும், முதலில் கப்பல் விபத்து தொடர்பில் அவரச உதவி கோரி தகவல் கிடைத்தமையினால் சரியாக ஆராயாமல் இது எவ்வகையான விபத்து என்பதனை கூற முடியாது என்றும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் இலங்கை கடற்படை பேச்சாளரான கொமான்டர் புத்திக சம்பத் கூறுகையில்,
இலங்கைக்கு அருகே எமது கடல் எல்லைக்கு அப்பால் விபத்துக்கு உள்ளாகியிருந்த கப்பலில் இருந்த 33 பேர் எமது கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த கப்பலில் இருந்த ஏனையவர்களை தேடி கப்பல் விபத்துக்கு உள்ளான பகுதில் கடற்படை, விமானப்படை மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களம் என்பன சர்வதேச சட்டங்களுக்கமைய தேவையான மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.
அதிகாலை வேளையில் கடல்சார் மீட்பு மத்திய நிலையத்திற்கு கப்பல் விபத்து தொடர்பில் கிடைத்த தகவலுக்கமைய மீட்பு நடவடிக்கைகளை கடற்படையினர் ஆரம்பித்திருந்தனர். அங்கு விசேட குழுக்கள் விசேட உபகரணங்களுடன் சென்றிருந்தனர். அங்கு கடல் பகுதியில் இருந்தவர்களை மீட்க முடிந்தது. அவர்கள் ஈரானிய கப்பலுக்கு சொந்தமான ஊழியர்கள் என்று தெரியவந்தது. அவர்களுக்கு அவசரமாக சிகிச்சை வழங்க வேண்டிய தேவையிருந்தது. இதன்படி அவர்களை காலி கராபிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டனர். இவ்வாறாக 33 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அங்கு காணாமல் போனவர்களை தேடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது சடலங்கள் பல அங்கு காணப்படும் நிலையில் அவர்கள் அந்த கப்பலில் இருந்தவர்கள் என்று நம்பப்படுகின்றது.
இலங்கை கடல் எல்லைக்கு அப்பால் இலங்கையால் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடக்கூடிய பகுதியிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் தேவையான மனிதாபிமான மீட்பு நடவடிக்கையில் ஈடுபட கடமைப்பட்டுள்ளோம். தொடர்ந்தும் இதுவரையான தகவல்களின்படி அங்கு மீட்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
கப்பலில் இருந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பில் உயிர் தப்பித்தவர்கள் வழங்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே சரியாக கூற முடியும். மீட்புக் குழுவினர் அங்கு செல்லும் போது கப்பலை காண முடியவில்லை. அங்கு உயிர்காப்பு உபகரணங்களுடன் இருந்தவர்களே மீட்கப்பட்டுள்ளனர். பல சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கப்பலில் எத்தனை பேர் இருந்தனர் என்பது தொடர்பான தகவல்கள், மீட்கப்பட்டுள்ள சடலங்களின் எண்ணிக்கை தொடர்பில் சரியான தகவல் இன்னும் கிடைக்கவில்லை. இது தொடர்பில் பின்னர் கூறுகின்றோம்.
இதேவேளை எவ்வாறான விபத்து என்பன தொடர்பில் ஆராய்தே கூற முடியும். தாக்குதலில் இந்த கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை நாங்கள் நிராகரிக்கின்றோம். சரியாக ஆராயாமல் இது தொடர்பில் எங்களால் கூற முடியாது. தொழில்நுட்ப ரீதியில் ஆராய வேண்டும். முதலில் விபத்து நிலைமை தொடர்பான தகவல்கள் கிடைத்தமையினால் இதனை விபத்தாகவே பார்க்கின்றோம். ஆனால் இது எந்த வகையிலான விபத்து என்று ஆராய்ந்தே கூற முடியும் என்றார்.
![]()