முச்சந்தி

ஈரானின் தலைமைத்துவ வீழ்ச்சி: மத்திய கிழக்கு அதிகார சமநிலையில் மாற்றம்?…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

தொடர்ந்து விடாமல் தாக்கும் இஸ்ரேலின் அதிரடியால் ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சரும் கொல்லப்பட்டுள்ளார். அவர் பதவியேற்ற இரு நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு முழுவதும் போர் தீவிரமடைந்துள்ளது. வளைகுடாப் பகுதியில் சமீப ஆண்டுகளில் இதுவே மிகக் கடுமையான மோதலாக கருதப்படுகிறது.
ஈரானின் உயர்மட்ட தலைவர்கள் கொலை:
அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் மற்றும் ஈரான் இடையே நேரடி மோதல் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா ஈரானின் அரசாங்க மற்றும் ராணுவ இலக்குகளை தாக்கியுள்ளன. இதற்கு பதிலடியாக, ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதால், இந்த மோதல் ஒரு பிராந்தியப் போராக மாறி உள்ளது.
கடந்த சனிக்கிழமை தொடங்கிய இந்தப் போரில் ஈரானில் இதுவரை 1100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை 176 குழந்தைகள் உட்பட 1100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 900-க்கும் அதிகமான பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
இதனிடையே ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்சாதே கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, புதிய பாதுகாப்பு அமைச்சர் சையத் மஜித் எப் அல்-ரேசா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், புதிய அமைச்சரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சனிக்கிழமை நடந்த தாக்குதல்களில் நசீர்சாதே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் இருவரும் கொல்லப்பட்ட நிலையில் தற்போது ஈரானின் புதிய அமைச்சரும் கொல்லப்பட்ட சம்பவம் ஈரானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க தாக்குதல் ஏன் ?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘ஒபரேஷன் எபிக் ஃப்யூரி’ (Operation Epic Fury) என பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை, ஈரானின் அணு மற்றும் ஏவுகணை திட்டங்களால் உருவாகும் உடனடி அச்சுறுத்தல்களை தடுக்கவே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
ஈரானுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததற்குக் காரணம், அணு எரிபொருள் செறிவூட்டுவது தங்களின் “மாற்ற முடியாத உரிமை” என்று ஈரான் வலியுறுத்தியதே என தெரிவித்தனர். ஈரான் சுமார் 60% செறிவூட்டப்பட்ட 460 கிலோ கிராம் யூரேனியத்தை வைத்திருப்பதாகவும், அதனை பயன்படுத்தி சுமார் 11 அணு குண்டுகள் உருவாக்க முடியும் என்றும் அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டிவ் விட்கோவ் (Steve Witkoff) தெரிவித்துள்ளார். இதற்கு பதிலாக, தங்களின் அணு நடவடிக்கைகள் முழுவதும் அமைதியானவை என ஈரான் மறுத்தது. மேலும் சர்வதேச நிலைப்பாட்டை ஈரான் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதேவேளை அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் இஸ்ரேல் மீது, வளைகுடா பகுதிகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது, ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால், முழு மத்திய கிழக்கு பகுதியில் பெரிய அளவிலான போர் அச்சம் எழுந்துள்ளது.
இந்த மோதல் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தையும் பாதித்துள்ளது. தினமும் சுமார் இரண்டு கோடி பீப்பாய் எண்ணெய் கடந்து செல்லும் முக்கிய வழியான ஹார்முஸ் நீரிணையில் ஈரான் எடுத்த நடவடிக்கைகள், உலகம் முழுவதும் எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருளாதார அதிர்வுகளை ஏற்படுத்தும் என்ற கவலையை அதிகரித்துள்ளது.
தொடரும் தொடர் தாக்குதல்கள்:
ஈரான் ஏவுகணை உற்பத்தி ஆலைகள் மீது அமெரிக்க போர் விமானங்கள் தொடராக தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானில் பூமிக்கு அடியில் சுமார் 1,600 அடி ஆழத்தில் செயல்படும் ஏவுகணை உற்பத்தி ஆலைகளை குறி வைத்து அமெரிக்க விமானப் படையின் அதிநவீன பி-2 போர் விமானங்கள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன.
ஈரானின் பல்வேறு பகுதிகளில் பூமிக்கு அடியில் சுமார் 1,600 அடி ஆழத்தில் ஏவுகணை உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன. இவை ஏவுகணை நகரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
அமெரிக்கா, இஸ்ரேல் உளவுத் துறை தகவல்களின்படி ஈரான் தலைநகர் டெஹ்ரான், கெர்மன் ஷா, செம்னான் உள்ளிட்ட பகுதிகளில் பூமிக்கடியில் சுமார் ஐந்து ஏவுகணை ஆலைகள் செயல்பட்டு வருவதாக தெரிகிறது.
இந்த ஆலைகளை போர் விமானங்களில் இருந்து வீசப்படும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளால் அழிக்க முடியாது. சில நூறு அடி ஆழத்துக்கு பூமியை துளைத்துச் சென்று, பின்னர் வெடித்துச் சிதறும் அதிநவீன வெடிகுண்டுகளால் மட்டுமே அழிக்க முடியும்.
அந்த வகையில் அமெரிக்காவிடம் ஜிபியு -57 என்ற சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் உள்ளன. இந்த வெடிகுண்டுகள் பூமியை துளைத்துச் சென்று, வெடித்துச் சிதறும் தன்மை கொண்டவை. 20.5 அடி நீளம், 2.6 அடி விட்டம், 14,000 கிலோ எடை கொண்ட ஜிபியு -57 வெடிகுண்டுகளை அமெரிக்காவின் எப் – 16, எப் – 22, எப் – 35 உள்ளிட்ட அதிநவீன போர் விமானங்களால் சுமந்து செல்ல முடியாது.
ஆதரால் அமெரிக்க விமானப் படையின் பி-2 ரக போர் விமானத்தால் மட்டுமே ஜிபியு -57 வெடிகுண்டுகளை சுமந்து செல்ல முடியும். ஒரு பி-2 போர் விமானத்தில் 2 ஜிபியு -57 வெடிகுண்டுகளை மட்டுமே பொருத்த முடியும்.
ஈரான் ராணுவத்தின் மிகப்பெரிய பலமாக ஏவுகணைகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஈரான் நாட்டிடம் 300 கி.மீ. முதல் 3,000 கி.மீ. தொலைவு வரை பாயும் திறன் கொண்ட ஏவுகணைகள் உள்ளன. இந்த ஏவுகணைகள் மூலமாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதை முறியடிக்க ஈரானின் ஏவுகணை உற்பத்தி ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளை முழுமையாக அழிக்க அமெரிக்க ராணுவம் திட்டமிட்டு உள்ளது. இதற்காக அமெரிக்காவில் இருந்து நான்கு பி-2 போர் விமானங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன.
172 அடி அகலம், 69 அடி நீளம் கொண்ட பி-2 போர் விமானங்களை இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளங்களில் தரையிறக்க முடியாது. அமெரிக்காவின் மிசோரியில் உள்ள வொயிட்மேன், குவாமில் உள்ள ஆண்டர்சன் விமானப் படைத் தளங்களில் மட்டுமே பி-2 போர் விமானங்களை கையாள முடியும்.
இவை தவிர இந்திய பெருங்கடலில் அமெரிக்கா, பிரிட்டன் இணைந்து நிர்வகிக்கும் டியாகோ கார்சியா தீவில் உள்ள விமானப் படைத் தளம், பிரிட்டனின் குளோஸ்டர்ஷையர் விமானப் படைத் தளத்தில் மட்டுமே பி-2 விமானத்தை தரையிறக்க முடியும். ஆனால் இந்த விமானப் படைத் தளங்களை அமெரிக்கா பயன்படுத்த பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முதலில் அனுமதி வழங்க மறுத்ததாகவும், 48 மணி நேர கால தாமதத்துக்குப் பிறகு அனுமதி வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
தற்போது குளோஸ்டர்ஷையர், டியாகோ கார்சியா தளங்களில் இருந்து பி-2 போர் விமானங்கள் புறப்பட்டு ஈரானின் ஏவுகணை ஆலைகள் மீது ஜிபியு – 57, ஜிபியு – 30, பிஎல்யு-109 ரக வெடிகுண்டுகளை வீசி வருகின்றன.
ஈரானின் ஏவுகணை ஆலைகள் எந்தெந்த இடங்களில் உள்ளன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. உளவுத் துறை அளித்துள்ள தகவல்களின் அடிப்படையில் டெஹ்ரான் உள்ளிட்ட சில பகுதிகளை குறிவைத்து பி-2 போர் விமானங்கள் குண்டுகளை வீசி வருகின்றன என அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளன.
ஈரான் அணு சக்தி நிலையங்கள் மீது தாக்குதல்:
இந்த சூழலில் ஈரானின் நடான்ஸ் அணு சக்தி தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை சர்வதேச அணு சக்தி அமைப்பு உறுதி செய்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட பதிவில், ‘நடான்ஸ் அணு சக்தி தளம் தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்களை ஆய்வு செய்தோம். இதில் அணு சக்தி தளத்தின் நுழைவு வாயில் கட்டிடங்கள் சேதமடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனினும், நடான்ஸ் தளத்தில் அணு கதிர்வீச்சு அபாயம் எழவில்லை. வேறு பாதிப்புகளும் கண்டறியப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சர்வதேச அணு சக்தி அமைப்புக்கான ஈரான் தூதர் ரெசா நஜாபி கூறும்போது, “அணு சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி வருகிறோம். ஆனால், எங்களது நடான்ஸ் அணு சக்தி தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதனால் அணு கதிர்வீச்சு அபாயம் எழுந்திருக்கிறது” என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூனில் ஈரானின் நடான்ஸ், போர்டோ அணு சக்தி தளங்கள், டெஹ்ரானில் உள்ள அணு சக்தி ஆராய்ச்சி மையம், இஸ்பகான் நகரில் உள்ள அணு சக்தி தொழில்நுட்ப மையம், அராக் நகரில் உள்ள கனநீர் அணு உலை மையம் ஆகியவை மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
இதில் ஈரானின் அணு சக்தி கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. அவற்றை ஈரான் அரசு புனரமைத்து, அணு சக்தி திட்டங்களை முன்னெடுத்துச் சென்றது. இந்த சூழலில் நடான்ஸ் அணு சக்தி தளம் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது
மத்திய கிழக்கு முழுவதும் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், வளைகுடாப் பகுதியில் சமீப ஆண்டுகளில் இதுவே மிகக் கடுமையான மோதலாக கருதப்படுகிறது. இதேவேளை
ஈரானின் தலைமைத்துவ வீழ்ச்சியால் மத்திய கிழக்கு அதிகார சமநிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *