இலங்கை

ஒன்பது ஆண்டுகளாக தொடரும் போராட்டம்! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவரர்களின் உறவினர்கள் 2017.03.08 அன்று ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது எதிர்வரும் 08.03.2026 அன்று ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்து பத்தாவது ஆண்டாகவும் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 8.3.2026 அன்று தங்களுடைய உறவுகளை இராணுவத்திடம் கையளித்த வட்டுவாகல் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது சங்கம் அறிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவர் சுப்பிரமணியம் பரமானந்தம் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

“2009 ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்ட போது எங்களுடைய உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்கள்.

இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக நாங்கள் இன்றுவரை அவர்களை தேடி வீதி வீதியாக இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம் உள்ளூரிலும் சர்வதேச ரீதியிலும் தொடர்ச்சியாக எங்களுடைய உறவுகளுக்கு நீதி கேட்டு போராடி வந்த நாங்கள் எந்த தீர்வும் கிடைக்காத நிலையில் சர்வதேச எங்களுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும் என கேட்டு தொடர்ச்சியாக ஓரிடத்திலிருந்து போராட்டத்தை ஆரம்பித்து வருகின்ற 8.3 2026 அன்று 9 வருடங்கள் நிறைவடைகின்றது.

இந்த ஒன்பது ஆண்டுகளிலும் நாங்கள் ஆரம்பத்தில் இருந்து உண்மையை கண்டறிதல், பொறுப்பு கூறுதல், மீள நிகழாமை போன்ற பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தின் ஊடாக உள்ளூரிலே காணாமல் போனார் அலுவலகத்திடம் ஐந்து பேருடைய விபரங்களை கொடுத்திருந்தோம்.

அதற்கு எந்தவிதமான தீர்வுகளும் வழங்கப்படாத நிலையில் தொடர்ச்சியாக சர்வதேச சமூகத்தின் நீதியை வேண்டி தொடர்ந்து போராடி வருகின்றோம் இந்நிலையில் எங்களோடு சேர்ந்து தங்களுடைய உறவுகளை தேடிய 350 பேர் பெற்றோர்கள் உயிரிழந்துள்ளார்கள் இவ்வாறான பின்னணியில் தொடர்ச்சியாக நாங்கள் எங்களுடைய உறவுகளுக்கு சர்வதேச நீதி கோரி போராடி வருகின்றோம்.

இருப்பினும் எங்களுடைய போராட்டம் சர்வதேச அளவுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தாலும் இதுவரை எமக்கான நீதி கிடைக்கவில்லை இவ்வாறு ஒவ்வொருசாட்சிகளாக உயிரிழந்து வருகின்ற போதும் எமக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை இவ்வாறு சாட்சிகள் தானாகவே அழிந்து வருகின்றன இது உண்மையை கண்டறிகின்ற வழிமுறைக்கு பாதிப்பாக அமையும் எனவே நாங்கள் ஒன்பதாவது ஆண்டு நிறைவிலே எங்களுடைய உறவுகளை கையளித்த வட்டுவாகல் பாலப்பகுதியில் காலை ஒன்பது முப்பது மணிக்கு மாபெரும் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளோம்.

குறித்த எங்களுடைய இந்த சர்வதேச நீதியை கோரிய போராட்டத்திற்கு அரசியல் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள், பல்கலைக்கழ மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஆதரவு வழங்கி தங்களுக்கு நீதி கோரும் இந்த பொறிமுறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *