கட்டுரைகள்

அவற்றுள் இடறுதல் மெய்யெனில் இதிலும் இடறுதல் மெய்யாம்!….. சங்கர சுப்பிரமணியன்

சங்கர சுப்பிரமணியன்

இலக்கியங்களில் இடறுதலும் இடைச்செருகலும் உண்டென்பதை யாராலும் மறுக்க இயலாது. எதையும் தராசுத் தட்டில் வைத்து சமமான எடையாக காணும்போது தராசின்முள் நடுவில் எங்கும் சாயாது நிற்க வேண்டும். அதுபோல் இலக்கியங்களிலும் அவை எவ்வகையான இலக்கியங்களாக இருப்பினும் உண்மையை காணும்போது நடுநிலையில் நிற்கும் குறிக்கோள் வேண்டும்

இடறுதல் நடந்திருப்பதை உறுதி செய்ய இரண்டு இலக்கியங்களை எடுத்துக் கொள்வோம். ஒன்று இராமாயணம் மற்றொன்று திருக்குறள். மூல நூலான வான்மீகி எழுதிய இராமாயணத்தை தழுவி கம்பரும் துளசிதாசரும் வழிநூலாக இராமாயணத்தை எழுதியுள்ளனர்.

திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை பலர் படி எடுத்துள்ளனர். அச்சு இயந்திரங்கள் வந்தபின் பலரால் அச்சிடப்பட்டுள்ளது. வழிநூலாக எழுதும்போது மூலநூலில் இருந்து இராமாயணம் விலகிச் செல்வதைப் போன்றே படி எடுக்கும்போது திருக்குறளும் அதன் நிலையிலிருந்து விலகிச் சென்றிருக்க வாய்ப்புள்ளது.

இப்போது விலகிச் சென்றிருப்பது இராமாயணத்திலும் திருக்குறளில் எங்ஙனம் என்றறிவோம். இராமாயணத்தில் சீதையின் சிறையெடுப்பில் வழிநூல்களில் விலகல் ஏற்பட்டுள்ளதென்றால் திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் தொடங்கி படி எடுக்கும்போது பல குறட்பாக்களில் விலகல் நடந்துள்ளது.

வால்மீகி இராமாயணத்தில் இராவணன் சீதையை கையைப்பிடித்து இழுத்து சிறை எடுக்கிறான். கம்ப இராமாயணத்தில் சீதையைத் தொடாமல் இராவணன் பூமியிலிருந்து பெயர்த்தெடுத்து சீதையை சிறையெடுக்கிறான். துளசி இராமாயாணத்தில் சீதை நெருப்புடன் தஞ்சம் அடைய இராவணன் மாயையான சீதாவின் உருவை சிறை எடுக்கிறான். சீதா தீக்குளிக்கும்போது தீயில் மாய உரு மறைய உண்மையான சீதா வெளிப்படுகிறாள்.

இன்னும் முரண்பாட்டை கவனியுங்கள். இராவணன் தன்னை விரும்பாத பெண்ணைத் தொட்டால் அவன் தலை வெடித்து சுக்கு நூறாகும் என்ற சாபம் இருப்பதால் இராவணன் கம்ப இராமாயணத்தில் சீதையத் தொடவில்லை. ஆனால் வால்மீகி இராமயணத்தில் இராவணன் சீதையைத் தொடும்போது வால்மீகிக்கு இந்த சாபம் இல்லை. சாபமில்லையா அல்லது சாபம் பலிக்கவில்லையா?

துளசி இராமாயணத்தில் இராவணன் மாயையான சீதையை சிறையெடுத்ததால் இராவணன் தலை வெடிக்கவில்லையா? இவ்வாறெல்லாம் குளறுபடிகள் இருப்பதால் இராமாயாணத்தில் விலகல் ஏற்பட்டிருக்கலாம் என்பதை உணரமுடிகிறதல்லவா?  அதே வழி நின்று திருக்குறளில் ஏற்பட்டிருக்கும் விலகலையும் பார்ப்போம்.

சமயச் சார்பற்ற ஒரு இலக்கியத்தில் கடவுள் வாழ்த்து என்பதும் விலகலாக இருக்கலாம் அல்லவா? அதனை மூலப் பிரதியான ஓலைச்சுவடியில் இருந்து படி எடுக்கும்போதோ அல்லது ஓலைச்சுவடியில் இருந்து அச்சு இயந்திரத்தில் பதிப்பிக்கும்போதோ இடைச்செருகல் ஏற்பட்டிருக்கும்.

ஏனெனில் பத்து குறட்பாக்களும் வாழ்வியலைத்தான் இயம்புகிறது. எனவே அது வாழ்வியல் வாழ்த்தாகவோ வாழ்வியலோடு சம்பந்தப்பட்ட இயற்கை வாழ்த்தாகவோ வாய்ந்திருக்க வாய்ப்புள்ளது. காரணம் முதல் குறளில் வரும் பகவன் என்ற சொல்லே தமிழ் சொல் அல்ல என்பதுதான்.

விருந்தோம்பல் என்ற அதிகாரத்தில் விருந்து புறத்திருக்க எனும் குறளில் தேவாமிர்தம் என்ற மதத்துடன் சம்பந்தப்பட்ட சொல்லை பயன்படுத்தாமல் தூய தமிழ்ச்சொல்லான சாவாமருந்தென்ற சொல்லை அச்சொல்லுக்கு ஈடாக பயன்படுத்துகிறார். அப்படியிருக்க முதற்குறளில் பகவன் என்ற சொல்லை கண்டிப்பாக பயன்படுத்தி இருக்கமாட்டார்.

சாவாமருந்தெனினும் என்று சொல்லியிருப்பதில் இருந்தே அதனை அவர் ஏற்கவில்லை என்பது புலனாகிறது. ஒருவேளை அப்படி இருந்தாலும் என்ற தொணியில் கூறியிருப்பதால் திருக்குறளை சமயநூலாக ஏற்க இயலாது. இத்தகைய சான்றுகள் பல இடங்களில் நிரம்பிக் கிடக்கின்றன.

பகவன் என்பது வடமொழிச்சொல். அது பகலவன் என்ற தமிழ்ச் சொல்லாகவே இருந்திருக்க வேண்டும். பகலவன் என்ற சொல்லே மருவி பகவன் என்று வந்திருக்க வேண்டும். இனியது என்ற சொல் இனிது என்றும் உள்ளம் என்பது உளம் என்று மாறுவதுபோல் மாறியிருக்கலாம். பகலவன் என்றால் ஞாயிறு.

பகவன் என்ற இடைச்செருகலோ அல்லது பகலவன் மருவி வந்திருப்பதோ கடவுள் என்ற பொருள் தருவதால் அந்த வாய்ப்பினை பயன்படுத்தி கடவுள் வாழ்த்து என்று மாற்றி இருக்கலாம். முதற்குறளின் பொருளை உணர்ந்தால் உண்மை தெள்ளெனத் தெரியும்.

இதற்கு நமக்கு சொல்லி நம்பவைக்கப் பட்டிருக்கும் பொருளுக்கும் உண்மைப் பொருளுக்கும் உள்ள வேறுபாட்டை விருப்பு வெறுப்பின்று நடுநிலையிலிருந்து பொருள்கண்டால் உண்மை தென்படும். முதலில் சொல்லி நம்பவைக்கப் பட்டிருக்கும் பொருளைப் பார்ப்போம். உலகில்தோன்றிய மொழிகளுக்கெல்லாம்அகரம் முதலாவதாக இருப்பதைப்போல் கடவுள் உலகுக்கு முதலானவன் என்பதே பொருள்.

உண்மைப் பொருள் என்னவெனில் உலகிலுள்ள மொழிகளுக்கெல்லாம் அகரம் முதலாவதாக இருப்பதைப்போல் ஞாயிறு உலகுக்கு முதலாவதாகும். இப்பொருள் உண்மைப் பொருளாக இருக்க காரணம் எப்படி என்பதை பார்ப்போம். “விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலை காண்பதறிது” என்று வான்சிறப்பு எனும் அதிகாரத்தில் சொல்கிறார் வள்ளுவர்.

இதன் பொருள் வானிலிருந்து மழை பெய்யாவிடின் பூமியில் பசும்புல் கூட முளைக்காது என்பதாகும். பசும்புல்கூட முளைக்காதபோது மனித வாழ்வுக்கு உணவு தரும் உழவுத்தொழிலை எவ்வாறு செய்யமுடியும். உழுவுத்தொழில் செய்து உணவுப் பொருட்களை விளைவிக்க முடியாது போனால் மனிதன் எப்படி உயிர்வாழ்வான்?

மனிதனை வைத்தே கடவுள் தோன்ற மதமும் தோன்றியது. ஒருவேளை மனிதன் தோன்றியிராது இன்றிருக்கும் மற்ற உயிரினங்கள் மட்டும் இருந்திருந்தால்
அவை எப்படிகடவுளை கண்டுபிடித்திருக்கும். மதத்தை உருவாக்கியிருக்கும். அவை ஆலயங்கள் கட்டி ஆராதணை செய்திருக்குமா?

மழை பெய்வதால் உழவுத் தொழில் மூலம் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய முடிகிறது. எனவே உணவு கிடைத்ததால் மனித இனம் நிலைத்திருக்க முடிந்தது என்பதை எவராலும் மறுத்திட முடியாது. அத்தகைய மழை பொழிய காரணம் ஞாயிறு. ஞாயிறு கடல்நீரை ஆவியாக்கி மேலெழச்செய்து வானில் கார்மேகமாக்கி மழை பெய்ய வைக்கிறது.

எனவே உலகில் தோன்றிய மொழிகளுக்கு எல்லாம் அகரம் முதலாவதாக இருப்பதுபோல உலகுக்கு முதலாவதாக இருப்பது ஞாயிறு என்பது புலனாகிறது. அந்த ஞாயிறுதான் மனித இனம் நிலையாக வாழ வழிவகுத்தது. மனித இனம் நிலைத்து வாழ்ந்திருக்காவிட்டால் உலகில் பலமொழிகள் தோன்றுவதற்கும் அவற்றிற்கெல்லாம் அகரம் முதலாவதாக இருப்பதற்கும் பொருளின்றிப் போய்விடும்.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது ஞாயிறு தோன்றியபின்னரே அதன் ஒளியில் உலகம் இயங்க ஆரம்பித்து புல் பூண்டுகள் தோன்றின. ஓருயிர் உயிரினங்களில் இருந்து ஆறுயிர் உயிரான மனிதன் வரை தோன்றினான் என்று அறிகிறோம். காடுகளில் காட்டுமிராண்டியாக வாழ்ந்து காய்கனிகளையும் கிழங்குகளையும் தின்று வாழ்ந்தான் மனிதன்.

பின்னர் நிலத்தை மேம்படுத்தி விவசாயம் செய்ய ஆரம்பித்தான். தனித்திருந்த மனிதன் கூடிவாழ்ந்தான். கூடிவாழ்ந்த மனிதர்கள் தமக்கென ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்தார்கள். மக்களுக்கு நல்லவற்றை செய்த தலைவனை அவன் மடிந்த பின்னர் மண்ணில் புதைத்து புதைத்த இடத்தில் கல்லை நட்டு வணங்கினார்கள். இப்படி வழிபட்டதே நடுகல் வழிபாடானது.

நடுகல் வழிபாட்டிலிருந்து தொடங்கியதுதான் இன்றைய வழிபாடும் ஆகும். ஆதலால் இவற்றிற்கெல்லாம் மூலமாக முதலாவதாக உலகுக்கு ஞாயிறு இருப்பது தெள்ளத் தெளிவாகிறது. இடைச்செருகல் ஏற்பட்டுருப்பதையும் நம்பமுடிகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *