முச்சந்தி

அரபு நாடுகளை தாக்கி முரண்படும் ஈரானின் பதிலடி எதுவரை தொடரும்?…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

ஒபரேஷன் எபிக் பியூரி (Operation Epic Fury) என்ற பெயரில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் ஆட்சி மாற்றத்திற்காகத் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. இதற்குப் பதிலடியாக ஈரான், ஜோர்டான், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களைச் தாக்கி வருகிறது.

அமெரிக்கா மத்திய கிழக்கு முழுவதும் சுமார் 13 பாரிய இராணுவத் தளங்களைக் கொண்டுள்ளது. அத்துடன் இந்த இராணுவ தளங்களில் பொதுவாக 30,000 முதல் 40,000 துருப்புக்கள் நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளன.

போர் மேகம் சூழ்ந்த மத்திய கிழக்கு:

தற்போது மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானின் புதிய தொழில்நுட்பமான மணிக்கு 9,800 கி.மீ வேகமாக செல்லும் ஏவுகணைகளைத் தடுக்க முடியாமல் இஸ்ரேலின் உலகத்தரம் வாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் பலவும் தோல்வியடைந்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் பழிவாங்கும் நடவடிக்கையாக அமெரிக்க சொத்துக்களை வைத்திருக்கும் பல அரபு நாடுகளை குறிவைத்துள்ளது.

மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து தாக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது நடத்திய மிகப்பெரிய கூட்டுத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வளைகுடா அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க சொத்துக்களை ஈரான் குறிவைத்துள்ளதால், இது பிராந்திய மோதலுக்கான அச்சத்தைத் தூண்டியுள்ளது.

அதே சமயம் டெல் அவிவ் தலைநகரில் ​ செயலிழந்த வான் பாதுகாப்பு அமைப்பால், ஈரான் தொடராக தாக்கி வருகிறது. உலகின் மிகச்சிறந்த பல அடுக்கு பாதுகாப்பு அமைப்புகளாகக் கருதப்படும் அமைப்புகள் ஈரானின் ஏவுகணைகளை இடைமறிக்க முடியாமல் திணறியுள்ளன என்றும் செய்திகள் கூறுகின்றன.

அமெரிக்கத் தயாரிப்பான ​THAAD & Patriot பாதுகாப்பு அமைப்புகள் ஏவுகணைகளை அடையாளம் காண்பதற்கு முன்பே தாக்குதல் இஸ்ரேல் மீது நடாத்தப்பட்டுள்ளது. அதேவேளை வான்வெளியிலேயே ஏவுகணைகளை அழிக்கும் திறன் கொண்ட ​Arrow 3 & Iron Dome போன்ற வான்பாதுகாப்பு அமைப்புகள், ஈரானின் ‘ஹைப்பர்சோனிக்’ வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் செயலிழந்தன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மணிக்கு 9,800 கி.மீ வேகத்தில் பாயும் ஏவுகணைகளைத் தடுப்பது தற்போதைய தொழில்நுட்பத்தில் மிகவும் கடினமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

இஸ்ரேலின் மிக முக்கியப் பாதுகாப்புப் பகுதிகளையும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நகரங்களையும் குறிவைத்து ஈரான் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் டெல் அவிவ் ​ பகுதியில் பல பாதுகாப்பு வளையங்கள் செயலிழந்து வருகின்றன என்று கூறப்படுகிறது.

இஸ்ரேலில் இலக்கு வைக்கப்பட்ட முக்கிய நகரங்களான எபிரோன் (Hebron) கடுமையான வெடிப்புச் சத்தங்களுடன் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெருசலேம் (Jerusalem) புனித நகரின் வான்பரப்பில் ஏவுகணைகள் ஊடுருவியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். ​இதேவேளை டெல் அவிவ் (Tel Aviv) இஸ்ரேலின் வணிக மையமான இங்கு பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகத் தகவல். வடக்கு கலிலி (Northern Galilee): எல்லைப் பகுதிகளில் தொடர் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

​ஆனாலும் உயிர்ச்சேதங்கள் மற்றும் தற்போதைய நிலை குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்தத் தாக்குதலில் இஸ்ரேலின் பல பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் தரப்பில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் படையினர் விரைந்துள்ள நிலையில், பல இடங்களில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

துபாய் மீதும் தாக்குதல்:

ஈரானின் தாக்குதலால் துபாயின் பாம் தீவுகளில் உள்ள (Dubai Palm islands attraction) ஒரு ஹோட்டலுக்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டது. மேலும் பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல இலக்குகள் மீதான தாக்குதல்களை ஈரான் அரசாங்கம் உறுதிப்படுத்தியதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அங்கு அமெரிக்க சொத்துக்களைக் கொண்ட விமானத் தளங்கள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), மத்திய கிழக்கில் உள்ள அனைத்து இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க இராணுவ இலக்குகளும் ஈரானிய ஏவுகணைகளின் சக்திவாய்ந்த தாக்குதல்களால் தாக்கப்பட்டதாகக் கூறியுள்ளது.

எதிரி தீர்க்கமாக தோற்கடிக்கப்படும் வரை இந்த நடவடிக்கை இடைவிடாமல் தொடரும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. பிராந்தியம் முழுவதும் உள்ள அனைத்து அமெரிக்க சொத்துக்களும் ஈரானின் இராணுவத்திற்கு முறையான இலக்குகளாகக் கருதப்படுகின்றன என்று அது மேலும் கூறியுள்ளது.

அத்துடன் ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் ஹமீத் கன்பாரி அல் ஜசீராவிடம், ஈரானுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என்றும், தற்போதைய இராணுவ விரிவாக்கத்தால் ஏற்படும் எந்தவொரு மனிதாபிமான இழப்புக்கும் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு அனுப்பிய கடிதத்தில், ஈரான் ஆக்கிரமிப்பு முழுமையாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் நிறுத்தப்படும் வரை அதன் தற்காப்பு உரிமையை தீர்க்கமாகவும் தயக்கமின்றியும் தொடர்ந்து பயன்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பாதுகாப்பு அரண் :

போர் தொடங்கியதன் பின்னர் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இது வாஷிங்டனையும் அதன் நட்பு நாடுகளையும் அச்சுறுத்தி உள்ளது.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ஐந்தாவது கடற்படை தலைமையகத்தின் அருகே ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குவதை வீடியோக்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் இதுவரை உயிரிழப்புகள் குறித்து எந்த அறிக்கையும் இல்லை. அமெரிக்க இராணுவம் தாக்குதல் குறித்து சில எச்சரிக்கைகளைப் பெற்றிருக்கும் மற்றும் பணியாளர்களை வெளியேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஹ்ரைன் ஈரானால் ஒரு உயர் இலக்காகக் கருதப்பட்டது. கடந்த காலத்தில் வான் பாதுகாப்புக்கு ஒப்பீட்டளவில் அங்கே குறைவாகவே இருந்தது. ஒப்பீட்டளவில் மெதுவாக நகரும் ஈரானிய ஷாஹெட் ட்ரோன் அதன் முக்கிய திறன்களை காட்டும் வீடியோ வெளியாகி உள்ளது.

உக்ரைனில் இதுபோன்ற ட்ரோன்களை பெரும்பாலும் ஒரு உயர் திறன் கொண்ட இயந்திர துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முடியும் என்று கூறப்பட்டது.

கடந்த சில வாரங்களாக அமெரிக்கா கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகளை வளைகுடா பிராந்தியத்திற்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. அதிநவீன THAAD மற்றும் பேட்ரியாட் ஏவுகணைகள், அவை பாலிஸ்டிக் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியும். ஆனால் இவை விலை உயர்ந்தவை என்பதுடன், எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளன.

உக்ரைனில் பத்துக்கும் குறைவான பேட்ரியாட் பேட்டரிகள் மட்டுமே உள்ளன. மேலும் தலைநகர் கிவ்வைப் பாதுகாக்க இன்னும் அவர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.
ஆனால் அமெரிக்கா மத்திய கிழக்கில் அதன் அனைத்து இராணுவ தளங்களையும் நலன்களையும் பாதுகாக்க போதுமான வளங்களை கொண்டு இருப்பது இன்னும் சாத்தியமில்லை.

இதேவேளை அமெரிக்க கடற்படை வளைகுடா மற்றும் கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு பன்னிரண்டு ஆர்லீ பர்க்-வகுப்பு கப்பல்களை நிறுத்தியுள்ளது.இந்த வான் பாதுகாப்பு கப்பல்கள் மூலம் ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்த முடியும்.

ஏமனில் ஈரானிய ஹவுத்தி:

ஏமனில் ஈரானிய ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் ஏற்கனவே செயல்பட்டு வரும் நிலையில், கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2024 மற்றும் 2026 க்கும் இடையில், அமெரிக்கா கிட்டத்தட்ட 400 ஹவுத்தி ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்தது என்று கூறப்படுகிறது.

இந்த பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்டுள்ள அமெரிக்க போர் விமானங்கள் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்டவை. அமெரிக்கா இப்போது இந்த பிராந்தியத்தில் 100 க்கும் மேற்பட்ட போர் விமானங்களைக் கொண்டுள்ளது. ஆனால் இந்த குறிப்பிடத்தக்க திறன்கள் கூட ஈரான் சில இலக்குகளை வெற்றிகரமாக தாக்குவதைத் தடுக்க போதுமானதாக இருக்காது என்றும் கூறப்படுகிறது.

இந்த சமீபத்திய அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு முன்பு, ஈரான் இன்னும் சுமார் 2,000 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளின் ஆயுதக் களஞ்சியத்தைக் கொண்டுள்ளது என்று உளவு தகவல்கள் தெரிவித்தன. ஆனால் ஈரான் இன்னும் பல ஒரு வழி தாக்குதல் ட்ரோன்களைக் கொண்டுள்ளது. ஈரானின் ஷாஹெட் ட்ரோன் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது மற்றும் உக்ரைன் முழுவதும் தொடர்ந்து அழிவை ஏற்படுத்தி வருவதும் தெரியவந்துள்ளது. ரஷ்யா இப்போது ஒரு மாதத்திற்கு ஆயிரக்கணக்கான இந்த ட்ரோன்களை உற்பத்தி செய்து வருகிறது. மேலும் ஈரானின் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்த ரஷ்யா தொடர்ந்து உதவியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஜோர்டான் மீது ஈரான் ஏவுகணை:

ஜோர்டான் ராணுவத் தளம் மீதும் ஈரான் ஏவுகணை வீச்சை நடத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் அரபு நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜோர்டானில் உள்ள கிங் உசேன் (King Hussein) விமானத் தளம் அல்லது முவாஃபக் அல்-சால்டி (Muwaffaq Al-Salti) தளம் உள்ளிட்ட அமெரிக்கப் படைகள் முகாமிட்டுள்ள பகுதிகள் ஈரானின் ஏவுகணைகளால் ​நேரடித் தாக்குதல் இலக்காக வைக்கப்பட்டுள்ளன.

ஏவுகணைகள் தாக்கியதில் அமெரிக்க ராணுவத் தளத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து கரும்புகை வெளியேறுவதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜோர்டான் வான் பாதுகாப்பு அமைப்பு சீராக செயல்படுகிறது என்று அமெரிக்க கூறினாலும், ஈரான் ஏவிய சில ஏவுகணைகளை ஜோர்டான் நாட்டு வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்தாலும், சில ஏவுகணைகள் இலக்கைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

ஆனாலும் தனது நாட்டின் ராணுவத் தளங்கள் மீதான தாக்குதலுக்கு ஈரானுக்கு “வரலாற்றுப் பாடம்” புகட்டப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *