ஆயர்களை விடவும் சுரேஷ் சலே முக்கியம்; சாமர சம்பத் எம்.பி.

நாட்டை பொறுத்த வரையில் ஆயர்களை விடவும் யுத்தத்தில் பணியாற்றிய சுரேஷ் சலே எங்களுக்கு முக்கியமானவர் என்று புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணி சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது சாமர சம்பத் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,
உலகத்திற்கு தான்தோன்றித்தனமாக தலைவர் நியமிக்கப்பட்டால் யுத்தம் போன்றவை நடக்கும். கடந்த காலங்களில் இவர் ஒவ்வொரு நாட்டுக்கும் வரிகளை அறிவித்துக்கொண்டு சென்றார். அமெரிக்க உயர் நீதிமன்றமும் அது தவறு என்றது. அவர் வெனிசுலாவுக்குள் புகுந்து தலைவரை தூக்கிச் சென்றார். இப்போது ஈரானுக்கு தாக்குதல் நடத்துகின்றார். இவ்வாறான தான்தோன்றித்தனமான தலைவர்களால் உலகில் எம்மைப் போன்ற அபிவிருத்தியடையாத வறுமை நாடுகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் பொறுப்பு கூற வேண்டும். யுத்தத்தில் சீனா இணையலாம். ரஷ்யாவும் இணையலாம். இதனால் எம்மைப் போன்ற நாடுகளுக்கே பாதிப்புகள் ஏற்படும். இவ்வாறான தான்தோன்றித்தனமான தலைவர்களே நிலைமைகளுக்கு காரணமாகும்.
இதேவேளை இப்போது சலே கைது செய்யப்பட்டுள்ள விடயம் தொடர்பில் கூறுவதாயின் பிள்ளையான் கைது செய்யப்பட்டு ஒரு வருடமாகின்றது. அவரிடம் பெற்ற தகவல்கள் என்ன என்று இதுவரையில் பாதுகாப்பு அமைச்சசரோ, பொலிஸாரோ கூறவில்லை. இப்போது சலே கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் குண்டு வெடிக்கும் போது சீஐடி பிரதானி ரவி செனவிரட்ன, ஷானி அபேசேகர, கிழக்கு கட்டளைத் தளபதியாக அருண ஜயசேகர ஆகியோரும் இருந்துள்ளனர். இவர்கள் கடந்த தேர்தல் காலத்தில் அரசியல் மேடையில் ஏறியதால் உயர் பதவியில் இருக்கின்றனர். ஆனால் சலேவும் ஏறியிருந்தால் உயர் பதவியில் இருந்திருப்பார்.
கிழக்கில் தொப்பிகலவில் யுத்தம் நடந்த போது சலேவே யுத்தத்தை இரண்டாக பிளவுபடுத்தினார். கருணாவை கிழக்கிற்கும், வடக்கிற்கு பொட்டுஅம்மான் என்றும் பிரித்தார். இவரே அதனை செய்தார். யுத்த காலத்தில் சிங்களவர்களுக்கு தமிழ் தெரியாமல் புலனாய்வு பிரிவில் பணியாற்ற முடியாது. முஸ்லிம்களே புலனாய்வு பிரிவில் பணியாற்றினர். இப்போது சலே கைது செய்யப்பட்டுள்ளார். ஈரானில் இன்று நிலைமை புலனாய்வு பிரிவு பலவீனமடைந்த காரணத்தினாலேயே இப்போது அங்கு ஆன்மீகத் தலைவர் கொல்லப்பட்டார். இங்கு புலனாய்வு பிரிவு பலமாக இருந்த காரணத்தினாலேயே யுத்தத்தை வெற்றிக்கொள்ள முடியுமாக இருந்தது.
சிறீல் காமினி ஆயர் அண்மையில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி சலேவின் பிரச்சினை தொடர்பில் கதைக்க வேண்டாம் என்று கூறுகின்றார். அதனை கதைப்பதற்கு சிறீல்காமினி ஆயருக்கு உரிமை கிடையாது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர்கள் சிறீல்காமினியை விடவும் எமக்கு பெறுமதியானவர்களே. நாங்கள்பௌத்தர்கள், சிங்களவர்கள் நல்ல விடயங்களுக்கு கைதட்டுவோம். முத்தையா அதிக விக்கெட் வீழ்த்தும் போது நாங்களே மகிழ்ச்சியடைந்தோம். முஸ்லிம் என்றாலும் யுத்தத்தில் பணியாற்றியதால் அவர் தொடர்பில் கதைக்கின்றோம்.
இப்போது நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. எரிவாயு பிரச்சினை ஏற்படும் என்று டிசம்பர் மாதத்திலேயே கூறினேன். அரசாங்கம் என்ன வேலைத்திட்டத்தை முன்னெடுத்தது. எரிபொருள் வரிசை தொடர்பில் நாங்கள் விரும்பவில்லை. யுத்தம் கூடிய விரைவில் முடிய வேண்டும் என்றே விரும்புகின்றோம் என்றார்.
![]()