இப்போதாவது அரசு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்டவேண்டும்

2028 ஆம் ஆண்டாகும் போது ஆண்டுக்கு 3.5 – 4 பில்லியன் கடன் தொகையை திருப்பிச் செலுத்தும் சிக்கல் எழும் என்பதால், அதற்கு முன்பே ஐ.எம்.எப். இணக்கப்பாட்டில் திருத்தங்களைச் செய்வது தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும். டித்வா சூறாவளிக்குப் பின் சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்டுமாறும், ஐ.எம்.எப். இணக்கப்பாட்டில் திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தேன்.நாட்டு மக்களுக்காக இந்த நடவடிக்கைகளை எடுத்துஐ.எம்.எப். இணக்கப்பாட்டை மக்களுக்கு சாதகமான வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற அந்நிய செலவாணி சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய
அவர் மேலும் பேசுகையில்,
எரிவாயு நெருக்கடி, எண்ணெய் நெருக்கடி போன்றன கடும் பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சமயம் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் வரிசைகள் உருவானதால் அந்த நம்பிக்கை இன்று இல்லாதுபோயுள்ளன. வரிசைகள் ஏற்படுவதற்கு முன்பே மக்களுக்கு இது தொடர்பில் விளக்கம் அளித்து நம்பிக்கையை பெற்றிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. தற்போது அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கை முற்றிலும் இழந்துபோயுள்ளது.
சர்வதேச அரங்கில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து அரசாங்கம் இதைவிட கூடிய விழிப்போடு இருக்க வேண்டும். அதோடு அவசரகால நிலைமைகளை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். உலகில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக தீவிர நெருக்கடிகள் உருவாகும் அபாயம் காணப்படுகின்றது . இந்தத் தருணத்தில் கொள்கை ரீதியில் செயற்பட வேண்டும். எண்ணெய் அல்லது எரிவாயு நெருக்கடியாக இருந்தாலும் சரி, உலகில் நிலவும் நிச்சயமற்ற சூழல்களை எதிர்கொள்வதற்கு முக்கியமான திட்டங்கள் வகுக்க வேண்டும்.
நமது நாட்டில் தற்போது வறுமை அதிகரித்து வருகிறது. டித்வா சூறாவளியால் இது மேலும் அதிகமாகியுள்ளன. அண்மைய புள்ளிவிபரவியல் திணைக்கள தரவுகளின் படி, ரூ. 16,000 – 18,000 வரை மாதாந்த வருமானம் அமைந்து காணப்பட்டால் வாழ்வை கொண்டு நடத்த போதுமானது என கூறப்படுகிறது. இதை நம்ப முடியாது. தவறான தரவுகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன . இது அரசாங்கக் கொள்கைகளின் பலவீனத்தை காட்டுகிறது.
மத்திய கிழக்கில் மோதல் நிலை ஒரு சோகமான தருணமாக மாறியுள்ள இந்த வேளையில், மக்களின் வாழ்வாதாரங்கள் அழிந்துள்ள இந்த தருணத்தில், நமது நாடு இதை ஒரு நேர்மறையான வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு நாட்டின் நம்பிக்கையை சர்வதேசத்தில் கட்டியெழுப்பி, நேரடி அந்நிய முதலீடுகளை நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான ஒத்துழைப்பு பெற்றுத் தர நாம் தயார்.
எனவே இப்போதாவது ஒரு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்டவேண்டும் , 220 இலட்சம் மக்களை , டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நினைத்து இதை செய்ய வேண்டும் . இதை அரசாங்கம் சரியாக செய்திருந்தால் சர்வதேச அனுதாபத்தை பெற்றிருக்க முடியும் இந்த வாய்ப்பை அரசாங்கம் கைநழுவவிட்டு விட்டது என்றார்.
![]()