டித்வா சூறாவளி பாதிப்பு; 40,000 குடும்பங்கள் வீடுகளற்ற நிலையில்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட 40,000 குடும்பங்கள் வீடுகள் இன்றி தொடர்ந்தும் முகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் தங்கியிருக்கின்றனர் என்றும், அனர்த்தம் ஏற்பட்டு 3 மாதங்கள் கடந்தும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத நிலைமையில் அரசாங்கம் இருக்கின்றது என்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்நியச் செலவாணி சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவசரகால சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விவாதம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அவசரகால சட்டம் ஏன் மீண்டும் நீடிக்கப்பட்டது. டித்வா புயல் நிறைவடைந்து 3 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இன்னும் 1075 குடும்பங்கள் 32 பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ளனர். போவதற்கு இடமின்றி அவர்கள் இருக்கின்றனர். அத்துடன் 150,000 பேர் உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பாதுகாப்பான இடங்ககளில் இருக்கின்றனர். இவ்வாறாக 40,000 குடும்பங்கள் வீடுகள் இன்றி இருக்கின்றனர்.
இன்னும் அரசாங்கத்தினால் இதற்கு தீர்வு காண முடியவில்லை. மூன்று மாதங்களாகியும் இதற்கு தீர்வு காண முடியாமல் தொடர்ந்தும் அவசரகால சட்டத்தை தொடர்கின்றனர். இந்த அவசரகால சட்டத்தால் என்ன பயனுள்ளது.
தற்போது எரிபொருள் வரிசைகள் ஏற்படுகின்றன. ஜனாதிபதி எரிபொருள் கையிருப்பு தொடர்பில் கூறியிருந்தார். ஆனால் பெட்ரோலியக் கூட்டுத்தாபன தலைவர் மார்ச் முதலாம் திகதி கூறிய கருத்துக்கு மாறாக வேறு கருத்தை கூறுகின்றார். வரிசையில் நிற்பவர்களில் 82 வீதமானவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தவர்கள் என்று நிர்மால் ரஞ்சித் தேவசிறி கூறுகின்றார். அவர்களை வீட்டுக்கு போகச் சொன்னால் வரிசை இருக்காது.
![]()