பலதும் பத்தும்

AI வழங்கிய போலி தீர்ப்புகள்! வௌியான பகீர் பின்னணி

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு வழக்கு ஒன்று விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அந்தச் சொத்தை ஆய்வு செய்ய அட்வகேட் கமிஷனர் ஒருவரை நீதிமன்றம் நியமித்தது.

ஆனால் அட்வகேட் கமிஷனர் கொடுத்த அறிக்கையில் தவறு இருப்பதாக மனுதாரர்களில் ஒரு தரப்பினர் புகார் தெரிவித்தனர்.

இந்தப் புகாரை நிராகரிக்க விசாரணை நீதிமன்ற நீதிபதி, இதேபோன்ற வழக்குகளில் உச்சநீதிமன்றம் வழங்கியதாக, நான்கு தீர்ப்புகளை மேற்கோள் காட்டியிருந்தார்.

ஆனால், அந்தத் தீர்ப்புகள் உண்மையில் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டவை அல்ல என்றும் அவை ஏஐ தொழில்நுட்பத்தால் கற்பனையாக உருவாக்கப்பட்ட போலி தீர்ப்புகள் என்பது பின்னர் தெரியவந்தது.

எனவே விசாரணை நீதிமன்றத்தின் மீது குற்றம்சாட்டி மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகினர்.

உயர் நீதிமன்றம் அந்த 4 தீர்ப்புகளும் போலியானவை என்பதை ஒப்புக்கொண்ட போதிலும், நீதிபதியை எச்சரித்ததோடு மட்டும் நிறுத்திக்கொண்டது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இதன்போது பேசிய நீதிபதிகள், “போலித் தீர்ப்புகளை ஆதாரமாகக் கொண்டு முடிவெடுப்பது என்பது வெறும் சட்ட ரீதியான தவறு மட்டுமல்ல, இது நீதித்துறை விதிகளை மீறிய தவறான நடத்தை (Judicial Misconduct) ஆகும்.

இதற்கான சட்ட ரீதியான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இத்தகைய நடவடிக்கைகள் நீதித்துறையின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும்” என்று தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்க இந்திய சட்டமா அதிபர் மற்றும் இந்திய சட்டத்தரணிகள் சங்கத்திற்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இந்த வழக்கு வரும் மார்ச் 10 அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அதுவரை போலி தீர்ப்புகளின் அடிப்படையில் விசாரணை நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கையை பயன்படுத்தக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

குறைந்த கால இடைவெளியில் அசுர வளர்ச்சி கண்டுள்ள செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்ப வேலைகளையும் தாண்டி தற்போது நீதித்துறை வரை ஊடுருவியுள்ளது விவாதப் பொருளாகி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *