பிரிட்டனில் புகலிடக் கோரிக்கைக்கு முடிவு?; அகதிகள் அந்தஸ்து இனி தற்காலிகமான ஒன்றே!

பிரித்தானியாவின் புகலிடக் கோரிக்கை முறையில் ஒரு தலைமுறையில் காணப்படாத மிகப்பெரிய மாற்றத்தை அந்நாட்டு உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் நேற்று (02) முதல் அமுல்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் பிரித்தானியாவில் ஏதிலி அந்தஸ்து பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு இனி நிரந்தரமானது அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இனி ஏதிலி அந்தஸ்து பெறுபவர்களுக்குத் தற்காலிக பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும். இவர்களின் வழக்குகள் ஒவ்வொரு 30 மாதங்களுக்கும் (2.5 ஆண்டுகள்) ஒருமுறை மறுஆய்வு செய்யப்படும்.
மறுஆய்வின் போது சம்பந்தப்பட்டவரின் தாய்நாடு பாதுகாப்பானது எனக் கருதப்பட்டால், அவர்கள் மீண்டும் அந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுவார்கள்.
துணையின்றித் தனியாக வரும் சிறுவர்களுக்கு இந்த 30 மாத மறுஆய்வு விதியிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஏதிலிகள் நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான காலம் 5 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகள் வரை அதிகரிக்கப்படவுள்ளது. சாதாரண குடியேறிகளுக்கு இது 5 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படும்.
கடந்த வாரம் டென்மார்க்கிற்குப் பயணம் மேற்கொண்ட ஷபானா மஹ்மூத், அங்குள்ள கடுமையான ஏதிலி சட்டங்களை ஆய்வு செய்தார். டென்மார்க்கைப் போலவே பிரித்தானியாவிலும் அகதிகள் தங்குவதற்கான விடுதி முறையை ஒழித்து, அடிப்படை வசதிகள் கொண்ட பொது விடுதிகளுக்கு அவர்களை மாற்றப் போவதாக அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
“சட்டவிரோதமாகப் படகுகள் மூலம் வருபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே எமது நோக்கம். ஏதிலி அந்தஸ்து என்பது ஒருவருக்கு நிரந்தரக் குடியுரிமையை உடனே பெற்றுத் தரும் என்ற எண்ணத்தை மாற்றப்போகிறோம்” ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவானது தீவிர வலதுசாரி கொள்கைகளைப் பின்பற்றுவது போல் இருப்பதாகத் தொழிற்கட்சியின் இடதுசாரி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
‘அகதிகள் கவுன்சில்’ போன்ற அமைப்புகள், ஒவ்வொரு 30 மாதமும் லட்சக்கணக்கானோரின் கோப்புகளை மீண்டும் ஆய்வு செய்வது தேவையற்ற செலவையும் நிர்வாகச் சிக்கலையும் ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளன.
ஏதிலிகள் தற்காலிக நிலையில் இருக்கும்போது அவர்களுக்கு வேலை வழங்குவதற்கு நிறுவனங்கள் தயங்கும் என்றும், இது சமூக ஒருங்கிணைப்பைப் பாதிக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
![]()