கவிதைகள்

வள்ளுவம் படிப்போம் வாருங்கள் அனைவரும்!… கவிதை…. ஜெயராமசர்மா

ஆதியில் அகரம் அந்தத்தில் னகரம்
அடியும் முடியும் அனைத்தும் அறிவே
தேடிடு மனைத்தும் ஓரிடம் குவித்து
திரட்டியே தருவது வள்ளுவர் குறளே

தமிழைத் தாங்கிப் பிடிப்பதும் குறளே
தரணி சிறந்திட வைப்பதும் குறளே
அமரர் உலகில் வாழலாம் என்று
அதற்கு வழியை வகுத்ததும் குறளே

அறம் பொருளின்பம் அனைவர்க்கும் அவசியம்
அழகுடைத் தமிழால் அளிப்பது குறளே
அறமொடு பொருளும் அறமொடு இன்பமும்
இணைவது முக்கியம் என்பது குறளே

வள்ளுவம் மொழியாக் கருத்துகள் இல்லை
வாய்மையை வள்ளுவம் போற்றியே பார்க்குது
உள்ளுக்குள் நுழைந்து உயர்வினைத் தேடுது
உணர்வினைத் தட்டி எழுப்பியே நிற்குது

வெற்றுக் கருக்களை விரட்டுது வள்ளுவம்
வேண்டிய கருக்களைத் தோண்டியே எடுக்குது
விதண்டா வாதம் பேசா வகையில்
விளக்கம் கொடுத்து விளக்குது வள்ளுவம்

கல்வியைப் பற்றி கற்பதைப் பற்றி
வள்ளுவம் சொன்னதை மறுத்திடல் முடியா
சொல்லிய அனைத்தும் தொல்லுல கெங்கணும்
உள்ளவர் ஏற்றால் உயர்வினை எய்துவார்

ஒழுக்கம் பற்றிய வள்ளுவப் பார்வை
உலகம் அறியா உன்னதப் பார்வை
பிறப்புடன் இழுக்கை இணைத்திடும் கருவை
உடைத்திடும் வள்ளுவம் உயர்நிலைத் தத்துவம்

தூய்மை என்பதே துறவே ஆகும்
வாய்மை அதனின் வடிவே ஆகும்
மழித்தலும் வேண்டாம் நீட்டலும் வேண்டா
பழித்ததை விடுவென பகன்றது வள்ளுவம்

நினைத்திட முடியா தனித்துவ தத்துவம்
ஒவ்வொரு பார்வையும் உன்னதப் பார்வையே
நடைமுறைத் தத்துவம் பொதிந்திடும் பொக்கிஷம்
நந்தமிழ் தமிழ்மொழியின் அற்புதம் வள்ளுவம்

வள்ளுவம் படித்தால் வழுவிலா வாழலாம்
தெள்ளிய தமிழில் தெளிந்தநல் தத்துவம்
உள்ளந் தெளியும் கள்ளம் அகலும்
வள்ளுவம் படிப்போம் வாருங்கள் அனைவரும் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *