உலகம்

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள்; அமெரிக்காவின் புதிய விளக்கம்

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் “ஆட்சி மாற்றத்திற்காக” முன்னெடுக்கப்படுபவை அல்ல என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தற்போதைய சூழலில் ஈரானின் தலைமைத்துவம் மாறியுள்ளதை அவர் ஏற்றுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இது ஒரு ஆட்சி மாற்றத்திற்கான போர் அல்ல, ஆனால் அங்கு ஆட்சி நிச்சயம் மாறிவிட்டது. இதனால் உலகம் இப்போது சிறந்த இடமாக மாறியுள்ளது” எனவும் பீட் ஹெக்செத் தெரிவித்தார்.

அமெரிக்கா இந்தப் போரைத் தொடங்கவில்லை என்றும், பல தசாப்தங்களாக அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் முன்னெடுத்து வந்த ஒருதலைப்பட்சமான போரை, ஜனாதிபதி ட்ரம்பின் தலைமையின் கீழ் அமெரிக்கா தற்போது முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த இராணுவ நடவடிக்கையின் போது இதுவரை உயிரிழந்துள்ள நான்கு அமெரிக்க சிப்பாய்களின் ஆத்ம சாந்திக்கான பிரார்த்திப்பதாக அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் மிகச்சிறந்த வீரர்கள் அவர்கள். அவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், எவ்வித தயக்கமும் மன்னிப்பும் இன்றி இந்த நடவடிக்கையைத் தொடர்வோம்” என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

மேலும், அமைதியான அணுசக்தி அபிலாஷைகளை மலைகளுக்கு அடியில் மறைத்து வைக்கத் தேவையில்லை எனக் குறிப்பிட்ட அவர், கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட ‘Operation Midnight Hammer’ மூலம் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்பட்டதாக நினைவு கூர்ந்தார்.
ஒபாமா ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம் ஒரு “மோசமான ஒப்பந்தம்” எனச் சாடிய ஹெக்செத், ஈரான் பொய்களைக் கூறி அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயன்றதாகக் குற்றம் சாட்டினார்.

“ஈரான் எமது தலையில் துப்பாக்கியை வைத்திருந்தது. ஜனாதிபதி ட்ரம்ப் இத்தகைய விளையாட்டுகளை விளையாட மாட்டார்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

முடிவாக, இது ஒரு முடிவில்லாத போர் அல்ல என்றும், ஈரானின் ஏவுகணைகள் மற்றும் பாதுகாப்பு உட்கட்டமைப்புகளை அழிப்பதே அமெரிக்காவின் இலக்கு என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *