முச்சந்தி

ஈரானில் ஒரு சகாப்தம் முடிவு: எத்திசையில் கொமேனிக்கு பின்னரான புதிய தலைமை? …. ஐங்கரன் விக்கினேஸ்வரா

ஈரான் நாட்டின் மிக உயரிய அதிகாரமும், ஆன்மீகத் தலைமையும் கொண்ட அயதுல்லா அலி கொமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.
தெஹ்ரானில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் முக்கிய ராணுவ நிலைகளை இலக்கு வைத்து பெப்ரவரி 28, 2026 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்ததாகத் தஸ்நிம் மற்றும் ஃபார்ஸ் ஆகிய ஈரான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் செய்தி உலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய உளவுத்துறையின் அதிரடி:
ஈரான் நாட்டின் மிக உயரிய பாதுகாப்பு வளையத்திற்குள், அதுவும் தலைநகருக்குள் இவ்வளவு துல்லியமாக ஒரு பெரிய தாக்குதலை நடத்தி முடிப்பதென்பது சாதாரண விஷயமல்ல. மொசாட் (Mossad) ஈரானின் பாதுகாப்பு கட்டமைப்பில் எவ்வளவு ஆழமாக ஊடுருவி இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. ​வெறும் தொழில்நுட்பம் மட்டுமல்ல, மனித உளவு எந்தளவுக்கு வேரூன்றி உள்ளது என்பதை இந்த தாக்குதல் விளக்குகிறது.

ஈரானிய பாதுகாப்பு ஓட்டைகளை விட, நம்பிக்கைக்குரிய இடங்களிலேயே மொசாட் வைத்திருக்கும் உளவமைப்பு தான் வியக்க வைக்கிறது.
​அயதுல்லா கொமெனியின் மறைவு, உளவுத்துறை ரீதியான இந்தத் தாக்குதல்கள் ஈரானின் அதிகார மையத்தையே உலுக்கியிருக்கிறது. மத்திய கிழக்கில் அடுத்தது என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
அதேவேளை ஈரானிய அதியுயர் தலைவர் அலி கொமேனியின் உடல் இடிபாடுகளுக்குள் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் அதியுயர் தலைவர் அலி காமேனி இஸ்ரேல் நடத்திய மிகத்துல்லியமான வான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு உத்தியோகபூர்வமாக தற்போது அறிவித்துள்ளது.
இஸ்ரேலிய வான்படை டெஹ்ரானில் உள்ள ஈரானியத் தலைமையகத்தின் மீது ‘பங்கர் பஸ்டர்’ (Bunker Buster) குண்டுகளைப் பயன்படுத்தி பாரிய தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் காமேனி தங்கியிருந்த ரகசியக் கட்டடம் முற்றாகத் தரைமட்டமானது. சனிக்கிழமை இரவு தெஹ்ரானில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், இடிபாடுகளுக்குள் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டதாக ஈரான் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
தாக்குதல் நடந்து சில மணித்தியாலங்களுக்குப் பிறகு, அந்த இடத்திலிருக்கும் இடிபாடுகளுக்குள் இருந்து 86 வயதான அலி காமேனியின் உடல் கண்டெடுக்கப்பட்டதை இஸ்ரேலியப் புலனாய்வுத் துறையினரே முதலில் கண்டறிந்தனர். ஆனால் இந்த தகவல் வெளியானதை உடனடியாக ஈரான் அரசு மறுத்தது.
1989ஆம் ஆண்டு முதல் ஈரானின் அசைக்க முடியாத சக்தியாக இருந்த ஒருவரின் முடிவு, இப்போது உலகையே உலுக்கியிருக்கிறது. அவரது கொலையை நியாயப்படுத்தி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆற்றிய உரையில், ‘இந்தச் சர்வாதிகாரி இப்போது இல்லாமல் போய்விட்டார்’ என காட்டமாக தெரிவித்துள்ளார். இதனை பிபிசி (BBC) மற்றும் ராய்ட்டர்ஸ் (Reuters) ஆகிய சர்வதேச ஊடகங்கள் உடனடியாக முக்கியச் செய்தியாகப் பதிவு செய்திருந்தன.
நெதன்யாகுவின் அந்த பேச்சின் பின்னணியில் இருக்கும் உண்மை, கொமேனியின் மரணம் முன்கூட்டியே கணித்த தாக்குதல் முயற்சி என்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
யார் இந்த கொமேனி?
ஈரானில் 1979ம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சி ஏற்பட்டது. அதற்கு முன் ஈரானில் ஆட்சி நடத்தியவர் மன்னர் ஷா எனப்படும் முகமது ரெஸா பஹலவி. அவரது ஆட்சிக்காலத்தில் ஈரான், மேற்கத்திய சார்பு நாடாக இருந்தது.
வெண்மைப் புரட்சி என்ற பெயரில் ஷா மன்னர் கொண்டு வந்த நில சீர்திருத்தமும், நவீன மயமாக்கமும், மத அடிப்படைவாதிகளுக்கு பிடிக்கவில்லை. அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். மக்கள் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர். 1977 முதல் நடந்த போராட்டங்கள், 1979ம் ஆண்டு மன்னர் ஆட்சி வீழ்த்தப்பட்டதுடன் முடிவுக்கு வந்தன.
இஸ்லாமியப் புரட்சி என்ற பெயரில் நடந்த இந்த போராட்டம் முடிவில், ருடால்ப் கொமேனி தலைமையிலான மதகுருக்கள் ஆட்சியை கைப்பற்றினர். அப்போது முதல், பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு போன்ற கடுமையான விதிமுறைகளுடன் கூடிய இஸ்லாமிய ஆட்சியை அமுல் செய்தனர். மதகுருக்கள் தான் ஆட்சியாளரை முடிவு செய்யும் முறை அமுலுக்கு வந்தது.
அப்படி 1979 முதல் ஆட்சி நடத்திய ருடால்ப் கொமேனி, 1989ம் ஆண்டு காலமானார். அவருக்கு பின், அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களில் முதன்மையானவரான அலி கமேனி ஆட்சிக்கு வந்தார். ஆனால் அவர்கள் இருவரும் வேறு வேறு நபர்கள், உறவினர்கள் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
1939ல் பிறந்த இவர், 1979ல் நடந்த இஸ்லாமியப் புரட்சியில் முக்கியப் பங்கு வகித்தார். புரட்சிக்குப் பிறகு ஈரானின் அதிபராகப் பதவி வகித்த இவர், 1989ல் முதல் உச்ச தலைவர் கொமேனியின் மறைவுக்குப் பிறகு அந்தப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது இஸ்ரேல், அமெரிக்க படை தாக்குதலில் கொல்லப்பட்ட கொமேனி 1981 முதல் 1989ம் ஆண்டு ஈரான் அதிபராகவும் இருந்தவர்.
ஷியா இஸ்லாமிய ஈரான் :
ஈரான், ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடு. இதனால், அந்த பிரிவு இஸ்லாமியர்கள், ஈரான் மதகுருவையே தங்கள் வழிகாட்டியாக கருதுகின்றனர். அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவராக கொமேனி இருந்தார். அவர் மதகுருவாக மட்டுமின்றி, நாட்டின் அரசியல் மற்றும் ராணுவ அதிகாரத்தின் முக்கிய புள்ளியாகவும் இருந்து வந்தார்.
உலகில் ஷியா பிரிவு மக்கள் வசிக்கும் நாடுகள் அனைத்துக்கும் ஈரான், நேரடியாகவும், மறைமுகமாகவும் பண உதவியும், ராணுவ உதவியும் செய்து வந்தது. இதன் பின்னணியில் இருந்தவர் கொமேனி தான். இதேவேளை சிரியா, லெபனான், ஏமன் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் ஈரானின் ஆதரவு பெற்ற குழுக்களை இயக்கி வந்தார். இதன் மூலம் அந்நாடுகளின் அரசியலில் ஈரான் செல்வாக்கு பெற்றதாக இருந்து வருகிறது.
37 ஆண்டு ஆட்சி முடிவு
அலி கொமேனி 1981 முதல் 1989 வரை ஈரானின் அதிபராகப் பணியாற்றினார். அதன்பிறகு 1989-இல் ஈரானின் அதியுயர் தலைவராகப் பொறுப்பேற்ற அவர், கடந்த 37 ஆண்டுகளாக ஈரானை வழிநடத்தி வந்தார். மத்திய கிழக்கில் ஈரானின் ஆதிக்கத்தையும், இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களையும் முன்னெடுத்த மிக முக்கியமான நபராக அவர் பார்க்கப்பட்டார். அவரது மறைவு ஈரானியப் புரட்சிகரக் காவல்படைக்கும் (IRGC) அதன் நட்பு அமைப்புகளுக்கும் விழுந்த ஈடுசெய்ய முடியாத மரண அடியாகக் கருதப்படுகிறது.
கொமேனியின் கொலையைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் ஒரு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் வெறித்தனமான பதிலடியைத் தொடுக்கலாம் என்பதால், இஸ்ரேலிய மக்கள் அனைவரும் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புப் படையில் இணைந்து பணியாற்றும் ஆலோசனைகளைத் தீவிரமாகப் பின்பற்றுமாறு நெதன்யாகு கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனாலும் ஈரான் இப்போது தனது அடுத்த தலைவரைத் தெரிவு செய்யுமா அல்லது இந்தப் போர் ஒரு மாபெரும் ஆயுதப் போராக மாறுமா என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் நிலவுகிறது. ஆனாலும் ஈரானின் அதியுயர் தலைவர் அலி காமேனியின் இந்த முடிவு மத்திய கிழக்குப் போரை முடிவுக்குக் கொண்டு வருமா என்பது சந்தேகமே.
டிரம்பின் வெற்றிப் பேச்சு:
கொமேனி மரணத்துக்கு பிறகு மார்ச் 1, 2026 அன்று நியூயார்க் டைம்ஸின் தேசிய பாதுகாப்பு நிருபர் டேவிட் இ. சாங்கர் (David E. Sanger) ஈரானுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கியுள்ள “தேர்ந்தெடுக்கப்பட்ட போர்” (war of choice) பற்றி ஆய்வை மேற்கொண்டார். டிரம்ப் ஈரானுக்கு எதிராக பெரிய அளவிலான இராணுவ தாக்குதலைத் தொடங்கியுள்ளமை “தேவையில்லாத” அல்லது “தேர்ந்தெடுக்கப்பட்ட” போர் என்றும் விவரித்துள்ளார்.
அதாவது, ஈரானிடமிருந்து உடனடி அச்சுறுத்தல் இல்லாத நிலையில், டிரம்ப் போரைத் தொடங்கியுள்ளார்.
மேலும் ஈரானிய மக்களை அரசாங்கத்தைக் கவிழ்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். “உங்கள் சுதந்திரத்திற்கான நேரம் வந்துவிட்டது. நாங்கள் முடித்த பிறகு உங்கள் அரசாங்கத்தை நீங்கள் ஆட்சியை கைப்பற்றுங்கள்” என்று டிரம்ப் தெரிவித்தார். அதே சமயம் தெஹ்ரானில் பாரிய குண்டுகள் விழும் என எச்சரித்து வீட்டிலேயே இருக்கச் சொன்னார்.
தற்போதய ஈரான் மீதான தாக்குதலின் நோக்கம், ஈரானின் இராணுவத்தை அழிப்பது, அணு ஆயுதத் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவது, ஆயத்துல்லா அலி கொமெனி தலைமையிலான ஆட்சியை மாற்றுவது என்றும் டிரம்ப் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. ஈரான் அரசின் பலவீனமான இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, மக்கள் எழுச்சியை ஏற்படுத்தி ஆட்சி மாற்றம் செய்யலாம் என்று டிரம்ப் நம்புவதாகத் தெரிகிறது.
ஆனாலும் இந்த விவகாரத்தில் பல விமர்சனங்களை அரசியல் தலைவர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.
மேலும் இராணுவ ஆய்வாளர்கள் இதை ஆபத்தானது, அமெரிக்கர்களை ஆபத்தில் ஆழ்த்துவது, காங்கிரஸ் ஒப்புதல் இல்லாமல் தொடங்கப்பட்டது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை இராஜதந்திர வழிகள் முயற்சிக்கப் படவில்லை என்று கூறுகின்றனர். இது ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற முந்தைய போர்களை நினைவூட்டுவதாகவும், அமெரிக்காவைப் பாதுகாப்பற்றதாக ஆக்கும் என்றும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் ஈரானில் ஒரு சகாப்தம் முடிவுற்றதாகவே கருதப்படுகிறது.
கொமேனிக்கு பின்னரான புதிய தலைமை யார் என்பதை அறிய மேற்குலக நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. ஆனால் அடுத்த தலைமையும் கொமேனி பாதையில் பயணிப்பார்களா அல்லது மேற்குலகுடன் ஒத்துப் போகிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *