மாத்தளை முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று

மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று திங்கட்கிழமை காலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
5 தேர்கள் வீதியுலா சென்று நாளை மறுதினம் 03ஆம் திகதி மாலை 6 மணிக்கு இருப்பிடத்தை வந்தடைடையவுள்ளன.
இந்த தேர்த்திருவிழாவில் கலந்துகொள்ள நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெருமளவிலான பக்தர்களும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, இரதபவனியின்போது மாத்தளை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், கண்டி – தம்புள்ளை பிரதான வீதியைப் (ஏ9) பயன்படுத்தும் சாரதிகள் பின்வரும் மாற்று வழிகளைப் பின்பற்றுமாறு பொலிஸாரால் கோரப்பட்டுள்ளனர்.
இதன்படி, கண்டியிலிருந்து தம்புள்ளை நோக்கிச் செல்பவர்கள், கும்பியன்கொட வீதி வழியாக சென்று, கும்பியன்கொட பாலத்திற்கு அருகிலுள்ள ஹலங்கமுவ வீதி ஊடாக ஒசானே மாத்தளை நகரின் ரஜ வீதியை அடைந்து, அங்கிருந்து தம்புள்ளை நோக்கி பயணிக்க முடியும்.
தம்புள்ளையிலிருந்து கண்டி நோக்கிச் செல்பவர்கள், தோட்டகமுவ சந்தியிலிருந்து இடதுபுறமாக உள்ள இம்புலந்தண்ட வீதி ஊடாகப் பயணித்து, தன்கமுவ சந்தியிலிருந்து வலதுபுறமாக உள்ள பரவத்த வீதி வழியாக தலுதவெலவை அடைய வேண்டும். அங்கிருந்து ரத்துவொட்ட வீதி ஊடாக வேரகமையை அடைந்து, கிவுல சந்தி ஊடாக மாத்தளை – கொங்காவல வீதிக்கு பிரவேசித்து கண்டி வீதியை அடைய முடியும்.
இன்று தேர்கள் நகரின் பிரதான வீதி ஊடாகப் பயணித்து முடிவடைந்ததும், ரஜ வீதி ஊடாக தம்புள்ளை மற்றும் கண்டி திசைகளுக்கான போக்குவரத்து வழமைக்குத் திரும்பும்.
நாளை 3ஆம் திகதி , தேர்கள் ரஜ வீதி ஊடாகப் பயணித்து முடிவடைந்ததும், பிரதான வீதி ஊடாக இரு திசைகளுக்குமான போக்குவரத்து வழமைக்குத் திரும்பும்.
![]()