இலங்கை

சுரேஷ் சலே போன்று கைது செய்ய இன்னமும் பலர் இருக்கிறார்கள்;  சாட்சிகள் வழங்க பலர் தயார் -சாணக்கியன் எம்.பி.தெரிவிப்பு

இந்த அரசாங்கத்தினால் சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய ஒரு விசாரணையை நடத்தினால் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விடயமாக இருக்கட்டும், பொறுப்பு கூறல் விடயமாக இருக்கட்டும் நிரந்தரமான ஒரு தீர்வை அரசு வழங்கக் கூடியதாக இருக்கும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மொட்டு, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டுக் கட்சியாக அல்லது கூட்டணியாக இலங்கை தமிழரசு கட்சி செல்லும் என்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திற்குட்பட்ட ரமேஷ்புரம், கணபதி நகர், ஐயன்கேணி ஆகிய அறநெறி பாடசாலைகளில் கல்வி கற்கும் 6ம் தரத்திற்கு மேற்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ரமேஷ்புரம் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உறுப்பினரும் ஊடகவியலாளருமான செல்வகுமார் நிலாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது மேலும் கருத்துதெரிவித்த சாணக்கியன்,

சுரேஷ் சலேயினுடைய கைது சம்பந்தமாக உண்மையில் நான் 2023 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் பல விடயங்களை நாங்கள் வெளிப்படுத்தி இருந்தோம். சர்வதேச விசாரணை வந்தால் தான் எங்களுடைய சாட்சியங்களை ஒப்படைக்கலாம் என்று கூறியிருந்தோம். இன்று சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் இன்றும் சாட்சிகள் வழங்குவதற்கு பலர் இருக்கின்றார்கள்.

சுரேஷ் சலேயின் கைது மூலம் இலங்கை வரலாற்றில் நடக்காதது நடந்திருக்கின்றது.

அரசாங்கத்தில் இந்த நல்ல விடயங்களை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். நல்ல விடயங்களை நாங்கள் மறுப்பது கிடையாது. அந்த வகையில் சுரேஷ் சலே போன்று உயர்மட்ட இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரிகளை கைது செய்வது இந்த அரசாங்கம் செய்துள்ள பெரியதொரு விடயம். ஆனால் இன்னமும் பலர் இருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நான் நினைக்கின்றேன் 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையும் அதனைத் தொடர்ந்தும் இராணுவ புலனாய்வுத் துறை செய்த பல விடயங்கள் தொடர்பாக பலர் கருத்துக்களை முன் வைத்திருக்கின்றார்கள். நாங்களும் பாராளுமன்றத்தில் இந்த விடயங்களையும் கூறி இருக்கின்றோம்.

இந்த விடயங்கள் தொடர்பாகவும் சர்வதேச மேற்பார்வையுடன் ஒரு விசாரணையை இந்த அரசாங்கம் செய்யுமாக இருந்தால் அரசுக்கு ஒரு நிரந்தரமான வெற்றி கிடைக்கும். அது ஒரு புறம் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விடயமாக இருக்கட்டும், பொறுப்பு கூறல் விடயமாக இருக்கட்டும் நிரந்தரமான ஒரு தீர்வை அரசு வழங்கக் கூடியதாக இருக்கட்டும் சர்வதேச அங்கீகாரத்துடன் ஒரு விசாரணையை நடத்த வேண்டும் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *