உலகம்

மத்திய கிழக்கில் பல நாடுகள் மீது தாக்குதல்; அணு ஆயுதப் போராக மாறுமா?; ‘அழுக்குக் குண்டும் ‘,அணு குண்டும் வீசப்படலாமென பெரும் அச்சம்

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை மத்திய கிழக்கு முழுவதும் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள ஈரான், டுபாய் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் தற்கொலைத் தாக்குதல் ட்ரோன்களை ஏவியுள்ளது.சவுதி அரேபியாவின் தலைநகரிலும் வெடிச்சத்தங்கள் கேட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வர் மற்றும் குறைந்தது இரண்டு உயர்மட்ட இராணுவத் தலைவர்கள் அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்தியதையடுத்து, இந்த பழிவாங்கும் தாக்குதல்கள் தொடங்கின.

அலி கமேனி கொல்லப்பட்டதை அடுத்து, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மத்திய கிழக்கு முழுவதும் உள்ள முக்கிய அமெரிக்க இராணுவ மையங்களைக் குறிவைத்து தாக்குதலை தொடங்கியுள்ளது. “ஒபரேஷன் ட்ரூத்ஃபுல் ப்ராமிஸ் 4” என பெயரிடப்பட்டுள்ள இந்த தாக்குதலில், ஆறு மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஏழு அமெரிக்க இராணுவ தளங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கடுமையான எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும், தனது தலைநகரின் ‘இதயப்பகுதியில்’ ஏவுகணைகள் விழுந்த நிலையிலும், ஈரான் தனது தாக்குதல்களை விரிவுபடுத்தியுள்ளது. மேலும், ‘வரலாற்றிலேயே மிக தீவிரமான தாக்குதல் நடவடிக்கையை’ முன்னெடுக்கப் போவதாகவும் தெஹ்ரான் சபதம் செய்துள்ளது.

“எங்கள் தலைவரைத் தொட்டுவிட்டீர்கள்… இனி உங்கள் நகரங்களில் நிம்மதி இருக்காது!” – இது ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையான IRGC-யிடமிருந்து கசிந்திருக்கும் இரகசிய எச்சரிக்கை. ஈரானின் ஆன்மீக மற்றும் அரசியல் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்(86 வயது) மறைவுக்குப் பிறகு, ஈரான் தனது ‘கடைசி ஆயுதத்தை’ கையில் எடுக்கப்போவதாக சர்வதேச உளவுத் துறைகள் அலறுகின்றன. அதுதான் அந்தப் பயங்கரமான’அழுக்கு குண்டு’ ! (டேர்ட்டி பாம்-Dirty Bomb)

பெப்ரவரி 2026-ன் கடைசி நாட்கள் உலக வரலாற்றில் ஒரு கறுப்புப் பக்கமாக எழுதப்படவுள்ளன. பல ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஈரானின் உச்ச அதிகார மையம், சிதைந்து போயுள்ளது. மார்ச் 1-ம் திகதியான நேற்று காலை, ஈரானிய அரசு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக அந்தச் செய்தியை வெளியிட்டன: “ஈரானின் ஆன்மீக மற்றும் அரசியல் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.”

கடந்த சில நாட்களாகவே இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கும் இடையே ரகசிய ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வந்தன. நேற்று முன்தினம் (பெப்ரவரி 28), தெஹ்ரானில் உள்ள கமேனியின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஒரு அதிரடி வான்வழித் தாக்குதலை நடத்தின.

‘பங்கர்-பஸ்டர்’ (Bunker-buster) ரக ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், கமேனி தங்கியிருந்த தரைக்கடி சுரங்கங்கள் தகர்க்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் கமேனி மட்டுமின்றி, அவரது குடும்பத்தினர் பலரும் கொல்லப்பட்டனர். இதையடுத்தே ஈரான் ‘டேர்ட்டி பாம்’ (Dirty Bomb) பயன்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இது ஒன்றும் சாதாரண அணுகுண்டு (Atomic Bomb) கிடையாது. அணுகுண்டு என்பது ஒரு நகரத்தையே சில நொடிகளில் தரைமட்டமாக்கி, லட்சக்கணக்கானவர்களை எரித்துவிடும். ஆனால், ‘டேர்ட்டி பாம்’ என்பது ஒரு ‘மெதுவான மரணம்’.

இதன் தொழில்நுட்பம் மிக எளிமையானது, ஆனால் விளைவு கொடூரமானது: சாதாரண வெடிமருந்துகளுடன் (Dynamite), கதிரியக்கப் பொருட்களை (Radioactive materials like Caesium-137 or Cobalt-60) சேர்த்து இந்த குண்டு தயாரிக்கப்படுகிறது

இந்த குண்டு வெடிக்கும்போது, பெரிய கட்டிடங்கள் இடியாது. ஆனால், கண்ணுக்குத் தெரியாத கதிரியக்கத் துகள்கள் (Radioactive dust) காற்றில் பல கிலோமீற்றர் தூரத்திற்குப் பரவும். அதைச் சுவாசிக்கும் மக்கள், புற்றுநோய் முதல் மரபணு பாதிப்பு வரை பல்வேறு நோய்களுக்கு ஆளாகி மெல்ல மெல்ல மடிவார்கள். அந்தப் பகுதி பல தசாப்தங்களுக்கு மனிதர்கள் வாழத் தகுதியற்ற ‘பேய் நகரமாக’ (Ghost Town) மாறிவிடும்.

ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்கள் அமெரிக்கத் தாக்குதலில் சேதமடைந்திருக்கலாம். முழுமையான அணு ஆயுதத்தை ஏவும் வசதி இப்போது ஈரானிடம் இல்லை என்றாலும், மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் உள்ள கதிரியக்கக் கழிவுகளை வைத்து இந்த ‘டேர்ட்டி பாம்’-களை மிக எளிதாக உருவாக்க முடியும்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் முக்கிய நகரங்களான வாஷிங்டன் அல்லது டெல் அவிவ் நகரின் மையப்பகுதியில் ஒரு சிறிய ‘டேர்ட்டி பாம்’ வெடித்தால் கூட, அந்தப் பொருளாதார மையங்கள் அடுத்த 50 ஆண்டுகளுக்கு முடக்கப்படும்.

உயிரிழப்புகளை விட, ‘கதிரியக்கம் பரவிவிட்டது’ என்ற பயமே அந்த நாட்டை நிலைகுலையச் செய்துவிடும். இதுதான் ஈரானின்உளவியல் போர் முறை(சைக்கோலோஜிக்கல் வார்ஃபயர்’-Psychological Warfare).

உலகப் போர் 3-க்கான ‘சிக்னல்’? “ஈரான் இந்த டேர்ட்டி பாமை ஒருமுறை பயன்படுத்தினாலும் போதும்… அதற்குப் பதிலடியாக அமெரிக்கா தனது முழுமையான அணு ஆயுதங்களை (Nuclear Arsenal) ஏவும்!” என எச்சரிக்கிறார்கள் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள். அப்படி நடந்தால், அது ஒரு பிராந்தியப் போராக இருக்காது; ஒட்டுமொத்த பூமியின் அழிவுக்கான தொடக்கமாக இருக்கும்.

தற்போது வளைகுடா நாடுகளில் பதற்றம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் இரகசியக் ஆயுதக் கிடங்குகளில் இருந்து ஏவுகணைகள் நகர்த்தப்படுவதாகச் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. அந்த ஏவுகணைகளின் தலையில் இருப்பது சாதாரண வெடிமருந்தா அல்லது இந்த ‘அழுக்கு குண்டா’? என்பதுதான் இப்போதைய மர்மம்!

இந்த நிலையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும், நேற்று அதன் தலைநகரான தெஹ்ரானின் ‘இதயப் பகுதியில்’ ஏவுகணைகள் தாக்கிய நிலையிலும், ஈரான் தனது குண்டுவீச்சை விரிவுபடுத்தியுள்ளதுடன், வரலாற்றிலேயே ‘மிகவும் தீவிரமான தாக்குதல் நடவடிக்கையை’ மேற்கொள்ளவுள்ளதாக சூளுரைத்துள்ளது.

அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வர் மற்றும் குறைந்தது இரண்டு உயர்மட்ட இராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த பழிவாங்கும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானில் உள்ள இலக்குகள் மீது கூட்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தின.

ஈரானியர்கள் எழுச்சி பெற்று அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்று ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளனர்.

ஈரான் மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மற்றும் பிற இலக்குகளை நோக்கி பதிலடித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.

மேலதிக குண்டுவீச்சுகளுக்கு அமெரிக்கா சக்திவாய்ந்த முறையில் பதிலடி கொடுக்கும் என்றும், இந்த நடவடிக்கை பல வாரங்கள் நீடிக்கலாம் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரானிய ஏவுகணைகள் மற்றும் தற்கொலை ட்ரோன்கள் (suicide drones) இரண்டாவது நாளாக மத்திய கிழக்கைத் தாக்கி வருகின்றன, மேலும் பல நாடுகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.

நேற்றுக் காலை முதல் டுபாயைச் சுற்றி பல சுற்று வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. கடந்த சில மணிநேரங்களில், சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் குடியிருப்பாளர்களும் பல பலத்த வெடிப்புச் சத்தங்களைக் கேட்டதாகத் தெரிவித்தனர்.

கட்டார் , இஸ்ரேல், பஹ்ரைன், குவைத் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் இரண்டாவது நாளாகவும், ஓமானில் முதல் முறையாகவும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன, இருப்பினும் பெரும்பாலான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.

சைப்ரஸில் உள்ள பிரிட்டிஷ் இராணுவத் தளங்களை நோக்கி ஈரான் இரண்டு ஏவுகணைகளை ஏவியதாக பிரிட்டன் பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி வெளிப்படுத்தினார்.

பிராந்தியத்தில் உள்ள 27 அமெரிக்க தளங்களைத் தாக்கியதாக ஈரான் உரிமை கோரியுள்ளது, ஆனால் குடியிருப்பு கோபுரங்கள் மற்றும் சொகுசு ஹோட்டல்கள் உள்ளிட்ட பிற இடங்களையும் அது தாக்கியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கையில், நேற்று முன்தினம் இரவு வரை 137 பலஸ்டிக் ஏவுகணைகள் ஈரான் தரப்பிலிருந்து ஏவப்பட்டதாகவும், அவற்றில் 132 வான் பாதுகாப்புப் படையினரால் அழிக்கப்பட்டதாகவும், ஐந்து பாரசீக வளைகுடாவில் விழுந்ததாகவும் கூறியது. மேலும் 209 தற்கொலை ட்ரோன்களால் இலக்கு வைக்கப்பட்டதாகவும், அவற்றில் 195 இடைமறிக்கப்பட்டன என்றும் 14 ட்ரோன்கள் இலக்குகளைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹ்ரைனில் உள்ள கிரவுன் பிளாசா (Crowne Plaza) ஹோட்டல் இன்று காலை புகைந்து கொண்டிருந்தது, அதில் ஒரு ‘சம்பவம்’ நடந்ததாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர், ஆனால் விருந்தினர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். பஹ்ரைனின் வான் பாதுகாப்புப் படையினர் இரவு முழுவதும் குறைந்தது 45 ஏவுகணைகள் மற்றும் ஒன்பது ட்ரோன்களை இடைமறித்ததாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஓமானின் முசந்தம் (Musandam) கடற்கரையில் எண்ணெய் கப்பல் ஒன்று தாக்கப்பட்டதில் நான்கு பேர் காயமடைந்தனர் மற்றும் 20 பேர் கொண்ட குழுவினர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சவுதி அரேபியா, ஈரான், ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற முக்கிய வளைகுடா உற்பத்தியாளர்களை இணைக்கும் உலகின் மிக முக்கியமான எண்ணெய் கப்பல் வழித்தடங்களில் ஒன்றான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.

மத்திய கிழக்கின் வான்வெளி முற்றிலும் காலியாக உள்ளது, பெரும்பாலான விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 20,000 விமானங்கள் தாமதமாகியுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *