இலங்கை

மத்திய கிழக்கிற்கான விமானங்கள் ரத்து; இலங்கைக்குள் முடங்கிய வெளிநாட்டுப் பயணிகள் !; விசா சலுகைக் காலம் நீடிப்பு

இலங்கையிலுள்ள சுற்றுலா பயணிகளின் விசா சலுகைக் காலத்தை அரசாங்கம் ஒரு வாரத்திலிருந்து இரண்டு வாரங்களாக நீட்டித்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றத்தினால் விமானங்கள் இரத்து மற்றும் இடையூறுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால் நாட்டை விட்டு வெளியேற முடியாத வெளிநாட்டினரின் விசா காலத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இந்த விசேட அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார்.

முன்னதாக ஒரு வாரமாக (7 நாட்கள்) அறிவிக்கப்பட்டிருந்த விசா சலுகை காலம், தற்போது இரண்டு வாரங்களாக (14 நாட்கள்) அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு வான்பரப்புகள் மூடப்பட்டமை மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட வானூர்தி சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் வெளிநாட்டுப் பயணிகள் அவர்களது நாடுகளுக்கு திரும்புவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் எவ்வித அபராதமுமின்றி மேலதிகமாக 14 நாட்கள் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கின் இராணுவ நிலைமை காரணமாக அப் பிராந்திய வான்வெளி வழியாக செல்லும் அனைத்து விமானங்களையும் நிறுத்தி வைக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, இலங்கையை விட்டு வெளியேற முடியாத பயணிகள் சிரமங்களை எதிர்கொள்வார்கள். இதைக் கருத்தில் கொண்டு, இந்த விசா கால நீடிப்புகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அவர்கள் புறப்படும் ஏற்பாடுகள் செய்யப்படும் வரை அவர்கள் சிரமமின்றி நாட்டில் தங்க அனுமதிக்க பொருத்தமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *