மத்திய கிழக்கில் போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட 54 விமான சேவைகள் நிறுத்தம்!

மத்திய கிழக்கின் வான்பரப்பு அநேகமான பகுதிகளில் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதன் காரணமாக,நேற்று ஞாயிற்றுக்கிழமைக்குரிய அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் பல் நாடுகளின் வான்பரப்பு மூடல் காரணமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பின்வரும் இருவழிப் பயணங்கள் நேற்று இரத்து செய்யப்பட்டுள்ளன:
துடுபாய்: UL231/232 மற்றும் UL225/226, தோஹா: UL217/218,
தம்மாம்: UL253/254, ரியாத்: UL265/266, குவைத்: UL229/230.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் இலங்கைக்கு வரும் மற்றும் இலங்கையிலிருந்து புறப்படும் மொத்தம் 54 விமானப் பயணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் இலங்கைக்கு வரவிருந்த 28 விமானச் சேவைகளும், இங்கிருந்து புறப்படவிருந்த 26 விமானச் சேவைகளும் அடங்குவதாக விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தத் திடீர் இரத்துச் செய்திகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். மேலதிக விபரங்கள் மற்றும் மாற்று ஏற்பாடுகள் குறித்து அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்புகொள்ளுமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பற்ற நிலைமை காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
![]()