யாழ்.இராணுவத் தலைமையத்தை கிளிநொச்சிக்கு அப்பால் நகர்த்த சதி; சலேயை விடுதலை செய்யும் வரை போராட்டம்

யாழ்ப்பாண இராணுவ தலைமையத்தை அந்த பகுதியில் இருந்து அகற்றி கிளிநொச்சிக்கு கொண்டுவருவதாக தெரிவித்தபோதும் அதனையும் விட தூரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே உயிரை பணயம் வைத்து நாட்டை பாதுகாத்த இராணுவ வீரர்எனவும் அவரது கைது தமிழ் டயஸ்போராவை மகிழ்ச்சிப்படுத்தும் நடவடிக்கை என்பதால் சலேயை விடுதலை செய்யும்வரை போராடும் போராட்டம் ஒன்றுக்கு நாங்கள் தயாராக வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரு் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அரசால் கைதுசெய்யப்பட்டிருக்கும் சுரேஷ் சலேயை விடுதலை செய்யும் வகையில், மக்களை தெளிவுபடுத்தும் கூட்டம் ஒன்று கொழும்பில் இடம்பெற்றது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்,
தேசிய பாதுகாப்பு திட்டமிட்டவகையில் பலவீனப்படுத்தப்பட்டிருக்கிறது. கிளிநொச்சியில்,முல்லைதீவில் இன்று ஒரு இராணுவ முகாம்கூட இல்லை. யாழ்ப்பாண இராணுவ தலைமையத்தை அந்த பகுதியில் இருந்து அகற்றி கிளிநொச்சிக்கு கொண்டுவருவதாக தெரிவித்தபோதும் அதனையும் விட தூரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியி்ல் மேலதிகமாக இருந்த ராணுவத்தினரை கடந்த காலங்களில் அகற்றிய பின்னர் பாதுகாப்புக்கு தேவையான முகாம்கள் மாத்திரமே வைக்கப்பட்டிருந்தன. அதனையும் குறைப்பதானது தமிழ் டயஸ்போராக்களை மகிழ்ச்சிப்படுத்துவதாகும். இவர்கள் அதிகாரத்துக்கு வரும்போதே இந்த டயஸ்போராக்களுடன் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக்கொண்டிருந்ததனர்.
அந்த இணக்கப்பாட்டுக்கமையவே தற்போது செயற்படுகின்றனர். பிரபாகரனின் தாய் வீட்டை புனரமைத்து மேல் மாடியில் நூலகம் அமைக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. அந்த வீட்டுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருக்கும் பதாதையில், கெளரவ தமிழீழ ஜனாதிபதி என எழுதப்பட்டுள்ளது. அங்கவீனமுற்ற இராணுவத்தினருக்கு இவற்றை பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இராணுவத்தினரை மன ரீதியாக வீழ்த்துவதற்கா நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
அந்த பின்னணியில் தற்போது புலனாய்வு துறை, இராணுவ அதிகாரிகளை கைதுசெய்யும் நடவடிக்கையை ஆரம்பித்திருக்கிறது. இதுவரை பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். பிரிவினைவாதிகளுடனான இணக்கப்பாடே இது இடம்பெறுகிறது. அடுத்தபடியாக மாகாணசபை தேர்தலை நடத்துவதாகும். ஆனால் இவர்கள் வடக்கு கிழக்கு மாகாணசபை தேர்தலை மாத்திரம் நடத்தும் நிலையே இருக்கிறது. அத்துடன் நிறைவடைவதில்லை. அடுத்தபடியாக அந்த மாகாணசபைக்கான முதலமைச்சர் ஒருவரையும் நியமிப்பார். அதுதான் டயஸ்போராவுடன் இருக்கும் அநுரகுமாரவின் டில். அதன் பின்னர் முதலமைச்சருக்கு தேவையான ஆளுநர் ஒருவரை நியமிப்பார். அதன் பின்னர் அவர்களுக்கு தேவையான கட்டளைச்சட்டங்களை கொண்டுவந்து ஆளுநரின் கையெழுத்தை பெற்றுக்கொள்வார்கள். இறுதியாக வடக்கு கிழக்கில் இறையாண்மைகொண்ட ஆட்சி முறை ஒன்று அங்கு உருவாக்கப்படும்.
அதன் பின்னர் மத்திய அரசாங்கத்துக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டதுடன் சர்வதேசம் தலையிட்டு, அதனை பிரித்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.அந்த இடத்துக்கு செல்வதற்கே தற்போது அரசாங்கம் பயணிக்கிறது.
மேலும் தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே யுத்தத்தின்போது மேற்கொண்ட பணி மிகவும் பாராட்டத்தக்கதாகும். புலனாய்வு துறையில் இருந்த அவர், விடுதலை புலிகளில் இருந்து தகவல் பெற்றே தமிழ்ச்செலவனை கொலை செய்ய நடவடிக்கை எடுத்தார். அதேபோன்று ஆரம்ப காலத்தில் சஹ்ரானையும் புலனாய்வு தகவல்களை பெற்றுக்கொள்ள பயன்படுத்தி இருக்கிறார். அதுதான் புலனாய்வு அதிகாரிகளின் ஆளுமை. அதற்காக இவர்கள் விடுதலை புலிகளுடன் தொடர்புடையவர் என தெரிவிக்க முடியாது.
பொய் சாட்சிகளை உருவாக்கி ஒருவரை குற்றவாளியாக்கும் திறமை ஷானி அபேசேகரவுக்கு இருக்கிறது. அதன் பிரகாரமே தற்போது சலேயை கைது செய்திருக்கிறார்கள். இவ்வாறு புலனாய்வு அதிகாரிகள் ராணுவ வீரர்கள் கைதுசெய்யப்படும் நிலை எற்பட்டுள்ளதால், தற்போது புலனாய்வு துறைக்கு இணைந்துகொள்பவர்கள் குறைவு. யாரும் விரும்பி இந்த துறைக்கு வருவதில்லை. சலே போன்றவர்கள் பாரிய சேவையை புலனாய்வு துறையில் மேற்கொண்டார்கள்.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்காக சலேயை கைது செய்வதாக இருந்தால், அது அரசியல் நோக்கம் கொண்டதாகும். அதற்கு யாராவது ஆதரவு தெரிவிப்பதாக இருந்தால் அதுவும் அரசியலாகும். பாரிய காட்டிக்காெடுப்பாகும். தமிழ் டயஸ்போராவை மகிழ்ச்சிப்படுத்தும் நடவடிக்கையாகும். அதனால் சலேயை விடுதலை செய்யும்வரை போராடும் போராட்டம் ஒன்றுக்கு நாங்கள் தயாராக வேண்டும். அவ்வாறு நாங்கள் அதனை செய்ய முன்வராவிட்டால் நாங்கள் மிகவும் கீழ்த்தரமான இனமாக மாறுவோம் என்றார்.
![]()