இலங்கை

சுரேஷ் சலேயை கைது செய்ததன் மூலம் பிரிவினைவாதிகளை மகிழ்விக்க அநுர முயற்சி

பிரிவினைவாதிகளையும், கத்தோலிக்கர்களையும் மகிழ்ச்சிப்படுத்தவே சுரேஷ் சலேயை அரசாங்கம் கைது செய்துள்ளது . பிரிவினைவாதிகளை மகிழ்ச்சிப்படுத்தும் விடயத்தை ஜனாதிபதி தொடர்ந்து மேற்கொண்டுவருகிறார். யாழ்ப்பாணத்துக்கு சென்றும் அதனையே மேற்கொண்டிருந்தார். சுரேஷ் சலேயின் கைது யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினரை புலனாய்வுத்துறையை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கை என சிறிலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரல குற்றம்சாட்டினார்

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி லேயே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நீதியை நிலைநாட்டுவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கத்துக்கு 16 மாதங்கள் கடந்தும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை . கடந்த ஏப்ரல் மாதம் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவதாகவே ஜனாதிபதி உறுதியளித்தார்.அதனை நிறைவேற்ற முடியாமல் போனதால், தற்போது இந்த ஏப்ரல் மாதமாகும்போது, இதுதொடர்பில் ஏதனையாவது மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக தற்போது உளவுத்துறையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேயை கைது செய்துள்ளனர் .

சுரேஷ் சலேயை கைது செய்துள்ளதன் மூலம் ஜனாதிபதி பிரிவினைவாதிகளையும், கத்தோலிக்க மக்களையும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களையும் மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறார். பிரிவினைவாதிகளை மகிழ்ச்சிப்படுத்தும் விடயத்தை ஜனாதிபதி தொடர்ந்து மேற்கொண்டுவருகிறார். யாழ்ப்பாணாத்துக்கு சென்றும் அதனையே மேற்கொண்டிருந்தார்.

அதேபோன்று தற்போது நிலக்கரி மோசடி தொடர்பில் அரசாங்கத்துக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை மறைப்பதற்கும் ராஜபக்சக்களுக்கு ஆதரவாக மக்கள் தற்போது ஒன்றுசேர்வதை தடுப்பதற்காகவுமே இந்த கைது இடம்பெற்றிருக்கிறது. மக்களுக்கு அளித்த வாக்குறுதியை ஜனாதிபதிக்கு நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போயிருப்பதால், இந்த தாக்குதல் தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டிய ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன ஆகியோரை பயன்படுத்தியே சலே கைது செய்யப்பட்டிருக்கிறார்.ஆனால் இவர்கள் இரண்டு பேருக்கும் எதிராக வழக்கு தொடுக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது .

அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சாரா ஜெஸ்மின் தப்பிச்செல்லும்போது கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக இருந்தவர் தற்பாேதைய பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர. அதனால் அருண ஜயசேகர, ஷானி அபேசேகர,ரவி செனவிரத்ன மற்றும்ஜே .வி.பி.யின் தேசியப்பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்டிருந்த இப்ராஹிமுடைய மகன்களே குண்டுதாரிகளாக இருந்தனர். சலேயை கைது செய்துள்ளதன் மூலம் ஜனாதிபதி தனது அரச புலனாய்வு துறையை பலவீனப்படுத்தியுள்ளார் . எந்தவொரு நாட்டினதும் அரச தலைவர் தனது அரச புலனாய்வு துறையை பலவீனப்படுத்த முயற்சிப்பதில்லை.

ஆனால் இந்த ஜனாதிபதியும் அரசாங்கமும் பிரிவினைவாதிகளை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக தனது அரசை, புலனாய்வுத்துறை பலவீனப்படுத்தி வருகிறார்கள். இந்த கைதானது யுத்தத்தை வெற்றிகொள்ள உயிர் தியாகம் செய்தவர்களின் தாய் தந்தையர் மற்றும் உறவினர்களை நோகடிக்கும் செயல் . யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினரை, புலனாய்வுத்துறையை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கை என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *