முச்சந்தி

வளைகுடாவில் மீண்டும் அமெரிக்க ஆதிக்கம்: ஈரானின் தலைவிதி மாற்றம் பெறுமா ?…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(வரலாற்றிலேயே மிக முக்கியமான நிலையில் ஈரான் அரசு ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது. ஈரானில் இராணுவ ஆட்சி, அமெரிக்க பொம்மையாட்சி, ஜனநாயக ஆட்சி ஆகிய மூன்று முடிவுகளில் எதுவும் சாத்தியமாகலாம் என்ற நிலை உள்ளது)
எந்தப் போரிலும் முதலில் பலியாவது ஊடக உண்மை என்பார்கள். அதற்கு ஒப்ப தற்போது நிகழும் ஈரான் மீதான தாக்குதலில் ஊடக உண்மை முழுமையாக மழுங்கடிக்கப்பட்டுள்ளது. மேற்குலக ஊடகங்கள் கூறுவதை ஈரானிய சுயாதீன ஊடகங்கள் கூட மறுத்துள்ளன. தற்போது அமெரிக்க- இஸ்ரேலிய அரசுகள் ஈரான் ஆன்மீக தலைவர் கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளனர். ஆனால் ஈரான் உயர் தலைவர் அயதுல்லா கொமேனி, ஜனாதிபதி பெஷேஷ்கியன் மற்றும் அனைத்து உயர் அதிகாரிகளும் உயிருடன் உள்ளனர் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அராச்சி உறுதிப்படுத்தி உள்ளார். ஆனாலும் இதுவரை எந்தவொரு சுயாதீன ஊடகங்களும் உண்மையை உறுதிப்படுத்தவில்லை.
மீண்டும் ஈரான் – இஸ்ரேல் போர் :
ஈரானின் இதயப்பகுதியை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரானில் தான் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். ஈரான் அரசின் முக்கிய அலுவலகங்கள் இங்கு தான் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் இஸ்ரேல், ஈரானின் இதயப்பகுதியான டெஹ்ரானை குறிவைத்து தாக்கி உள்ளது. மேலும்
ஈரானின் பல்வேறு முக்கிய இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி உள்ளது. இஸ்ரேலின் ஏவுகணைகள் ஈரான் தலைநகரில் பல இடங்களில் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனாலும் ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி இஸ்ரேல் தாக்குதலுக்கு நடுவே எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.
எதிர்பார்க்கப்பட்ட ஈரான் – இஸ்ரேல் இடையே கடும் போர் வெடித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாதுகாப்பான இடங்களில் பதுங்க வேண்டும் என்று ஈரான் அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
அதன்படி டெஹ்ரானின் ஜோம்ஹரி சதுக்கம், ஹாசன் அபாத் சதுக்கம் உள்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்டமாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக டெஹ்ரானில் உள்ள ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகத்தை குறிவைத்து ஏழு ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் அலுவலகத்தினை தாக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அயதுல்லா அலி கமேனி தற்போது சுரங்கத்துக்குள் ரகசியமாக பதுங்கி உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் ஈரான் உளவுத்துறை அலுவலகம், பாதுகாப்பு துறை அமைச்சகம், அணுசக்தி திட்டங்களின் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் ஈரானின் சகாபர் கடற்கரை மற்றும் பாரசீக வளைகுடா கடற்பகுதிகளிலும் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்கி உள்ளது. இதனால் ஈரான் மோசமான விளைவுகளை சந்திக்க உள்ளது.
ஈரானின் பதிலடி:
பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதலை தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக முப்பது ஏவுகணைகள் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவை நோக்கி ஈரான் அனுப்பி உள்ளது. இதனால் மீண்டும் இஸ்ரேல் – ஈரான் இடையே போர் தீவிரம் அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானின் புதிய தொழில்நுட்பமான மணிக்கு 9,800 கி.மீ வேகமாக செல்லும் ஏவுகணைகளைத் தடுக்க முடியாமல் இஸ்ரேலின் உலகத்தரம் வாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் முழுமையாகத் தோல்வியடைந்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல் அவிவ் தலைநகரில் ​ செயலிழந்த பாதுகாப்பு வளையங்கள்
​உலகின் மிகச்சிறந்த மற்றும் பல அடுக்கு பாதுகாப்பு அமைப்புகளாகக் கருதப்படும் கஅமைப்புகள் ஈரானின் ஏவுகணைகளை இடைமறிக்க முடியாமல் திணறியுள்ளன என்றும் செய்திகள் கூறுகின்றன.
அமெரிக்கத் தயாரிப்பான ​THAAD & Patriot பாதுகாப்பு அமைப்புகள் ஏவுகணைகளை அடையாளம் காண்பதற்கு முன்பே தாக்குதல் இஸ்ரேல் மீது நடாத்தப்பட்டுள்ளது. அதேவேளை வான்வெளியிலேயே ஏவுகணைகளை அழிக்கும் திறன் கொண்ட ​Arrow 3 மற்றும் Iron Dome போன்ற வான்பாதுகாப்பு அமைப்புகள், ஈரானின் ‘ஹைப்பர்சோனிக்’ வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் செயலிழந்தன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மணிக்கு 9,800 கி.மீ வேகத்தில் பாயும் ஏவுகணைகளைத் தடுப்பது தற்போதைய தொழில்நுட்பத்தில் மிகவும் கடினமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
இஸ்ரேலின் மிக முக்கியப் பாதுகாப்புப் பகுதிகளையும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நகரங்களையும் குறிவைத்து ஈரான் அரசு இஸ்ரேலில்​ தாக்குதல் நடத்தி வருகிறது. இலக்கு வைக்கப்பட்ட முக்கிய நகரங்களான எபிரோன் (Hebron) கடுமையான வெடிப்புச் சத்தங்களுடன் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெருசலேம் (Jerusalem) புனித நகரின் வான்பரப்பில் ஏவுகணைகள் ஊடுருவியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
​இதேவேளை டெல் அவிவ் (Tel Aviv) இஸ்ரேலின் வணிக மையமான இங்கு பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகத் தகவல். வடக்கு கலிலி (Northern Galilee): எல்லைப் பகுதிகளில் தொடர் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
​ஆனாலும் உயிர்ச்சேதங்கள் மற்றும் தற்போதைய நிலை குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்தத் தாக்குதலில் இஸ்ரேலின் பல பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் தரப்பில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் படையினர் விரைந்துள்ள நிலையில், பல இடங்களில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவும் இணைந்து தாக்குதல்
தற்போது ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை தொடங்கியுள்ளதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானில் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கோரியும் கொமேனி ஆட்சியை எதிர்த்தும், அந்நாட்டு இந்த ஆண்டு ஆரம்பத்தில் மக்கள் போராட்டம் நடத்தினர். ஈரான் அரசு, போராட்டக்காரர்கள் மீது, ராணுவத்தினரை கொண்டு தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை கைவிட வேண்டும். இல்லையெனில், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து வந்தார்.
மேலும், அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று ஈரான் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று டிரம்ப் கூறினார். இது தொடர்பாக, ஈரான் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் இடையே ஓமன் நாட்டின் முயற்சியால் பேச்சு வார்த்தை நடந்து வந்தது. இதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
இன்னொரு பக்கம் மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது படை பலத்தை அதிகரித்து வைத்து இருந்தது. இந்நிலையில் தற்போது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவத்தினர், ஈரான் மீது தீவிர தாக்குதலை தொடங்கினர். தலைநகர் டெஹ்ரான் மற்றும் ஜோம்ஹாரி பகுதிகளில் அடுத்தடுத்து பல ஏவுகணைகள், குண்டுகள் வந்து விழுந்தன.
ஈரான் உச்ச தலைவர் குறி?
ஈரான் உச்ச தலைவர் இல்லத்தை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரான் மீதான வான்வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், ஈரான் அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் முக்கிய உளவுத்துறை அலுவலகங்கள் உட்பட பல இடங்களைத் துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானுக்கு அணு ஆயுதங்கள் செல்வதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை ஆரம்பித்துள்ளோம். ஈரானின் கடற்படை முற்றிலும் அழிக்கப்படும் டிரம்ப் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடத் தொடங்கியதாகவும் சில வாரங்களுக்கு முன்னர் தாக்குதலின் திகதி தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஈரான் அதன் அணுச்சக்தித் திட்டத்தைத் தொடர்ந்தால் தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் அண்மையில்தான் ஈரானும் அமெரிக்காவும் அணுச்சக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தையை நடத்தின. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அறிவித்துள்ளார். இஸ்ரேல் நேரப்படி பிப்ரவரி 28 காலை 8.15 மணிக்கு நாடு முழுவதும் எச்சரிக்கை மணி ஒலித்தது. அங்குள்ள மக்கள் விழிப்புடன் இருக்க அவ்வாறு செய்யப்பட்டது.
எந்நேரமும் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கையாக அனைத்துப் பாடசாலைகளையும் அலுவலகங்களையும் மூடியதாக இஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்தது. அத்தியாவசியச் சேவைகள் மட்டும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
2025 ஜூன் 12 நாள் போர்:
கடந்த 2025 ஜூன் மாதம் நடந்த 12 நாள் போரின் போது, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களால் ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் ஏவுகணை தற்காப்பு அமைப்புகள் பெருமளவில் சிதைக்கப்பட்டன. இது ஈரானின் பிராந்திய செல்வாக்கை பாரிய அளவில் முடக்கியது. குறிப்பாக, ஈரானின் நீண்டகாலத் தூண்களாக இருந்த ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்புக்கள் மிகவுமே பலவீனமடைந்துள்ள நிலையில், சிரியாவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், ஈரானின் எதிர்ப்பின் வீரியம் மிகவுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதென்பதே யதார்த்த நிலையாகும்.
பொருளாதார ரீதியாகப் பார்க்கும் போது ஈரான் இன்று மிகவும் பலவீனமான ஒரு நிலையிலேயே காணப்படுகிறது. 2026 ஜனவரி தொடக்கத்தில், ஈரானின் முக்கிய பொருளாதாரக் கூட்டணியான வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்டதும், ஈரானின் நிழல் கப்பற்படையின் எண்ணெய் விநியோக நடவடிக்கைகள் முடக்கப்பட்டதும் நாட்டின் வருமானத்தைக் கிட்டத்தட்ட அடியோடு நிறுத்தியுள்ளது எனலாம்.
ஈரானின் கடற்படை அழிக்கப்படும்
ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதலை தொடங்கி உள்ளதை அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அமெரிக்கர்களை பாதுகாப்பதே எங்களின் நோக்கம். ஈரான் எப்போதும் அணு ஆயுதங்களை வைத்திருக்க கூடாது. ஈரானில் ஆட்சியில் உள்ள அச்சுறுத்தல்களை அகற்றுவதே எங்கள் முக்கிய நோக்கம். ஈரானில் மிகப்பெரிய அளவில் தாக்குதலை அமெரிக்கா முன்னெடுத்திருக்கிறது. அணு ஆயுத மறுகட்டுமானத்திற்கு ஈரான் முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
ஈரான் நாட்டின் ஏவுகணைகள் அனைத்தும் நிர்மூலமாக்குவோம். பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதில் உலகத்திலேயே ஈரான் முதலிடத்தில் உள்ளது என்று குற்றம்சாட்டி உள்ளார். இதற்கிடையே, இஸ்ரேல், அமெரிக்கா மீது விரைவில் பதில் தாக்குதல் நடைபெறும் என ஈரான் தெரிவித்துள்ளது.
கொமேனியின் ஆட்சி வீழுமா?
ஈரானில் 1979 இல் தொடங்கிய கொமேனியின் ஆன்மீக ஆட்சிமுறை இன்று அதன் இறுதி மூச்சுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளது. 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஈரானிய மக்களின் விதியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மத்திய கிழக்கு மற்றும் ஆசிய – பசிபிக் பிராந்தியத்தின் அதிகாரச் சமநிலையை அடுத்த சில தசாப்தங்களுக்கு மாற்றி எழுதப் போகும் சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில காலமாகவே தொடர்ச்சியாக மோதல் போக்கு நிலவியது. பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடந்தாலும் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை அங்குத் தொடர்ந்து அனுப்பி வந்தது.
ஹுர்முஸ் நீரிணை முதல் காஸ்பியன் கடல் வரை பரந்து விரிந்திருக்கும் ஈரானின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பானது, உலக வல்லரசுகள் ஒவ்வொன்றும் தங்களுக்குச் சாதகமான ஒரு அரசை அங்கு உருவாக்க வரலாற்று ரீதியில் முனைந்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *