இலக்கியச்சோலை

பகிர்வுகள் …. கலை இலக்கியப் பத்தித் தொடர்… பகிர்வு – 06 … செங்கதிரோன்

அனாமிகா – 2025

சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் அனாமிகா – 2025 நினைவுப் பேருரையும் கலை இலக்கியக் கூடலும்

‘சுனாமி நினைவில் 21 ஆண்டுகள், அனாமிகா நினைவுப் பேருரையும் ஆனந்தன் நினைவுரையும் – 2025’ நிகழ்வு 26.12.2025 அன்று மட்டக்களப்பு சீலாமுனை சின்னராஜா மண்டபத்தில் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர் (அழகியல்) கலாநிதி மலர்விழி சிவஞானசோதிகுரு தலைமையில் நடைபெற்றது. முதன்மை விருந்தினராக மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி கலந்து கொண்டிருந்தார். இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. சென்ற வருட நிகழ்விலும் கலந்து கொண்டிருந்தேன்.

அனாமிகா பண்பாட்டு மையம் உருவானதன் பின்னணி அதன் செயற்பாடுகள் குறித்த விபரங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் உசிதம் என எண்ணுகின்றேன். இந்த நிகழ்வில் கலாநிதி மலர்விழி சிவஞானசோதிகுரு ஆற்றிய தலைமையுரையிலிருந்தே அவ்விபரங்களை நேரடியாகப் பதிவு செய்தல் பொருத்தமானது.

தலைமையுரை

“உலகை உலுக்கிய சுனாமி ஏற்பட்டு 21 ஆண்டுகள் கடந்து போனாலும் அதன் பாதிப்பு இன்றுவரை நீங்கா நினைவாய் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஒரே நாளில் பல்லாயிரம் கோடி இழப்பும், பல லட்சம் உயிர்கள் பறி போனமையும் நாம் இலகுவில் மறந்தோ, கடந்தோ போகமுடியாத இருண்ட கனத்த நாட்களாகும்.

அனாமிகாவும் சுனாமியால் கரைந்துபோனவள்தான். ஆனால் அவள் நினைவுகள் எம் எல்லோர் நெஞ்சிலும் நீங்கா நினைவலைகளாகப் பயணிக்கிறது.

ஒரு மலராய் மலர்ந்தவளாக இருந்த அனாமிகா ஏஞ்சல் சுனாமி என்ற பேரழிவால் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டாள். அனாமிகா ….. ஏஞ்சல் …… அவள் பெயரைச் சொல்வது மட்டும் போதுமானதல்ல. அனாமிகா ஒரு சிறந்த மாணவியாகவும், ஒரு நேர்மையான மகளாகவும், அனைவருக்கும் மகிழ்ச்சியை வழங்கும் ஒரு சிறுமியாகவும் திகழ்ந்தாள். அவள் சிரிப்பே ஒரு வீட்டின் ஒளியாக இருந்தது. மாணவிகளின் நட்பில் அவளுக்கான இடம் எப்போதும் தனியாக இருந்தது.

சுனாமி என்பது வெறும் இயற்கைப் பேரழிவல்ல. அது பல குடும்பங்களின் கனவுகளை நொறுக்கி வைத்தது. அப்படியான பேரழிவில் எம் ஏஞ்சலை நாம் இழந்தது மிகவும் வலிப்படுத்துவதோடு எம் எல்லோர் நெஞ்சையும் வேதனைப்படுத்துகிறது.

அவள் இப்போது நம்மோடு இல்லையென்றாலும் அனாமிகாவின் நினைவுகள் என்றும் எம்முடன் இருக்கும். அவளது வாழ்க்கை எளிமையானதொரு பாடமாகவே இருக்கிறது.

ஏஞ்சலின் நினைவாக ……..

2005ல் குடும்பத்தினரால் அனாமிகா அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டு, ஆழிப்பேரலையில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
பல நூல் வெளியீடுகள் லண்டனிலும், இலங்கையிலும் நடாத்தப்பட்டன.
2010ல் அனாமிகா நூலகம் ஆரம்பிக்கப்பட்டது.
அனாமிகா நூலகம் ‘சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையம்’ ஆக தன் செயற்பாடுகளை விரிவாக்கியுள்ளது.

2020 ஆம் ஆண்டிலிருந்து இணைய வழியாக பல சர்வதேச ஆராய்ச்சிக் கருத்தரங்குகள் நடைபெற்று வருகிறது.

‘சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையம்’ உலகளவில் பேசப்படும் ஒரு அமைப்பாக இன்று தன் செயற்பாடுகளால் தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
‘சேனையூர் அனாமிகா பண்பட்டு மையம்’ நூலகம், கூட்ட மண்டபம், கணினி கூடம், கூத்துக்களரி, பார்வையாளர் அரங்கு, சுவர்களில் தன் பண்பாட்டு வழி வந்த ஓவியக் காட்சி எனப் பரிணமிக்கின்றது.

2005ம் ஆண்டு முதல் அனாமிகா நினைவு நிகழ்வுகள் மட்டக்களப்பிலும், சேனையூரிலும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டமையும், லண்டனில் தொடர்ச்சியாக நினைவு கூரப்படுகின்றமையும் உலகம் அறியும் இந் நிகழ்வுகள் நூல் வெளியீடு, நாட்காட்டி வெளியீடு, நலத்திட்ட உதவிகள் எனத் தொடர்கின்றன.

2024ம் ஆண்டில் ஏஞ்சலின் நினைவாக அனாமிகா பண்பாட்டு மையத்தில்
மங்களம் – 90 என்ற நூல் வெளியீடு
தமிழ்ப் புத்தாண்டு தைப்பொங்கல் நிகழ்வு
உலக நாடக நாள் நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.
உலக மகளிர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.

2025ல் அனாமிகாவின் 34 வது பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கல் நடைபெற்றன.
உயர்தர நாடகமும் அரங்கியலும் பாட மாணவர்களுக்குப் பயிற்சிகள் நடாத்தப்பட்டது.
அனாமிகாவின் தந்தை பாலசுகுமாரின் பிறந்த நாளையொட்டி இசை நிகழ்வுகளும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

12.12.2024 அன்று அனாமிகா கலை பண்பாட்டுக் கழகத்திற்கான புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது.

அந்தவகையில் இன்று அனாமிகா ஏஞ்சலின்
அனாமிகா நினைவுப் பேரூரை
ஆனந்தன் நினைவுரை
‘அனாமிகா 2025’ நூல் வெளியீடும், ‘கடல்கொணட காவியம்’ நூல் வெளியீடும்
நடன ஆற்றுகை
தலைக்கோல் விருது வழங்குதல்
போன்ற நிகழ்வுகளும் நடைபெறவிருக்கின்றன.

அனாமிகா ஏஞ்சல் இன்;று இல்லையென்றாலும் அவளது நினைவுகள் எப்போதும் எமக்குள்ளே வாழும் என்று கூறி விடை பெறுகின்றேன்”.

இலக்கியர் ஆனந்தன் நினைவுப் பேருரையைச் சம்மாந்துறையைச் சேர்ந்த கவிஞர் மன்சூர் ஏ. காதர் ஆற்றினார்.

அனாமிகா நினைவுப் பேருரையை “சடங்குகளும் சமஸ்கிருத மயமாக்கலும் அதன் சமூக விளைவுகளும்” எனும் தலைப்பில் கிழக்குப்பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் க. சந்திரகுமார் ஆற்றினார்.

26.12.2004 அன்று இடம்பெற்ற ‘ஆழிப்பேரலை’ (சுனாமி) அனர்த்தத்தில் தன் அன்பு மகள் அனாமிகாவைப் பறிகொடுத்த பாலசுகுமார் தம்பதிகள் அன்னாரை வருடாவருடம் கடந்த 21 ஆண்டுகளாக கலை இலக்கிய வெளிப்பாடுகளினூடாக, செயற்பாடுகளினூடாக நினைவுகூர்வது ஈழத்து இலக்கியப் பரப்பில் ஒரு புதிய முன்னெடுப்பாகும்.

இழப்பின் வலியை – பிரிவுத்துயரைக் கலை இலக்கியச் செயற்பாடுகளினூடாகத் தேற்றிக்கொள்ளும் – ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் இவ்வாறான முனைப்பு ஆக்கபூர்வமானதாகவும் அமைந்து கலை இலக்கியங்கள் மனித மனங்களைச் செழுமைப்படுத்தும் வல்லமை படைத்தவை எனும் கூற்றையும் எண்பிக்கிறது.

கடந்த இருபது ஆண்டுகளாக மட்டக்களப்பிலும், சேனையூரிலும், லண்டனிலும், தமிழ் நாட்டிலும் என அவ்வப்போது ‘அனாமிகாஞ்சலி’ நிகழ்வுகள் நடைபெற்றனவாயினும், தொடர்ச்சியாகச் சேனையூரிலும் மட்டக்களப்பிலும் நடைபெறும் நிகழ்வுகள் ஒவ்வோராண்டும் புதிய வடிவங்களைப் பெற்று வருகின்றன.
அனாமிகாஞ்சலியாக ஆரம்பித்த இந்நிகழ்வு கடந்த ஐந்தாண்டுகளாக ‘அனாமிகா கலை இலக்கியக்கூடல்’ நிகழ்வுகளாகப் பரிணமித்துள்ளது.

அனாமிகாஞ்சலி நிகழ்வுகள் 2014 ஆம் ஆண்டிலிருந்து நினைவுப்பேருரை – கலை நிகழ்வுகள் என வடிவமைக்கப்பட்டு நிகழ்ந்து வருகின்றன. அந்தவகையில் 26.12.2025 அன்று நடைபெற்றது பன்னிரண்டாவது நினைவுப் பேருரையாகும். கடந்த காலங்களில் நடைபெற்ற நினைவுப் பேருரைகளை அட்டவணைப்படுத்துதல் இங்கு அவசியமாகிறது.

ஆண்டு தலைப்பு உரையாளர்

2014 மட்டக்களப்பில் மாறிவரும் பண்பாட்டின் ஒரு முகம் பேராசிரியர். சி. மௌனகுரு
2015 தலித்தியக் கோட்பாடும் ஈழத்து தமிழ் அழகியலும் கலாநிதி. சு. சிவரெத்தினம்
2016 கண்ணகி வழக்குரை காவிய உருவாக்கமும் அதன் அரசியலும் பேராசிரியர். சி. சந்திரசேகரம் 2017 ஈழத்துக் கூத்துப் பனுவல்களில் இலக்கியச் செழுமை முதுநிலை விரிவுரையாளர்
க. மோகனதாசன்
2018 ஈழத்தில் புதிய இசைக் கருவியின் உருவாக்கம் கலாநிதி. தெ. பிரதீபன்
2019 இரங்கலும் இரங்கல் நிமித்தமும் என்னும் கையறு நிலை பேராசிரியர். அ. ராமசாமி
2020 மட்டக்களப்பின் தொன்மையும் தொடர்பாடலும் தமிழை மையப்படுத்திய ஒரு வரலாறு குலாநிதி. ஸ்ரனிஸ்லாஸ் மோசஸ்
2021 கிழக்கிலங்கைச் சமூகங்களின் உறவும் விடுதலைக் குரலும் பேராசிரியர். ரமீஸ் அப்துல்லா
2022 கிழக்கிலங்கைச் சமூகங்களின் உருவாக்கமும் இணக்கமும், மட்டக்களப்புச் சடங்கு வழிபாடுகளையும் பாடல்களையும் அடிப்படையாகக் கொண்ட ஆய்வு” கலாநிதி. பிரியதர்சினி ஜெதீஸ்வரன்
2023 மரபுவழிக் கலைகளின் எதிர்கால நிலைபேறாக்கம் குறித்த முகாமைத்துவ நோக்கிலான எண்ணக்கருக்கள் ஒரு சிந்தனைப் பகிர்தல் பேராசிரியர். புளோரன்ஸ் பாரதி கென்னடி
2024 தமிழக தெருக்கூத்துக்கள் ஒரு அறிமுகம் பேராசிரியர. கி. பார்த்திபராஜா

அனாமிகாவை நினைவுகூரும் பிறிதொரு பரிமாணமாக 2010 இல் சேனையூரில் தனியார் கட்டிடமொன்றில் கால்கோன் கொண்ட அனாமிகா நூலகம் பின்பு சேனையூர் ‘அனாமிகா பண்பாட்டு மையம்’ ஆக விரிவாகி ஒரு சமூக நிறுவனமாக இயங்கி வருகிறது. 2022 இல் அது சேனையூரில் நிரந்தரக் கட்டிடமொன்றினையும் நிர்மாணித்துள்ளது.

அனாமிகா பண்பாட்டு மையம் ஒரு முன்னோடி செயல் திட்டமாகும். இதில் நூலகம் – கூட்ட மண்டபம் – கணினி கூடம் – கூத்துக்களரி – பார்வையாளர் மண்டபம் ஆகிய கூறுகள் அமைந்துள்ளன.

அனாமிகாவை நினைவுகூரும் நிகழ்வு வெறும் அஞ்சலி நிகழ்வாக நின்றுவிடாமல் நினைவுப் பேருரை – கலை இலக்கிய நிகழ்வுகள் – விருது வழங்கல் – இறுவட்டு ஃ நூல் வெளியீடுகள் என நீட்சி பெற்று அர்த்தம் செறிந்ததாக ஆண்டுதோறும் அமைந்து வருவது ஓர் ஆக்கபூர்வமான செயற்பாடாகும்.

அந்தவகையிலே 26.12.2025 அன்றைய நிகழ்வில் ‘அனாமிகா 2025’, பாலசுகுமாரின் ‘கடல் கொண்ட காவியம்’ ஆகிய இரு நூல்கள் வெளியிடப்பெற்றன. ‘அனாமிகா 2025’ நூலின் வெளியீட்டுரையை மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் நிறுவக (கிழக்குப் பல்கலைக்கழகம்) முதுநிலை விரிவுரையாளர் பேராசிரியர் சு. சிவரெத்தினம் அவர்களும், ‘கடல் கொண்ட காவியம்’ கவிதை நூலின் வெளியீட்டுரையை மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவக (கிழக்குப் பல்கலைக்கழகம்) முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி பிரியா ஜெதீஸ்வரன் அவர்களும் நிகழ்த்தினர்.

கலைநிகழ்வாக கலாநிதி மலர்விழி சிவஞானசோதி குருவின் நெறியாள்கையில் மட்டக்களப்பு நாட்டிய வித்யா குழுவினர் வழங்கிய நடன ஆற்றுகை இடம்பெற்றது.

பின்வரும் விருதுகள் வழங்கப்பெற்றன.

தலைக்கோல் விருது – நடனக்கலைமாணி திருமதி. கமலேஸ்வரி தவராஜரெட்ணம்
திருமதி. கமலேஸ்வரி தவராஜரெட்ணம்
11ஃ3, தாமரைக்கேணி குறுக்கு வீதி, மட்டக்களப்பு.
தந்தையின் பெயர் : வீ. செல்லத்துரை (மட்டக்களப்பு)
தாயின் பெயர் : ந. இராசம்மா (மட்டக்களப்பு)
பிறப்பு : 1954.08.16 ஓய்வு : 2024.08.15
ஆரம்பக் கல்வி : மட்ஃமகாஜனக் கல்லூரி, மட்டக்களப்பு.
இடைநிலைக்கல்வி : மட்ஃஇந்துக்கல்லூரி மட்டக்களப்பு.
உயர்கல்வி : யாழ் ஃ பல்கலைக்கழகம்

சிறுவயதிலேயே நடனத்துறையில் ஈடுபாடு கொண்டமையினால் அமரர்.மா.கைலாயபிள்ளை அவர்களிடம் நடனம் பயின்று அவரால் பாடசாலைகளுக்காகவும் ஆலயங்களுக்காகவும் மேடை நிகழ்ச்சிகளுக்காகவும் தயாரிக்கப்பட்ட பல்வேறு நடன நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டிருந்தார். பாடசாலைக் கல்வியின் நிறைவின் பின்னர் 1977 இல் யாழ்ப்பாணம் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் செல்வி சாந்தா பொன்னுத்துரை, திருமதி. கிருசாந்தி ரவீந்திரன் முதலானோரிடம் நடனம் பயின்று மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவது நடனக்கலைமாணி பட்டம்பெற்றவராக 1981 இல் வெளியேறினார்.

பின்னர் மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் வித்தியாலயத்தில் நடன ஆசிரியராகத் தனது பணியை ஆரம்பித்தார். இப்பாடசாலையில் கற்பித்தகாலத்தில் அகில இலங்கைத் தமிழ் தினப்போட்டி நிகழ்ச்சிகளில் இருமுறை தங்கப்தக்கங்கள் பெற வகை செய்தார். அத்துடன் அம்மாணவர்களைத் தேசிய இளைஞர் சேவைகள் மன்றப்போட்டிகளுக்குத் தயார் செய்து ஜனாதிபதி விருது பெறச்செய்தார்.

1991 முதல் ஆசிரிய ஆலோசகராகப் பதவிபெற்ற 1999 மாசி வரை கடமையாற்றி 1999 பங்குனியில் ஓய்வுபெறும் வரை அழகியற்கல்விக்கான உதவிக்கல்விப் பணிப்பாளராகக் கல்குடா கல்வி வலயத்தில் கடமை புரிந்தார்.

இவர் தமது சேவைக்காலத்திலே ‘நவநடனாலயம்’ என்ற அமைப்பை உருவாக்கி மாணவர்களுக்குச் சிறப்பாகப் பயிற்சியளித்தார். அத்துடன் தம்மிடம் பயின்ற செல்வி ரகுப்பிரியா சண்முகநாதன் என்னும் மாணவியை 2003 இல் அரங்கேற்றம் காணச் செய்தார்.

புதிதாக ஆசிரிய நியமனம் பெறுகின்றவர்களுக்கு இலங்கை கல்வி அமைச்சினால் வழங்கப்படுகின்ற சேவை முன் பயிற்சி செயலமர்வுகளுக்கான வளவாளர்களில் ஒருவராக 1985 முதல் கடமையாற்றினார்.

மட்ஃஅரசினர் ஆசிரிய கலாசாலை, மட்ஃதேசிய கல்விக் கல்லூரி, மட்ஃதொலைக்கல்வி பிராந்திய நிலையம், மட்ஃபிரதேச தொலைக்கல்வி நிலையம் என்பவற்றில் பகுதிநேர நடனத்துறை விரிவுரையாளராக 1985 முதல் கடமையாற்றினார்.

தேசிய கல்வி நிறுவகத்தினால் வெளியிடப்படுகின்ற பரதநாட்டியம் கற்பித்தலுக்கான கற்றல் துணைச்சாதனங்கள் ஆசிரியர் கைந்நூல் எழுத்தாளர்களில் ஒருவரும் மீள்நோக்குக் குழு உறுப்பினரும் ஆவார்.

கலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையத்தில் நடனத்துறைக்கான வளவாளராகக் (2006 – 2016) கடமையாற்றினார். இக்காலத்தில் பயிற்சி நெறியினைப் பின்பற்றுவோருக்குச் சிறப்பான பயிற்சிகளை மேற்கொண்டதுடன் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட மாகாணமட்டம் தேசியமட்ட நடனப்போட்டிகளில் 2008, 2009, 2010, 2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் பல முதல் பரிசுகளை இந்நிலையம் பெற்றுக்கொள்ள வழிவகுத்தார். அத்துடன் 2007, 2008, 2012 தேசிய கலை இலக்கிய விழா ஊர்வலத்தில் சிறப்பான நடன நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கினார்.

மேலும் 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் அம்பாறை, குளியாப்பிட்டிய ஆகிய இடங்களில் நடைபெற்ற ‘தேசத்துக்கு மகுடம்’ விழாவில் சிறப்பான குழு நடனங்களை மேடை நிகழ்ச்சிகளாக அமைத்துக் கொடுத்தார்.

மட்டக்களப்பு மாவட்ட கலாசாரப்பேரவை, மண்முனை வடக்கு பிரதேச கலாசார பேரவை, கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனம், கிழக்கு மாகாண கல்வி விளையாட்டு பண்பாட்டலுவல்கள் திணைக்களம் முதலானவை, பல பாராட்டுதல்களையும் பரிசுகளையும் விருதுகளையும் வழங்கி இவரைக் கௌரவித்துள்ளன.

2020 இல் கலாசார அலுவல்கள் திணைக்களம், “கலைஞர் சுவதம்” வாழ்த்து தெரிவித்ததுடன் பல பரிசுப் பொருட்களையும் வழங்கிக் கௌரவித்தது.

மூத்த கூத்தருக்கான தலைக்கோல் விருது – அண்ணாவியார் மாணிக்கப்போடி பசுபதிப்பிள்ளை
முழுப்பெயர் : மாணிக்கப்போடி பசுபதிப்பிள்ளை
வயது : 73 வருடங்கள்
விலாசம் : முண்டாளமடு, கன்னன்குடா, மட்டக்களப்பு
கலைத்துறை : நாட்டுக்கூத்து – அண்ணாவியார்
பிறந்த திகதி : 27.12.1951
முதலாவது கூத்து : மஞ்சள் அழகி நாடகம் (வடமோடி) – 1969

பழக்கிய கூத்துக்கள்
குயலவன் நாடகம் (வடமோடி)
அருச்சுனன் தவநிலை (வடமோடி)
அல்லி நாடகம் (தென்மோடி)
இராம நாடகம் (வடமோடி)
வாழபீமன் நாடகம் (தென்மோடி)
அனுருத்திரன் நாடகம் (தென்மோடி)
அலங்கார ரூபன் நாடகம் (தென்மோடி)
சித்திரசேனன் கண்டை (வடமோடி)
மதுரவாசகன் நாடகம் (தென்மோடி)
வைகுந்தம் (வடமோடி)
மகாபாரதம் 17ம், 18ம் நாள்போர் (வடமோடி)
சித்திரபுத்திரன் நாடகம் (தென்மோடி)
புவனேந்திரன் நாடகம் (தென்மோடி)
சூரிய புத்திரன் (வடமோடி)
பகலிரவு போர் (வடமோடி)
சிலம்புச் செல்வி (தென்மோடி)
பவளக்கொடி நாடகம் (வடமோடி)
தருமபுத்திரன் நாடகம் (வடமோடி)

ஆடிய கூத்துக்கள் பாத்திரம்
குயலவன் நாடகம் குயலவன்
தருமபுத்திரன் நாடகம் கிருஷ்ணர்
அருச்சுனன் தவநிலை சிவபெருமான்
மாடுபிடி சண்டை கீசகன்
அழகேந்திரன் நாடகம் ஞானகுரு
இவரின் குரு
கலைக்கோல் , நாட்டியமயில் – நாகமணிப்போடி அண்ணாவியார்
கலாபூஷணம், கலாவித்தகர் – பாலகப்போடி அண்ணாவியார்

இளைய கூத்தருக்கான தலைக்கோல் விருதி – திரு. குஞ்சித்தம்பி பிரபாகரன்
முழுப்பெயர் : திரு.குஞ்சித்தம்பி பிரபாகரன் (அகில இலங்கை சமாதான நீதவான்)
விலாசம் : இல 130, கன்னன்குடா 02, மட்டக்களப்பு
பிறந்த திகதி : 04.09.1978
தே.அ.அ.இல : 782484893ஏ
பதவி : கடமை நிறைவேற்று அதிபர்
சேவை முகவரி : மட்ஃமமேஃஇருநூறுவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
கல்வித்தகைமை : கலைமானி (டீயு)
ஈடுபாடுள்ள துறை : கலைத்துறை (நாட்டுக்கூத்து, மேடை நாடகம், ஓவியம்)
கலைத்துறையில் ஈடுபடும் கழகம் : கண்ணகி முத்தமிழ் மன்றம், கன்னன்குடா
ஆற்றுகை செய்தகூத்துக்கள்

இல கூத்துக்கள் வகை ஆற்றுகை செய்த கதாபாத்திரம்
01 அல்லி நாடகம் தென்மோடி கட்டியகாரன், தோழி, கிருஸ்ணர், நிமலகன்னி, பிராமணன்
02 இராமர் நாடகம் வடமோடி 1ம் இராமர், சுக்கிரீவன், சீதை, அனுமார்
03 வாழபீமன் நாடகம் தென்மோடி இலக்கணகுமாரன், பறையன், சுந்தரி, துரியோதனன்
04 அலங்காரரூபன் நாடகம் தென்மோடி விறகுதலையன், பறையன், அலங்காரரூபி
05 விராடபர்வம் வடமோடி விராடன்
06 சித்திரசேனன் சண்டை வடமோடி இந்திரன்
07 அனுருத்திரன் நாடகம் தென்மோடி தலையாரி, தூதுவர்
08 சுபத்திரை கல்யாணம் வடமோடி துரியோதனன்
09 சிலம்புச்செல்வி தென்மோடி மாசாத்துவர்
10 வானரயுத்தம் வடமோடி இராவணன்
11 பகலிரவுப்போர் வடமோடி தருமர்
12 சூரியபுத்திரன் வடமோடி இந்திரப்பிராமணன்
13 மகாபாரதம் 17ம் 18ம் நாள் போர் வடமோடி சகுனி
14 சத்தயவான் சாவித்திரி தென்மோடி இரண்டாம் சத்தியவான்
15 பவளக்கொடி நாடகம் வடமோடி வேடன்
16 சூரசம்ஹாரம் வடமோடி சிங்கமுகாசூரன்

பழக்கிய கூத்துக்கள்

கூத்துக்கள் வகை

01 சிவலீலை தென்மோடி பாடசாலையில் மற்றும் கண்ணகி முத்தமிழ் மன்றம் – ரூபவாகினி தொலைக்காட்சியில் ஆவணப்படுத்தப்பட்டு ஒலிபரப்பப்பட்டது
02 உலகநாச்சி தென்மோடி நெறியாள்கை, கண்ணகி முத்தமிழ் மன்றக் கலைஞர்கள்
03 அல்லி நாடகம் தென்மோடி கண்ணகி முத்தமிழ் மன்றக் கலைஞர்கள்
04 அலங்காரரூபன் நாடகம் தென்மோடி கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும்
கண்ணகி முத்தமிழ் மன்றக் கலைஞர்கள்
05 சிலம்புச்செல்வி தென்மோடி நெறியாள்கை, கண்ணகி முத்தமிழ் மன்ற கலைஞர்கள்
06 வானரயுத்தம் வடமோடி நெறியாள்கை, கண்ணகி முத்தமிழ் மன்ற கலைஞர்கள்
07 பகலிரவுப்போர் வடமோடி நெறியாள்கை, கண்ணகி முத்தமிழ் மன்ற கலைஞர்கள்
08 சூரியபுத்திரன் வடமோடி நெறியாள்கை, கண்ணகி முத்தமிழ் மன்ற கலைஞர்கள்
09 மகாபாரதம் 17ம் 18ம் போர் வடமோடி நெறியாள்கை, கண்ணகி முத்தமிழ் மன்ற கலைஞர்கள்
10 மகாபாரதம் 15ம் 16ம் போர் வடமோடி நெறியாள்கை, கண்ணகி முத்தமிழ் மன்ற கலைஞர்கள்
11 அபிமன்யு மோட்சம் வடமோடி கண்ணகி முத்தமிழ் மன்றக் கலைஞர்கள் மற்றும் தென்னிந்தியாவில் 14வது உலக தமிழ் பண்பாட்டு மாநாடு – பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆற்றுகை
12 வள்ளியம்மன் நாடகம் வடமோடி நெறியாள்கை, கண்ணகி முத்தமிழ் மன்றக் கலைஞர்கள்
13 இராவணன் மோட்சம் தென்மோடி நெறியாள்கை, கண்ணகி முத்தமிழ் மன்றக் கலைஞர்கள்
14 சத்தியவான் சாவித்திரி தென்மோடி நெறியாள்கை, கண்ணகி முத்தமிழ் மன்றக் கலைஞர்கள்
15 அரிச்சந்திரன் நாடகம் வடமோடி நெறியாள்கை, கண்ணகி முத்தமிழ் மன்றக் கலைஞர்கள்
16 வாழபீமன் சுந்தரி
கல்யாணம் தென்மோடி பாடசாலை மாணவர்கள்
17 நந்தியின் மகிமை தென்மோடி நெறியாள்கை, கண்ணகி முத்தமிழ் மன்றக் கலைஞர்கள்
18 உன்னிச்சைத் தண்ணீர் விசேட கூத்து நெறியாள்கை, கண்ணகி முத்தமிழ் மன்றக் கலைஞர்கள்
19 பெற்றோரும் பெற்றோளும் விசேட கூத்து நெறியாள்கை, கண்ணகி முத்தமிழ் மன்றக் கலைஞர்கள்
20 மார்க்கண்டேயர் தென்மோடி நெறியாள்கை, கண்ணகி முத்தமிழ் மன்றக் கலைஞர்கள்

ஆற்றுகை செய்த மேடை நாடகங்கள் (கண்ணகி முத்தமிழ் மன்றம், கன்னன்குடா)

தொ.
இல நாடகங்கள் வகை கதாபாத்திரம்
01 சத்ய அரிச்சந்திரா இதிகாச நாடகம் சத்தியகீர்த்தி
02 மண்ணின் மாண்பு வரலாற்று நாடகம் ஜக்சன்துரை
03 சரஸ்வதி சபதம் புராணநாடகம் நாரதர்
04 சூரசம்ஹாரம் புராணநாடகம் முருகன்
05 ஸ்ரீ வள்ளி புராணநாடகம் நாரதர்
06 சிவப்புநிலா வரலாற்று நாடகம் உருத்திரதாண்டவர்
07 பரதன் இதிகாச நாடகம் பரதன்
08 பண்டார வன்னியன் வரலாற்று நாடகம் வெள்ளைக்காரத் துரை
09 கர்ணன் இதிகாச நாடகம் கிருஸ்ணர்
10 நக்கீரன் புலமை புராணநாடகம் தருமி
11 கண்ணகி வரலாற்று நாடகம் கோவலன்
12 கங்கை கொண்ட சோழன் வரலாற்று நாடகம் பாலதேவர்

கண்ணுள் வினைஞர் விருது – ஓவியர் திரு. மௌனேஸ் சிவராஜா

முழுப்பெயர் : சிவராஜா மௌனேஸ்
பிறந்த திகதியும் இடமும் : 26.05.1977 , ஏறாவூர் 4 ஆம் குறிச்சி
முகவரி : காளிகோயில் வீதி, ஏறாவூர் – 04
கல்வி :
ஆரம்பக்கல்வியை மட்ஃஏறாவூர் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் பயின்றார். பின்னர் இனக்கலவாரம் (1990) காரணமாக ஏறாவூரிலிருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியிலும், பட்டப்படிப்பை வந்தாறுமூலை கிழக்குப் பல்லைக்கழகத்திலும் பூர்த்தி செய்தார். பல்கலைக்கழகத்தில் நுண்கலையையும் ஒரு பாடமாகப் பயின்றார்.

ஓவியத்தில் ஈடுபாடும் திறமையும் வருவதற்குத் தனது சகபாடி லோறன்ஸ்தான் காரணமெனக் கூறும் மௌனேஸ் வகுப்பறையில் ஒருநாள் அவன் பென்சிலால் ஒரு காட்சியை நேர்த்தியாக வரைந்து கொண்டிருந்ததைப் பார்த்துத் தனக்கும் ஓவியம் வரையவேண்டுமென்ற உத்வேகம் உருவாகிற்று எனக் கூறுகிறார். வகுப்பறையில் தென்னந்தோப்பு ஒன்றை வரைந்து வருமாறு கூறியபோது அவரது தாய்மாமனான அரியநாதன் அதனைத் தனக்குப் பென்சிலால் வரைந்து தந்ததாகவும் அதைபோல் ரமணன் மாமா என்பவர் யானைப்படமொன்று வரைந்து காட்டியதாகவும் இவையெல்லாமே தனக்கு ஓவியத்துறையில் ஈடுபடும் ஆர்வத்தை ஏற்படுத்தினவாம்.

இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து மாதமிருமுறை வரும் ராணி ‘காமிக்ஸ்’ புத்தகங்களும் ஒருநாள் ஆனந்தன் மாமா வீட்டில் வாசிக்கக் கிடைத்த இந்தியாவிலிருந்து வெளிவரும் சிறுவர்களைக் கவரும் வாண்டுமாமாவின் புத்தகமும் அவரது ஆர்வத்தை மேலும் அதிகரித்ததாம்.

‘டைனோசர்’ பற்றிய அப்புத்தகத்தில் டைனோசர்களுக்கு ‘பேரிடிப்பல்லிகள்’ எனப் பெயரிருந்ததாம். அதனைப் பார்த்துப் ‘பேரிடிப்பல்லி’ எனத் தலைப்பிட்டு படமொன்று வரைந்து வீரசேகரி, ‘மாணவர் அரங்கம்’ பகுதிக்கு அனுப்பி அது பத்திரிகையில் வெளிவந்தது. இப்படித் தான் வரைந்த கலிலியோ கலிலி, லியோனார்டோ டாவின்சி, சுவாமி விவேகானந்தர் ஆகிய படங்களும் பத்திரிகையில் வெளிவந்தன. இவற்றை ஒருநாள் பார்த்த மௌனகுருமாமா (பேராசிரயர். சி. மௌனகுரு) இவற்றைப் பார்த்து ‘நீ ஒரு ஓவியன்தான்’ எனப் பாராட்டி நவீன ஓவியங்களை அறிமுகப்படுத்தி ‘புகழ்பெற்ற ஓவியர்கள்’ என்ற புத்தகத்தையும் தந்து பெண் ஓவியர் அருந்ததி அக்காவிடம் அறிமுகப்படுத்தி புதியபுதிய பாணிகளில் ஓவியம் வரையும் யுக்திக்கு வித்திட்டார். சூரியா பெண் ஓவியர் வாசுகி அக்கா மூலம் ஓவியர் மாற்குவின் பாணி தன்னைக் கவர்ந்ததாகவும் கூறுகிறார்.

ஒவியக் கண்காட்சிகளிலும் பாடசாலை மட்ட சுவரோவியப் போட்டிகளிலும் பரிசுப்பெற்றுள்ள இவரது ஓவியங்கள் ‘புதியகளம்’ – ‘களம்’ – ‘மூன்றாவது கண்’ – பல்கலைக்கழக ‘வெளி’ – ‘சொல்’ – ‘செங்கதிர்’ – ‘மகுடம்’ சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.

ஆழிப்பேரலை ஏற்பட்டு இருபத்தியொரு ஆண்டுகள் கடந்துபோயின. அதில் அள்ளுண்டு போன ஆயிரமாயிரம் குழந்தைச் செல்வங்களுள் பாலசுகுமார் – பிரமிளா தம்பதியினரின் அன்பு மகள் அனாமிகாவும் அடங்குகிறார்.

அனாமிகா இளம் பராயத்திலேயே கலை இலக்கிய ஈடுபாடும் சமூக அக்கறையும் நாட்டமும் கொண்டவளாகத் திகழ்ந்துள்ளாள். இசை, நடனம், ஓவியம், இலக்கியம், எழுத்து, கவிதை, கூத்து என எல்லாவற்றையும் தொட்டுச் சென்றிருக்கிறாள்.

மகளின் நினைவஞ்சலி நிகழ்வை ஆண்டு தோறும் இவ்வாறான ஆக்கபூர்வமான கலை இலக்கியச் சமூகச் செயற்பாடுகளைக் கட்டமைத்து நிகழ்த்திவரும் அனாமிகாவின் பெற்றோர்களான அனாமிகா பண்பாட்டு மைய நிறுவுனர் பாலசுகுமார் மற்றும் அதன் ஆலோசகர் திருமதி. பிரமிளா சுகுமார் ஆகியோரின் பணி வரலாற்றில் பதிவுக்குரியதாகும். சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையத்தின் பணிப்பாளர் இரா.இரத்தினசிங்கம் (ஒய்வுநிலை அதிபர்) அவர்களும் பாராட்டுக்குரியவராகிறார்.

அனாமிகாவின் இறப்பு – இழப்பு ஒரு சம்பவமாகாமல் சரித்திரமாக ஒரு பண்பாட்டுப் பெருவெளியாய் நினைவுகள் நிலைக்க நீள்கிற கலை இலக்கிய சமூகச் செயற்பாடுகளாகத் தொடர்கின்றமை பயன்மிக்கதாகும். இறப்பை நினைவு கூர்வதில் ஒரு புதிய பயன்மிக்க பண்பாட்டுப் பாராம்பரியத்தையும் – சூழலையும் – மரபையும் இது தோற்றுவித்துள்ளது எனலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *