‘கோல்டன் டோம்’ டிரம்ப் வகுக்கும் புது வியூகம்; யுத்தமின்றி கிரீன்லாந்தை கைப்பற்ற திட்டம்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் கனடாவின் பிரதமர் மார்க் கார்னி பேசுகையில், ராணுவ பலம், பொருளாதார பலமுடைய நாடுகள், அவற்றை மற்ற நாடுகளுக்கு எதிராக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.
இதற்கு பின்னர் கிரீன்லாந்து, டென்மார்க் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. அப்போது கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்த வேண்டும் என்ற தனது கோரிக்கையை டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.
டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்து நிலப்பரப்பைக் கையகப்படுத்தும் விவகாரத்தில், தமக்கு எவ்வித செலவுமின்றி முழுமையான அனுமதி வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.
நேட்டா பலம் மிக்கதாக இல்லை?

அத்துடன் கோல்டன் டோம் (Golden Dome) ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதற்கு கிரீன்லாந்து முக்கியமானது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பங்களிப்பு இல்லையென்றால் நேட்டா கூட்டணி பலம் மிக்கதாக இருக்காது எனவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆகவே கிரீன்லாந்தை அமெரிக்கா பெறுவதற்கான முயற்சியை நேட்டோ வழிநடத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார்.
இதற்கிடையே கிரீன்லாந்தை கைப்பற்ற ட்ரம்ப் ஆர்வமாக இருந்தாலும் வெறும் 17 சதவீதமான அமெரிக்கர்கள் மட்டுமே இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கருத்து கணிப்பு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. இந்த தீவை வாங்குவதற்கு 700 பில்லியன் டொலர்கள் வரை செலவாகும் என்றும் இது அமெரிக்காவின் மொத்த வருடாந்திர பாதுகாப்பு வரவு செலவு திட்டத்தில் பாதி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
டென்மார்க்கின் சுயாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்து தொடர்பாக நேட்டோ (NATO) பொதுச் செயலா ளர் மார்க் ரூட்டேவுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகத் தெரிவித்த டிரம்ப், இது தொடர்பான எதிர்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஐரோப்பிய மண்ணில் எதிரிகளின் தாக்குதல்கள் கிரீன்லாந்து ஊடாகவே முன்னெடுக்கப்பட வாய்ப்புள்ளதால், இது அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு மிக அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கோல்டன் டோம் (Golden Dome) ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பின் ஒரு பகுதி கிரீன்லாந்தில் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும், கால எல்லை இன்றி அங்கு முழுமையாகச் செயற்படுவதற்கான அனுமதியையே தாம் எதிர்பார்ப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்கு நேர்மாறாக பொருளாதார முதலீடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்ற போதிலும், நாட்டின் இறையாண்மை குறித்து எவ்வித பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் இராணுவ பலத்தைப் பயன்படுத்தி கிரீன்லாந்தைக் கைப்பற்றப் போவதாக தெரிவித்த டிரம்ப், தற்போது இராணுவ ரீதியான நடவடிக்கைகளைத் தவிர்த்து உடனடியாகப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை
விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனடா கடும் எதிர்ப்பு:
கிரீன்லாந்தின் மீது கோல்டன் டோம் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை கட்டமைக்கும் திட்டத்தை கனடா அரசு கடுமையாக எதிர்ப்பதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் இந்த முடிவுகளுக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி நேரடியாக தனது எதிர்ப்பை தொடர்ந்தை பதிவிட்டு வருகிறார்.
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் கனடாவின் பிரதமர் மார்க் கார்னி பேசுகையில், ராணுவ பலம், பொருளாதார பலமுடைய நாடுகள், அவற்றை மற்ற நாடுகளுக்கு எதிராக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இதற்கு பதிலடியாக – உடனடியாக பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவால் தான் கனடா வாழ்கிறது எனவும் எங்களிடமிருந்து பல சலுகைகளை பெறும் அந்நாடு நன்றியுடன் இல்லை எனவும் காட்டமாக விமர்சித்தார். இதற்கு கனடா பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்காவின் தயவால் நாங்கள் வாழவில்லை என அவரும் பதிலளித்தார்.
இதனை தொடர்ந்து அதிருப்தி அடைந்த டிரம்ப், கனடா பிரதமர் கார்னிக்கு அமைதி வாரியத்தில் இணைய விடுத்த அழைப்பை ரத்து செய்கிறேன் என அறிவித்தார். இந்நிலையில் தொடர்ந்து கனடா பிரதமர் மீது ஜனதிபதி டிரம்ப் குற்றம் சுமத்தியுதுடன், கிண்டலாக விமர்சித்து வருகிறார்.
மேலும் கோல்டன் டோம் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு கிரீன்லாந்தின் மீது கட்டப்படுவது
கனடாவைப் பாதுகாக்கும் என்ற போதிலும், கனடா அதற்கு எதிராக உள்ளது எனவும் அதற்குப் பதிலாக, அவர்கள் சீனாவுடன் வர்த்தகம் செய்வதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் எனவும் அந்தச் சீனா முதல் வருடத்திலேயே அவர்களை விழுங்கிவிடும் எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.
கனடா நன்றியுடன் இல்லை?
கனடா நன்றியுடன் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றம் சுமத்தியுள்ளதை பல அமெரிக்க ஊடகங்களும் விமர்சித்துள்ளன. கோல்டன் டோம் (Golden Dome) ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பு கனடாவிற்கும் பாதுகாப்பைத் தரவல்லது. எனினும், கனடா இதற்காக எந்த நன்றியும் காட்டாமல் இலவசமாகப் பயன் பெறுவதாகவும் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் தனது வரி விதிப்பு அறிவிப்புகளால் கனடாவில் உள்ள நூற்றுக்கணக்கான கார் தொழிற்சாலைகள் அமெரிக்காவிற்குத் திரும்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிரீன்லாந்தை அமெரிக்கா வாங்குவதற்குக் கனடா முட்டுக்கட்டை போடுவதைத் தான் மன்னிக்கவோ, மறக்கப் போவதில்லை என்று டிரம்ப் தனது உரையில் அச்சுறுத்தும் வகையில் சுட்டிக்காட்டி இருந்தார்.
கோல்டன் டோம் திட்டத்தில் கனடா ?
கடந்த ஆண்டு நடுப்பகுதியில் கோல்டன் டோம் திட்டத்தில் கனடா இணைய 61 பில்லியன் டாலர் தர வேண்டும், அல்லது அமெரிக்கா உடன் இணைந்தால் கனடா ஒரு டாலரையும் தர அவசியமில்லை என டிரம்ப் தெரிவித்து இருந்தமை பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
கோல்டன் டோம் (Golden Dome) அமெரிக்காவை பாதுகாக்க 175 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்படும் புதிய வான் ராணுவக் கட்டமைப்பு ஆகும் . இதற்கான ஒப்புதலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வழங்கி இருந்தார்.
இந்த கோல்டன் டோம் கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், டிரோன்கள் என எந்த ஏவுகணையாக இருந்தாலும், அதுவும் அவை சாதாரணமானது அல்லது அணு ஆயுதம் என எதுவாக இருந்தாலும் தோற்கடிக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும். அமெரிக்காவை விண்வெளியில் இருந்து தாக்கினால் கூட இந்தக் கட்டமைப்பு தடுத்துவிடும் ஆற்றலைக் கொண்டதாகும்.

இந்த வான் பாதுகாப்பு கட்டமைப்பில் தாங்களும் இணைந்து கொள்ள கனடா விருப்பம் தெரிவித்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். பிரமாண்டமான கோல்டன் டோம் கட்டமைப்பு உருவாக்கத்தில் பங்குகொள்ள கனடா விருப்பம் தெரிவித்துள்ளது.
ஆனாலும் அமெரிக்கா உடன் இணையமாட்டோம் என்று கனடா மிக உறுதியாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ட்ரம்பின் இந்தக் கருத்து பரபரப்பை கிளப்பியுள்ளது. டிரம்ப் கூறுகையில் கோல்டன் டோம் கனடாவுக்கு பல பில்லியன் டாலர் செலவாகும், ஆனால் அது கனடா தன் இறையாண்மையை விட்டுக்கொடுத்தால் இலவசம் என்று கூறியிருந்தார்.
கனடா- அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தம்:
கனடாவின் இறையாண்மை குறித்த டிரம்பின் கருத்துக்களுக்கும் , கனடா 51வது அமெரிக்க நாடாக மாறக்கூடும் என்ற ஜனாதிபதியின் கூற்றை கனடா திட்டவட்டமாக கடந்த ஆண்டு நிராகரித்தது.
கனடாவும் அமெரிக்காவும் ஏற்கனவே ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளன. வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு கட்டளை (NORAD). இதில் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகள் அடங்கும்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் நீண்ட தூர பயண ஏவுகணைகள் போன்ற மேம்பட்ட அச்சுறுத்தல்களுக்கு எதிராக அமெரிக்காவைப் பாதுகாக்க விண்வெளியில் இடைமறிப்புகளை நிறுவ டிரம்பின் முன்மொழியப்பட்ட கோல்டன் டோம் அமைப்பு திட்டமிட்டுள்ளது. தனது பதவிக்காலம் முடியும் முதல் இந்தத் திட்டத்தை முடிப்பதாக டிரம்ப் உறுதியளித்தார்.
கனடாவுடன் முரண்பட்டது போல தற்போது கிரின்லாந்தை கைப்பற்ற டிரம்ப் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
![]()