ஒரே அணியில் எதிர்க்கட்சிகள்!; ரணிலுடன் முக்கிய சந்திப்பு

எதிர்க்கட்சிகளின் குழுவொன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை முற்பகல் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகளின் பிரதிநிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, அநுர பிரியதர்ஷனயாப்பா, ஜீ.எல்.பீரிஸ், மகிந்த அமரவீர, சாகல ரத்நாயக்க, பிரேமநாத் சி தொலவத்த மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல உள்ளிட்டோர் அந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.
அரசாங்கத்தினால் ஜனநாயாக விரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்கள் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறுகையில்,
நாட்டின் ஜனநாயகத்திற்கான இடங்களை இல்லாமல் செய்து தனிக் கட்சி, சர்வாதிகார போக்கில் தற்போதைய அரசாங்கம் ஈடுபடுவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினோம். அவரும் அந்த நிலைப்பாட்டில் இருப்பதாகவே கூறினார். எதிர்க்கட்சியில் உள்ள சகல கட்சிகளும் கொள்கைகளில் எவ்வாறான வேறுபாடுகளை கொண்டிருந்தாலும் ஜனநாயகம் மற்றும் சட்டவாட்சியை பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும் இதனால் எதிர்வரும் வாரங்களில் நாங்கள் மக்களுடன் இணைந்து அரசாங்கத்தின் ஜனநாயாகத்தை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப்ப தீர்மானம் எடுத்தோம். மக்கள் குரல் அமைப்பின் சார்பாகவே நாங்கள் இந்த சந்திப்பை நடத்தினோம். இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியனவும் இதற்கு ஆதரவளிக்கும் என்றார்.
![]()