கவிதைகள்

உளத்தில் பக்குவம் இருந்திடல் வேண்டும்!…. கவிதை…. ஜெயராமசர்மா

விண்ணில் பறக்கும் வண்ணப் பறவைகள்
மண்ணில் மீண்டும் வந்துமே நிற்கும்
உயர உயர உயர்திடும் மனிதன்
கால்களை ஊன்றிடத் தரைவர வேண்டும்

உயர்ந்திடும் உயரம் உவப்பினைக் கொடுக்கும்
உயர்ந்திடும் எண்ணம் உன்னதம் ஆகும்
உயர்ந்திடல் என்பது உளவுயர் ஆகும்
உளவுயர் என்பதே உயர் உயர்வாகும்

அளவுடன் அனைத்தும் ஆற்றிட வேண்டும்
அளவினை மீறினால் ஆக்கம் குலையும்
ஆக்கம் குலைந்தால் அழிவே நிச்சயம்
அழிவினைத் தடுக்க அளவினைப் பேணுவோம்

பறக்கும் வரைக்கும் பறக்கவே வேண்டும்
பறக்கும் நிலையில் பக்குவம் வேண்டும்
பக்குவம் இன்றி உயரப் பறந்தால்
பட்டென்று மண்ணில் வீழ்வது நிச்சயம்

உயர உயர உயர்ந்திடும் போது
உளத்தில் பக்குவம் இருந்திடல் வேண்டும்
பக்குவம் இழந்தால் தொப்பென விழுவோம்
பறவைக்கும் மனிதர்க்கும் பக்குவம் முக்கியம்

மண்ணில் இருந்தே பறவை பறக்கும்
மண்ணைத் தொட்டே மனிதனும் உயர்கிறான்
உயரும் மனிதன் உள்ளம் உயர்ந்தால்
உயரம் உயர்வாய் உரமாய் உயரும்

கள்ளம் களைந்து உயர்ந்திடல் வேண்டும்
கண்ணியம் உயர்வில் நிறைந்திடல் வேண்டும்
பரந்த உள்ளம் அமைந்திடல் வேண்டும்
பாரே போற்றிட உயர்ந்திட வேண்டும்

சலனம் இன்றியே பறவைகள் பறக்கும்
சந்தேகம் கொண்டவை பார்ப்பதே இல்லை
உயரும் மனிதன் உளத்தில் உதிக்கும்
சந்தேகம் சலனம் அகன்றிட வேண்டும்

களவும் தெரியா கசடுந் தெரியா
களிப்புடன் வானில் பறவைகள் பறக்கும்
களவுடன் கசடும் அளவிலாப் பொய்யும்
கொண்டவர் உயர்ந்தால் நல்லன அழிந்திடும்

 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *