முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் விரைவில் நாட்டுக்கு!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுடன் தொடர்புடைய முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருவதற்காக இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், மத்திய வங்கி பிணைமுறை மோசடி விசாரணைகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
2015 பெப்ரவரி மாதத்திலேயே மத்திய வங்கி பிணைமுறை மோசடி நடந்துள்ளது. அப்போது மத்திய வங்கி ஆளுநராக இருந்த அர்ஜுன மகேந்திரன் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் திருமண நிகழ்வொன்றுக்கு செல்வதாக கூறி சிங்கபூருக்கு சென்றார். எவ்வாறாயினும் இந்த வழக்கு விசாரணைகளை நாங்கள் முன்னெடுத்துச் செல்கின்றோம். அவரை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக இராஜதந்திர தலையீடுகளை முன்னெடுத்து வருகின்றோம். அவரை இங்கு அழைத்து வருவது இலகுவான விடயம் அல்ல. ஆனால் வழக்கு நடவடிக்கைகள் இடம்பெறும்.
எவ்வாறாயினும் நாங்கள் அவரை கூடிய விரைவில் நாட்டுக்கு கொண்டு வருவதற்காக இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். எவருக்கும் சட்டத்தில் இருந்து தப்பிக்க இடமளிக்க மாட்டோம். நாட்டில் சட்டத்திற்கு எதிராக செயற்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன்னால் கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.
![]()