இலக்கியச்சோலை

சஞ்சீவி சிவகுமாரின் நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள்; வரலாற்று நூல் ஒரு பார்வை…  சோலையூர் குருபரன்

அண்மைக் காலங்களில் தமிழ் மொழியிலான வரலாற்று நூல் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் ஓரளவு வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அதேபோல் தமிழ்நாடு முதல் உலக நாடுகள் வரை மேற்கொள்ளப்படும் அகழாய்வுகளில் பல பொ.ஆ.மு 4,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழின் தொன்மையையும் அன்றைய தமிழன் பயன்படுத்திய அறிவியல் தொழினுட்பத்தையும் நிருபித்துக் பொண்டிருக்கின்றன.

சஞ்சீவி சிவகுமார் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் மண்ணின் பெருமையையும் வரலாற்றினையும் ‘நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள்’ என்ற நூலின் மூலம் பதிவு செய்திருக்கின்றார். இந்நூல் தொடர்பான கருத்துக்களை முன்வைப்பதற்கு முன்பாக சில வரலாற்றுக் குறிப்புக்களுடன் நோககுவது பொருத்மாக அமையும்.

வரலாறு என்பது கடந்த கால மனித வாழ்வியலை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, அதன் மூலம் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் செம்மைப்படுத்தும் ஒரு கருவியாகக் கொள்ளப்படுகிறது. வரலாற்றை அறிவியலோடு பொருத்திப் பார்க்கும் கலாசாரம் வளர்ந்து வருகிறது. ஆதாரங்களுடன் நிருபிக்கப்படாத எதனையும் வரலாறாகக் கொள்ள முடியாது என்கின்ற போக்கு வளர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. தெல்லியல், சாசனவியல், கல்வெட்டுக்கள், செப்பேடுகள், ஏட்டுச் சுவடிகள், குறிப்புகள், எச்சங்கள், பானை ஓடுகள், ஆயுதங்கள், ஏனைய சான்றாதாரங்கள் கொண்டு ஆய்வுகள் மூலம் நிருபிக்கப்பட்டால் அவை வரலாறாக ஏறறுக் கொள்ளப்படுகின்றன. ஆய்வு ரீதியாக நருபிக்கப்படாதவை எல்லாம் ஐயங்களைத் தோற்றுவித்துக் கொண்டே இருக்கும்.

சஞ்சீவி

வரலாற்றின் தந்தை என போற்றப்படும் கிரேக்க அறிஞர் ஹெரோடோட்டஸ் (Herodotus) “நடந்த நிகழ்வுகள் காலப்போக்கில் அழிந்துவிடக் கூடாது என்பதற்காகவும், மனிதகுலத்தின் வியக்கத்தக்க சாதனைகள் பெருமை இழக்காமல் இருப்பதற்காகவும் மேற்கொள்ளப்படும் முறையான விசாரணை.” (The Histories -(பொ.ஆ.மு. (440) 5-ஆம் நூற்றாண்டு) என நூலில் வரையறை செய்திருக்கின்றார்.

நவீன வரலாற்று ஆசிரியரான ஈ.எச்.கார் (E.H.Carr) வரலாற்றை ஒரு தொடர்ச்சியான உரையாடலாகப் பார்க்கிறார். “வரலாறு என்பது வரலாற்று ஆசிரியருக்கும் அவரது தகவல்களுக்கும் இடையே நிகழும் இடைவிடாத ஒரு செயல்பாடாகும், இது கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான முடிவற்ற உரையாடல்.” (What is History? -1961) என்ற வரைவிலக்கணம் வரலாற்றியல் துறையில் ஒரு மைல்கல்லாகும்.

ஜே. பி. பியூரி (J. B. Bury) வரலாற்றை ஒரு இலக்கியமாகப் பார்க்காமல், அதை ஒரு அறிவியலாக முன்வைக்கிறார். அவர் “வரலாறு ஒரு அறிவியல், அதற்கு குறைவும் இல்லை, அதற்கு அதிகமும் இல்லை.” என (History is a science, no less and no more) The Science of History (1903) என்ற நூலிலும் நூல் வெளியீட்டு நிகழ்வில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய தொடக்க உரையிலும் குறிப்பிட்டிருந்தார்.

“தனிமனிதர்களின் வாழ்க்கையை விட, சமூகத்தின் வளர்ச்சியையே வரலாறு பிரதிபலிக்க வேண்டும்.” எனக் கார்ல் மார்க்ஸ் (Karl Marx) The Communist Manifesto (1848) என்ற நூலின் மூலம் சோசலிச இயக்கவியல் கண்ணோட்டத்தில் தனது புரிதலை வெளிப்படுத்தி இருந்தார்.

வரலாற்றை ஆராய்வதற்கும் கட்டமைப்பதற்கும் அடிப்படையாக விளங்கும் வரலாற்று மூலாதாரங்களை (Historical Sources) முதன்மை நிலை ஆதாரங்கள் (Primary Sources) இரண்டாம் நிலை ஆதாரங்கள் (Secondary Sources) என இரண்டு வகைகளாகப் பிரித்து நோக்கலாம். ஒரு வரலாற்றுச் சம்பவம் அவை நடந்த காலத்தில் உருவான நேரடிச் சான்றாதாரங்கள் முதன்மை ஆதாரங்களாகும். தொல்பொருள் சான்றுகளான (Archaeological Sources) கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், சுவர்கள், தூண்களில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள், மெயக்கீர்த்திகள், எழுத்துக்கள், நாணயங்கள், மன்னர்களின் காலம், அரசு முத்திரை, பொருளாதார நிலையைஹ அறிய உதவும் பொழிப்புக்கள், நினைவுச் சின்னங்களான அரண்மனைகள், கோட்டைகள், கொத்தளங்கள், கோயில்கள், குளங்கள், புதைகுழிகள், முதுமக்கள் தாழிகள், அகழ்வாராய்ச்சிப் பொருட்களான மட்பாண்டங்கள், அணிகலன்கள், கருவிகள், ஆயுதங்கள், மனித, மிருக எச்சங்கள் அத்தோடு இலக்கிய ஆதாரங்களான அக்காலத்தில் எழுதப்பட்ட குறிப்புகள், அரசவைக் கவிஞர்களின் பாடல்கள், இலக்கிய நூல்களுடன் வெளிநாட்டுப் பயணிகளின் பயணக் குறிப்புகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

முதன்மை நிலை சான்றாதாரங்களை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்தில் எழுதப்பட்டவை அல்லது தொகுக்கப்பட்டவை இரண்டாம் நிலை ஆதாரங்களாகும். வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய ஆய்வு நூல்கள். சுயசரிதைகள், வாழ்க்கை வரலாறுகள், ஆய்வுக் கட்டுரைகள, பழைய தரவுகளை ஆய்வு செய்து எழுதப்பட்ட கட்டுரைகள், வரலாற்று நூல்களுக்கு எழுதப்படும் முன்னுரை, அணிந்துரைகள் ஆகியவற்றுடன் பண்பாட்டு ஆதாரங்களான நாட்டுப்புறப் பாடல்கள், பழமொழிகள், கதைகள், வாய்மொழிக் கதைகளளும் தொழில்நுட்ப ஆதாரங்களான பழங்காலக் கட்டிடக்கலை, பாசன முறைகள், சிற்பக்கலை, ஆயுதங்கள், கருவிகள், உபகரணங்கள், குளங்களின் கட்டுமானங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். கிழக்கு மாகாணத்தில் இத்தகைய சான்றாதாரங்களை ஒப்பிட்டு, ஆய்வு செய்து தமிழர்களின் இருப்பு, அரசியல், சமூக, பொருளாதாரம், பண்பாடு தொடர்பில் நிருபிக்கத்தக்க முழுமையான ஆய்வு நூல் இதுவரை வெளிவரவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.

ஆபரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த எச்சங்களின் DNA யை உலகெங்கிலும் வாழ்கின்ற மனிதர்களிடம் 2020 இல்மேற்கொள்ளப்பட்டன. DNA பரிசோதனைகளில் அந்த மரபணு தமிழ்நாடு காரைக்குடியில் வாங்கின்ற தகவல் தொழினுட்பத் துறையில் பணியாற்றும் பாண்டியன் என்பவருடைய DNA யுடன் மாத்திரமே ஒத்திருந்திருந்தது. அதேபோல் கீழடி, ஆதிச்ச நல்லூர் ஆகிய இடங்களில் வாழ்ந்த மனிதர்களின் எச்சங்களைப் காபன்டைட் பரீிசோதனை செய்து பார்த்ததில் பொ.ஆ.மு 4,500 ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களில் தமிழர்கள் மாத்திரமே வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து உலகின் மூத்த குடியாகத் தமிழன் வாழ்ந்து வந்திருக்கிறான் என்பது சான்றாதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபை 2025 இல் மேற்கொண்ட உலக சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி உலகில் சுமார் 823 கோடி (8.23 Billion) மக்கள் வாழ்வதாகவும் அவற்றுள் உலகளவில் சுமார் 9.45 கோடி தமிழர்கள் வாழ்பதாகவும் இந்திய சனத்தொகையில் சுமார் 8.5 கோடிப் பேர் சகல மானிலங்களிலும் வசிக்கின்றனர். அவற்றுள் தமிழ்நாட்டில் வாழும் 7.74 கோடிப் பேரில் 5.63 (தமிழ் பேசும் ஆரிய, பிரமண, திராவிடர், இஸ்லாமியர் நீங்கலாக) கோடித் தமிழர்கள் வாழ்கின்றனர். அதேபோல் இலங்கையில் மொத்த சனத்தொகையில் 17.5 வீதம் (மலையகத் தமிழர் உட்பட) வாழ்கின்றனர்.

அவற்றுள் 12.3 வீதம் இலங்கைத் தமிழ்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலக சனத்தொகையில் 7.83 கோடி வரை வாழும் தனித் தமிழர்களுக்கு உலகில் எத்திசையிலும் சுதந்திரமான தனிநாடு ஒன்றில்லை. உலகில் மிகக் குறைந்த சனத்தொகை கொண்ட வாட்டிகன் சிட்டி (Vatican City) என்ற நாட்டில் வெறும், 800 பேரும், துவாலு (Tuvalu) நாட்டில் 11,500 பேரும், நவூரு (Nauru) நாடடடில் 12,700 பேரும் பலாவு (Palau) நாட்டில் 18,000 பேரும், சான் மரினோ (San Marino) நாட்டில் 33,800 பேரும் சுதந்திரம் பெற்று தமது நாடுகளில் வாழ்கின்றனர். உலகின் சனத்தொகை குறைந்த இத்தகைய நாடுகளில் மக்கள் இறைமையுடன் வாழும்போது தமிழனுக்கு சுதந்திர நாடு ஒன்று இல்லாமையே தமிழன் தேசியம், தனித்துவம், சுயநிர்ணயத்துடன் வாழ முடியாமைக்கான காரணமாக அமைந்திருக்கின்றன. இதனால் இன்றுவரை தமிழன் வாழ்ந்த சரித்திரம் தொடர்பான வரலாறு இன்றுவரை எழுதப்படவில்லை.

இந்தியாவில் சகல மானிலங்களிலும் அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சராக இருந்து ஆட்சி செய்யத் தமிழ்நாட்டில் தழிழர் தவிர்ந்த திராவிடர்கள் ஆட்சி செய்து வருகின்றனர். மத்திய அரசுடன் சேர்ந்து தமிழரின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாடு இருப்பு சார்ந்த வரலாற்று ஆதாரங்களை அழித்தும் சிதைத்தும், மறைத்தும் தடைகள் போட்டும உண்மை வரலாறு எழுதப்படாமலும் அங்கீகாரம் வழங்கப்படாமலும் தடுத்து வருகின்றனர். உண்மை வரலாறு எழுதிய தமிழர்கள் தமிழக அரசினால் அங்கீகரிக்கப்படுவதில்லை. தமிழரின் வரலாற்றினை இருட்டடிப்புச் செய்து ஆரிய, பிராமண, திராவிடர்கள் எழுதய வரலாறுகள் அரச நிதியீட்டத்தில் பிரசுரிக்கப்பட்டு மானிய விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இலங்கையில் 1920 இன் பின்னர் ஆட்சி அதிகாரததில் இருந்த ஆரிய, திராவிடர் குழுவைச் சேர்ந்த நாயக்கர், நாயர் பரம்பரையைச் சேர்ந்த பௌத்த சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழர்களின் உண்மை வரலாற்றை மாற்றி எழுதி, மூடி மறைத்துப் பௌத்த சிங்களப் பேரினவாதிகள் வரலாறைத் தப்புத் தப்பாக எழுதுவதற்கு பக்கபலமாக இருந்திருக்கின்றன. தமிழ் அரசர்களின் ஆட்சி நிலவிய பிரதேசங்களில் பெரும்பாலானவை இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தினதும், வனபரிபாலனத் திணைக்களத்தினதும் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சிறுபான்மையினர் இப்பிரதேசங்களில் அகழவாய்வு செய்வதற்கு அனுமதிப்பதுமில்லை. அவ்வாறு அனுமதிக்கப்பட்டாலும் அரச அதிகாரிகளின் கண்காணிப்பிலேயே அகழாய்வு செய்வதற்கு அனுமதிப்பார்கள். நமது சொந்தக் காணியில்கூட அகழாய்வு செய்ய முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. அத்தோடு தமிழர்களின் இறைமை, உரிமைகள், தேசியம், தனித்துவம், சுயநிர்ணய உரிமைகளைப் பறித்து அரைகுறை எதிலிகளாக்கி இருக்கின்றனர்.

அதனால்தான் அகழாய்வு செய்து நமது உண்மையான வரலாறு எழுதப்படாமல் இருக்கின்றன. அவ்வாறு உண்மை வரலாற்றை எழுத முற்பட்ட மேனாள் விரிவுரையாளர் குணசிங்கம் போன்றோருக்குப் பௌத்த சிங்களப் பேரினவாதிகள் கொடுத்த அழுத்தத்தினால் பலர் நாட்டைவிடடு வெளியேறினர். இத்தனைக்கும் மத்தியில் வட மாகாணத்தில் இராசதானிகள், பண்டைய மக்கள் வாழ்ந்த பிரதேசங்கள் பற்றிய அகழாய்வுகள் செய்து பல நூல்களை வெளியிட்டு இருக்கின்றனர்.

பண்டைய மட்டக்களப்பின் ஆட்சி அதிகாரம், மன்னர், சிற்றரசுகள், பிரதேசத்துக்குப் பொறுப்பானவர்கள், சமூக, பொருளாதார, வாழ்வியல், சமய, பண்பாட்டு அம்சங்கள், இராச்சிய இடப்பெயர்வுகள் பற்றிய விபரங்கள் தெளிவாகப் பதிவு செய்யப்படவில்லை. இன்றுவரை மட்டக்களப்புக்கென முழுமையான வரலாறு எழுதப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பொ.ஆ.பி 1563 இல் போர்த்துக்கேயப் படைகள் மட்டக்களப்பு மணற்பிட்டி வேஸ்லைன் வீதியூடாக வந்து காஞ்சிரங்குடா முனைக்காடு படகுப் பாதை ஊடாக மட்டக்களப்பு வாவியைக் கடந்து வந்தபோது கொக்கட்டிச்சேலைப் பிரதேசப் போடிமார் இணைந்து முனைக்காடு துறையடி ஆலை மரத்துக்கு அருகாமையில் உள்ள பள்ளத்தில் பொறிக் கிடங்கு அமைத்துப் படையினரைக் சாகடித்தனர். அதனால் கோபமடைந்த மட்டக்களப்புத் தளபதி படுவான்கரைப் பிரதேசப் போடிமார் அனைவரையும் கைது செய்து மட்டக்களப்பு எருமைத்தீவில் (பெரியகளம்/சிறையாத்தீவு) சிறைப்படுத்திச் சித்திரவதை செய்து கொன்றதாக மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் (கமலநாதன், சா.இ., கமலநாதன், க. (2005)) கூறுகிறது.

கிமக்கு மாகாணத் தமிழர்களுக்கென மிகப் பெறுமதியான முக்குகச் சட்டம் நடைமுறையில் இருந்தது. ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் படுவான்கரைப் போடிமார் ஆட்சியாளர்களோடு ஒத்துழைக்காமையினால் போடிமாரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக வடக்கு, கிழக்கு மாகாண யாழ்ப்பாணக் கட்டளைத் தலைமையகத்தில் இருந்து பஸ்கோல் முதலி மட்டக்களப்புக்கு அனுபபப்பட்டான். போடிமாருக்கும் பஸகோல் முதலிக்கும் இடையிலான முறுகல்நிலை உச்சம் பெற்றதனால் போடிமார் பலரைச் சிறைப்படுத்தியதோடு, கூடுதல் வரி விதித்து, சில கோயில்களையும் தரைமட்டமாக்கி, முக்குகச் சட்டத்தை இல்லாமலாக்கும் படியான பரிந்துரையைச் செய்து 1728 இல் முக்குகச் சட்டம் நீக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தான் என Monograph of the Batticaloa District of the Eastern Province (Canagretnam.S.O (1921)), மட்டக்களப்பு மான்மியம், (நடராசா, எஃப்.எக்எச்.சீ. (1998)) கூறுகிறது.

முக்குகச சட்டம் நீக்கப்படுவதற்குக் காரணமாக போடிமார் இருந்தது போல் ஐரோப்பியர் ஆட்சிக் காலத்தில் 1883 வரை முறையான பாடசாலைகள் அமைப்பதற்கும் தடையாக இருந்தனர். அப்போது பாடசாலைகள் அமைக்கப்பட்டிருந்தால் படுவான்கரைப் பிரதேசம் கல்வியில் யாழ்ப்பாணத்தைப் போல் வளர்ச்சி கண்டிருக்கும். பிற்காலத்தில், படுவான்கரைப் பிரதேசத்தில் உள்ள தமது கால் நடைகள் களவு போய்விடும் எனக் கூறி வலையிறவு, மண்முனை, பட்டிருப்பு நீர்வழிப் போக்குவரத்துக்கான மேம்பாலம் அமைப்பதற்குப் படும்வான்கரைப் போடிமார் தடையாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மக்களிடம் காணப்படும் இறுக்கமான இன, மத, சாதி, குடிவழிச் சமூக நடைமுறைகளும் மட்டக்களப்புக்கென உண்மையான, பக்கச்சார்பற்ற வரலாறுகள் எழுதி வெளிவருவதற்குத் தடையாக இருந்திருக்கின்றன என்பதும் எண்மையாகும். கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் தல புராணம், பாண்டிருப்பு வரலாறு, சம்மாந்துறை உண்மை வரலாறு, மல்லிகைத்தீவு வரலாறு ஆகியன நூலுருப் பெற்றும் பலரின் எதிர்ப்பினால் வெளிவராதிருக்கின்றன. சுதந்திரமாக அகழாய்வுகள் செய்ய முடியாமையும் மற்றைய காரணம். இன்று வெளிவந்திருக்கும் பல வரலாற்று நூல்கள் ஒரு சமூகத்தை ஏற்றிப் போற்றி எழுதப்பட்டவையாகவே காணப்படுகின்றன.

உலகம், பிராந்தியம், நாடு, மாகாணம், மாவட்டம், பிரதேசம், கிராமம், தனிநபர், சுயசரிதை சார்ந்த வகையில் பல்வேறு கோணங்களில் வரலாற்று நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. கிழக்கு மாகாணததைப் பொறுத்தவரை கீழக்கரை வரலாறு, மட்டக்களப்பு வரலாறு, காத்தான்குடி வரலாறு, அம்பிளாந்துறை வரலாறு, வெல்லாவெளி வரலாறு, மருதமுனை வரலாறு, பாண்டிருப்பு வரலாறு, சம்மாந்துறை வரலாறு, அக்கரைப்பற்று வரலாறு என்ற வரிசையில் சஞ்சீவி சிவகுமாரின் ‘நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள்’ என்ற நூலும் இணைந்திருக்கிறது.

ஏனைய நூல்கள் பொல் வரலாற்று நூலிலும் வடிவம், உருவம், உள்ளடக்கம், உத்தி, கனதி, மொழிநடை ஆகியவற்றையும் வெளிப்படையாக அவதானிக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும். ஒரு வரலாற்று நூல் என்பது காலவரிசைப் பட்டியலாக மட்டும் இருக்கக்கூடாது. அது வாசகரை அந்தக்காலத்திற்கே அழைத்துச் செல்லும் ஒரு கால இயந்திரம் போல் அமைய வேண்டும். ஒரு சிறந்த வரலாற்று நூலில் பொதுவாக இடம்பெற வேண்டிய முக்கிய விடயங்களை உள்ளடக்குவது ஒரு வரலாற்று நூலாசிரியரின் தார்மீகப் பொறுப்பும் கடமையுமாக இருத்தல் வேண்டும். நூலின் அறிமுகத்தில் (Introduction) நூல் எதைப் பற்றியது, எந்தக் காலப்பகுதியை ஆராய்கிறது, ஆய்வின் நோக்கம் என்ன என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். காலவரிசை, பின்னணி, நிகழ்வுகள் நடந்த கால வரிசை பிசகாமல் அமைக்கப்பட வேண்டும். புவியியல் பின்னணி, நிகழ்வு நடந்த இடத்தின் முக்கியத்துவம், எல்லைகள், இயற்கை அமைப்பு ஆகியன முதன்மை, இரண்டாம் நிலைச் சான்றாதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

வரலாற்று நூலுக்கு நம்பகத்தன்மை மிக முக்கியம். அதற்காகக் கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், அகழ்வாராய்ச்சி அறிக்கைகள், பயணிகளின் குறிப்புகள், பிற வரலாற்று ஆசிரியர்களின் பதிவுகள், அரசியல், சமூக அமைப்பு, ஆட்சி முறைகள், ஆட்சியாளர்களின் அதிகாரம், நிர்வாகத் திறன், வாழ்ந்த மக்களின் சாதி, மதம், ஆடை அணிகள், உணவு, பெண்களின் நிலை, பொருளாதார நிலை, நாணயங்கள், கருவிகள், உபகரணங்கள், உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகத் தொடர்புகள், வரி விதிப்பு முறைகள், கலை, கலாசாரம், கோயில்கள், அரண்மனைகள், நினைவுச் சின்னங்கள். இசை, நடனம், ஓவியம், இலக்கியங்கள், போர்கள், அமைதி உடன்படிக்கைகளும், அவற்றின் விளைவுகள், ஆட்சி அதிகார வீழ்ச்சி, இராச்சிய இடமாற்றங்கள், வீழ்ச்சிக்கான காரணங்கள், எதிர்காலச் சந்ததியினருக்கு விட்டுச் சென்ற பாடங்களும் விவரிக்கப்பட வேண்டும். அத்தோடு மேலதிக இணைப்புகள், வரைபடங்கள் (Maps), புகைப்படங்கள், கலைப்பொருட்கள், அடிக்குறிப்புகள் (Footnotes), உசாத்துணை நூற்பட்டியல் (Bibliography), பயன்படுத்திய ஆதாரங்களின் பட்டியல், குறியீடுகள், எழுத்துக்கள், அருமபத விளக்கம் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். வரலாறு என்பது வெற்றிகளை மட்டும் புகழ்ந்து பாடுவதல்ல, தோல்விகளையும், சாமானிய மக்களின் வாழ்வியலையும் நடுநிலையுடன் பதிவு செய்வதே ஒரு சிறந்த வரலாற்று நூலுக்கு அழகு சேர்க்கும்.

‘நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள்’ என்ற நூலின் ஆசிரியர் சஞ்சீவி சிவகுமார் பரம்பரை பரம்பரையாக நற்பிட்டிமுனையைப் பூர்வீகமாகக் கொண்ட மண்ணின் மைந்தர். அவர் கல்முனை கார்மல் பாத்திமாக் கல்லூரியில் கற்று, விவசாய விஞ்ஞானமாணிப் பட்டத்தினை கழக்கு பல்கலைக்கழகத்திலும் முதுவிஞஞானமாணிப் பட்டத்தினைப் பேராதனைப் பல்கலைக்கழத்திலும் பெற்றவர். தற்பொழுது தெக்கிழக்கு பல்கலைக் கழகத்தில் பிரதிப் பதிவாளராகப் (Deputy Registrar) பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவர் பல துறைகளில் தடம்பதித்த பல்துறை சார்ந்த வித்தகர் என்றே கூறலாம்.

ஒரு வரலாற்று நூல் எழுதுவதென்பது இலகுவான காரியமல்ல. அதனை உழுதுவதற்கும் அவரிடம் சில தகுதிகள் இருத்தல் வேண்டும். அந்த வகையில் தகுதியை நிருபிப்பதற்காகச் சஞ்சீவி சிவகுமார் பற்றிய ஆழப்பார்வை ஒன்று அவசியப்பட்டது. அதனால் அவரைப் பற்றிய ஆழமான புரிதலோடு நூலுக்குள் நுழையலாம் என் நினைக்கிறேன். சஞ்சீவி சிவகுமார் 80களின் நடுப்பகுதியிலிருந்து, கலை, இலக்கியம், அறிவியல் (விஞ்ஞானம்) எனப் பல்வேறு துறைகளில் எழுதி வருபவர். அரம்ப காலத்தில் அதிகம் ஈடுபட்ட துறையாகக் கவிதையைக் கூறலாம். ஒலி மஞ்சரி, வாலிப வட்டம், பாவளம் என அப்போது இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட -பல்வேறு சஞ்சிகை நிகழ்வுகளுக்குத் தொடர்ச்சியாக ஆங்கங்களை எழுதி வந்திருக்கின்றார்.

பல்கலைக்கழகத்தில் கற்ற காலங்களில் சிறுகதைகளால் கவரப்பட்டு அதில் அதிக கவனம் செலுத்தியவர். ஆய்வுகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புக்கள் எனப் பல்வேறு துறைகளிலும் பங்களிப்புச் செய்துள்ளார். பல்கலைக்கழகத்தில் கற்ற காலத்தில் வந்தாறுமூலையில் அகம் இலக்கிய வட்டம் எனும் கலை இலக்கிய அமைப்பை நண்பர் அழகு கிருபாவுடன் இணைந்து நடாத்தியதுடன் “முகம்” எனும் சஞ்சிகையையும் வெளியிட்டுவந்தார்.
கிழக்கு பல்கலைக்கழகத் தமிழ் சங்கத்தின் தலைவராகச் செயற்பட்டதுடன் விவசாய பீட மாணவர் அவையின் பத்திராதிபராகச் செயற்பட்டு அதன் வெளியீடான Eastern University, Faculty of Agriculture Chronicle (EUFAC-97) சஞ்சிகையின் ஆசிரியராகவும் செயற்பட்டவர். ஹெக்டர் கொப்பேக்கடுவ கமநல ஆராய்ச்சிப் பயிற்சி நிறுவகம் வெளியிட்ட ‘கமநலம்’ விவசாய, சந்தைப்படுத்தல் சஞ்சிகையில் தொடர்ச்சியாகக் கட்டுரைகளை எழுதி வந்தவர். கிழக்கின் தினக்குரல் கல்முனையிலிருந்து வெளிவந்த போது அதில் “இந்து தர்மக் குரல்” எனும் பக்கத்தின் ஆசிரியராகச் செயல்பட்டார். Earth Lanka இணையவழிச் சுற்றாடல் சார் சஞ்சிகையின் தமிழ் பதிப்பின் ஆசிரியராகவும் செயற்பட்டு வருகிறார். தற்போது ஆங்கில மொழியில் மட்டும் பதிவிடப்படும் இச்சஞ்சிகை 2022க்கு முன்னர் மும்மொழியிலும் பதிவிடப்பட்டது.

2009 இல் இருந்து விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தின் கட்டுரையாளராகவும் தமிழ் விக்கிப்பீடியாவின் ஒரு நிருவாகியாகவும் செயற்பட்டு வருகின்றார். விக்கிப்பீடியாவில் இணையவழிப் பங்களிப்புக்கு மேலதிகமாக அதன் பரப்புரையிலும் முக்கிய பங்காற்றியுள்ளார். இலங்கையில் விக்கிப்பீடியா குறித்த முதலாவது பயிற்சிச் செயலமர்வை ஒழுங்குபடுத்தி நடாத்தியதுடன் பயிற்றுநராகவும் செயற்பட்டார். இந்த முதலாவது செயலமர்வு இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் விக்கிபீடியா குறித்து கல்முனை, மட்டக்களப்பு, திருகோணமலை, அட்டன், கொழும்பு ஆகிய இடங்களில் நடைபெற்ற செயலமர்வுகளில் பயிற்றுவிப்பாளராகச் செயல்பட்டார். தமிழ் விக்கிப்பீடியா இலங்கை மற்றும் இந்தியாவில் நிகழ்த்திய சர்வதேச மகாநாட்டு அரங்குகளிலும் பங்குபற்றியுள்ளார்.

நூலக நிறுவனத்தில் ஆளுகைச் சபையின் உறுப்பினராகச் செயல்பட்டதுடன் விக்கிபீடியா நிருவனத்தின் நிதிப் பங்களிப்புடன் நூலக நிறுவனம் செயற்படுத்திய “இலங்கையின் வடக்கு, கிழக்கு மலையகத் தமிழர்களின் ‘தொழில் கலைகள்’ ஆவணமாக்கல் செயல் திட்டத்தின் நிதி கோரிக்கையாளரில் (grantees) ஒருவராகச் செயல்பட்டு இச் செயற்றிட்டத்தைப் பூர்த்தி செய்வதில் பாரிய பங்காற்றினார்.

கல்முனையில் சுனாமி நிவாரணப்பணிகளில் ஈடுபட்ட Rose Charities எனும் தொண்டர் நிறுவனத்தின் பல்வேறு செயலமர்வுகளில் வளவாளராகப் செயற்பட்டதுடன் அதன் வெளியீடான ‘கரையோரக் குமுறல்கள்’ சஞ்சிகை ஆசிரியர் குழுவுக்குத் தலைமை வகித்தார்.

இலங்கை விவசாயக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியபோது “ரோசாச் செய்கை’ எனும் நூலை திரு. ரக்கீப் என்பவருடன் இணைந்து வெளியிட்டிருந்தார். கிழக்குப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சங்க வெளியீடாக ஏழு பேரின் கதைகளைத் தொகுத்து வெளியிட்ட ‘முகங்கள்’ சிறுகதைத் தொகுப்பில் இவரது கதையும் இடம்பெற்றிருந்தது. கல்முனை நெற் வெளியிட்ட பரிமாணம் சஞ்சிகையில் வரலாற்றுச் சால்புகள் பக்கத்துக்கான ஆசிரியையாக செயற்பட்ட்துடன் 2024 இல் ‘நற்பிட்டிமுனை தமிழர் வரலாற்றுச் சால்புகள்’ எனும் வரலாற்று நூலை எழுதி வெளியிட்டார்.

2016 இல் விஞ்ஞானத் துறையைப் பிரபலப் படுத்தியமைக்கான (Popularization of Science Award) தேசிய விருதை இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் (SLAAS) இவருக்கு வழங்கிக் கௌரவித்தது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 1994 ஆம் ஆண்டு பேச்சு துறைக்கான விருது, பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் சாகித்தியவிழாவில் ஆக்க இலக்கிய விருது , பேராதனைப் பல்கலைக்கழக சங்கீத நாட்டிய சங்கத்தின் கீதம் இலக்கிய விருது, கொழும்பு தமிழ் சங்கம் தங்கம்மா அப்பாக்குட்டி ஞாபகார்த்த இலக்கணக் கட்டுரைப் போட்டிக்கான பரிசில், இலங்கை கலாசார முக்கோண திட்டத்தில் கட்டுரைப்போட்டிக்கான பரிசில் என்பன இவருக்குக் கிடைத்திருந்தன. 2025 இல் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ‘இலக்கிய வித்தகர்’ விருதினை வழங்கிக் கௌரவித்தது.

பல்வேறு மட்டங்களிலான அமைப்புகளில் அங்கம் வகித்தமையுடன் பல்வேறு சமூக இயக்கங்களிலும் பங்களிப்புச் செய்துள்ளார்.
1. தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகி.
2. நூலக நிறுவன ஆளுகைச் சபை உறுப்பினர்.
3. கல்முனை வடக்குப் பிரதேச செயலக கலாசாரப் பேரவை உறுப்பினர்.
4. கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் சபை உறுப்பினர்.
5. தலைவர், கல்முனைத் தமிழ்ச் சங்கம்.

 

 

 

 

 

 

 

இவ்வாறான பல்துறை வித்துவத் திறமை கொண்ட சஞ்சீவி ‘சிவகுமாரின் ‘நற்பிட்டிமுனை தமிழர் வரலாற்றுச் சால்புகள்’ (2024) என்ற நூல் வெளிவந்திருப்பது பாராட்டுக்குரியது. இந்நூல் கல்முனை நெற் ஊடக வலையமைப்பு வெளியிட்ட பரிமாணம் சஞ்சிகையில் வரலாற்றுச் சால்புகள் பக்கத்துக்கான ஆசிரியராகச் சஞ்சீவி சிவகுமார் செயற்பட்டபோது ‘நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள்’ எனும் தொடரை எழுதி வந்து 2024 இல் அக்கட்டுரைகளைத் தொகுத்து வரலாற்று நூலாக வெளிவந்திருக்கிறது. இந்நூலின் முன்னட்டை பாரம்பரிய வாழ்வியல் பண்பாட்டு அம்சங்களை வெளிப்படுத்துவதாக அழகாக வடிவமைக்கப்படடிருக்கிறது. பின்னட்டையில் நூலாசிரியரின் புகைப்படத்துடன் உமா வரதராஜனின் குறிப்புரையும் உள்ளடங்கியுள்ளது. இந்நூல் நற்பிட்டிமுனை கல்வி அபிவிருத்தி அமைப்பின் வெளியீடாக வௌஜயீட்டு உரையும் கொண்டு, மட்டக்களப்பு வணசிங்கா அச்சகப் பதிப்பாக 136 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. நூலின் உள்ளே வழமையான தலைப்புப் பக்கம், நூல் விபரம், வெளியீட்டு உரை, கவிக்கோ வெல்லவூர்க் கோபாலின் (தேசியக் கவிஞர் கலாநிதி எஸ்.கோபாலசிங்கம்) அணிந்துரையும், நிலம் என்னும் நல்லாள் எனும் தலைப்பில் உமா வரதராஜனின் வாழதுரையும், நூலாசிரியரின் தன்னுரை, நன்றியுரை, உள்ளணி (உள்ளடக்கம்) எனப் 16 பக்கத்துடன் நிறைவடைய மிகுதி 120 பக்கங்களும் அறிமுகத்தில் தொடங்கி இறுதியாக நற்பிட்டிமுனையின் வழக்கிலிருந்த கதையாடல்களும் கதை கூறும் கிராமிய விளையாட்டுக்களும் எனப் பதினொரு அத்தியாயங்களையும் உப தலைப்புக்களையும் உள்ளடக்கி வரலாற்றுச் சால்புகள் விரிவாக அலசப்பட்டிருக்கின்றன.

 

 

 

 

வரலாற்று நூலொன்றில் வடிவமானது வாசகனுக்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கலை நுணுக்கத்தோடு செதுக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். இது நூலின் புறக்கட்டமைப்பையும் ஒழுங்கமைப்பையும் குறிப்பதாக அமைந்திருக்கும். காலவரிசை (Chronology), தலைப்புகள், துணைக்கருவிகள் நூலின் இறுதியில் கலைச்சொற்கள் (Glossary), அகரவரிசைப் பட்டியல் (Index) மற்றும் சான்றாதாரப் பட்டியல் (Bibliography) ஆகியவை கட்டாயம் வடிவத்தில் அமைந்திருக்க வேண்டும். சஞ்சீவி சிவகுமாரின்‘நற்பிட்டிமுனை தமிழர் வரலாற்றுச் சால்புகள்’ எனும் நூலில் ஒரு சிலவற்றைத் தவிர மற்றையவை யாவும் சிறப்பாக உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை ஒழுங்கமைப்பதில் நூலாசிரியர் பல முயற்சிகளை எடுத்திருக்கிறார் என்பதனை நூலை வாசிக்கும் ஒருவர் இனங்கண்டு கொள்வார்.

நூலின் உருவம் (Structure/Image) என்பது நூலின் காட்சிப்படுத்துதல், தரவுகளின் ஒருமைப்பாட்டைக் குறிக்கும். இதற்காகத் தெளிவான அத்தியாயங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள், பழங்கால வரைபடங்களின், புகைப்படங்கள், வரைபடங்கள், அட்டவணைகள், நூல்கள், எழுதியவர் பெயர், எழுதிய ஆண்டு, அடிக்குறிப்பு போன்ற நம்பகத்தன்மையை வழங்கும் ஆதாரங்களின் காட்சிப்படுத்தலுடன் நிருபிக்கப்பட்டிருத்தல் வேண்டும். அந்த வகையில் நூலாசிரியர் இந்த விடயங்களில் கூடுதல் கவனமெடுத்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

ஒரு நூலின் உள்ளடக்கம் (Content) அந்நூலுக்கு உயிர் போன்றது. சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு வரலாறுகளின் கலவையாக அமைந்திருத்தல் அவசியம். உண்மைத்தன்மை, பன்முகப் பார்வை, மன்னர்களின் வெற்றிகளை மட்டும் பேசாமல், அக்கால சாதாரண மக்களின் வாழ்க்கை முறை, வணிகம், கலை , பெண்களின் நிலை குறித்தும் பேச வேண்டும். ஒரு வரலாற்று நிகழ்வை ஒரு தரப்பிலிருந்து மட்டும் பார்க்காமல், பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து விமர்சனப் பார்வையுடன் எழுத வேண்டும். அவ்வாறாக நூல் அமையும் போதுதான் வடிவமும் உருவமும் சிறப்புப் பெறுகிறது. பதினொரு அத்தியாயங்களில் அமைந்த இந்நூலின் ஆசிரியர் தான் எடுத்துக் கொண்ட கருப்பொருளை ஆதாரங்களுடன் நருபிப்பதற்காக முடிந்தவரை முயற்சி எடுத்திருப்பதனைத் தெளிவாக இனங்கண்டு கொள்ளலாம்.

நூலில் கூற எத்தனித்த வரலாற்றை சுவாரசியமாகவும் நேர்த்தியாகவும் கூறுவதற்குச் சில உத்திகள் ஆசிரியருக்குத் தேவைப்படுகின்றன. வரலாற்று நூல்கள் வெறும் தரவுகளாக மட்டுமல்லாமல், ஒரு கதையைப் படிப்பது போன்ற சுவாரசியமான வர்ணனை நடையில் அமைந்ருக்க வேண்டும். சான்று பகிர்தல் (Citation), ஒப்பீட்டு ஆய்வு (Comparative Analysis) போன்ற விடயங்களை நுணுக்கமாக ஆராய்ந்து கருத்துக்களை முன்வைப்பதாக இருத்தல் வேண்டும். ‘நற்பிட்டிமுனை தமிழர் வரலாற்றுச் சால்புகள்’ நூலின் நோக்கத்தை நிறைவு செய்வதற்காகவும், வரலாற்றினை மக்களிடம் சமர்ப்பிபதற்காகவும நூலாசியர் நூலுக்கு உயிர்ப்பினைக் கொடுப்பதற்காகப் பல்வேறு உத்திகளைக் கையாண்டிருப்பதனை இனங்காண முடிகிறது. அதேபோல் நூலுக்குக் கனதி சேர்ப்பதிலும் கூடுதல் கவனமெடுத்திருக்கின்றார்.

வரலாற்று நூலுக்கு அதன் மொழிநடை பிரதானமானதாகும். பல வரலாற்று நூல்கள் வாசிக்கப்படாமல் இருப்பதற்கு அதன் மொழிநடையும் ஒரு காரணமாகும். மொழிநடை எப்போதும் வித்துவச் செறிவின்றி சரள நடையில் சகல வாசகர்களையும் கவரக்கூடியதாக அமைந்திருத்தல் வேண்டும். ‘பெருங்கற்காலமாகக் கொள்ளக்கூடிய கி.மு. 3,000 வரையான காலப் பகுதியல் மட்டக்களப்புத் தேசத்தில் நாகரிகமடைந்த மக்கள் வாழ்ந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன.’ இது ஆசிரியரின் சரளமான மொழிநடைக்கு ஓரு சிறு உதாரணமாகும்.

வரலாற்று நூலொன்றின் அறிமுகம் உயிர்ப்பானதாகவும் வாசகரின் ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாகவும் நூலின்மீது இலயித்திருப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்திருத்தல் வேண்டும். இந்த நூலின் ஆசிரியர் நூலின் கருப்பொருள், ஏன், எதற்காக, என்ன நோக்கத்துக்காக எழுதப்படுகிறது. அதன் உள்ளடக்கம் என்பவற்றைத் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கின்றார்.

‘நற்பிட்டிமுனை தமிழர் வரலாற்றுச் சால்புகள்’ நூலைப் பொறுத்தவரை சான்றாதாரங்களுடன் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஆசிரியருக்கிருந்தது. அதனால் நூலுடன் சார்புடைய பல்வேறுபட்ட முதல்நிலை, இரண்டாம்நிலை ஆதாரங்களைத் திரட்டி, சான்றுகள் காட்டி கச்சிதமாக நுர்லை ஆக்கி இருக்கின்றார். பூர்வீக இலங்கையும் மட்டக்களப்பும், மட்டக்களப்பின் ஆட்சி பீடங்களும் பரம்பலும், நற்பிட்டிமுனையின் அமைவிடமும் நிர்வாக ஒழுங்கமைப்புக்களும், நற்பிட்டிமுனையின் ஆட்சித் தள வரலாறு ஆகிய நான்கு அத்தியாயங்களும் நூலாசிரலியரின் ஆய்வுத் தேடலுக்குத் தக்க சான்றுகளாக அமைகின்றன. தமக்கிருந்த எழுத்துத் திறன், கைவந்த மொழிநடை, இலக்கியப் பயிற்சி, வரலாற்று ரீதியான பார்வையும் ஈடுபாடும், தொடர் கற்றலும், விடாமுயற்சியும், ஊர் மக்களின் ஊக்குவிப்பும் வழிகாட்டலும் இத்தகைய நூலொன்றை உருவாக்கக் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஒவ்வொரு அத்தியாயங்களுக்கான கருப்பொருளையும் நோக்கத்தையும் சான்றாதாரங்களுடன் நிருபிப்பதற்கான தேடலுக்காகவும், நேர்காணல், கலந்துரையாடலுக்காகத் தனது பதவிப் பணி மற்றும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இந்நூலை ஆக்கி இருப்பது பாராட்டுக்குரியது. இரண்டாம், மூன்றாம் அத்தியாயங்களுக்காகப் பல நாட்கள் செலவிட்டிருக்க வேண்டும். லரலாற்று விடயங்களை வாசகர் முன் இலகுவாகக் கொண்டு செல்வதற்காக அத்தியாயங்களுக்கு உப தரைப்புக்கள் பிரித்து இலகுபடுத்தி வரலாற்றிறைத் தௌவாகக் கூற முயற்சித்திருக்கின்றார்.

நற்பிட்டிமுனையின் கல்வி வரலாறு, நற்பிட்டிமுனையின் ஆன்மீக வரலாறு, நற்பிட்டிமுனையின் கலை, இலக்கிய வரலாறு, நற்பிட்டிமுனையின் சமூக நிறுவனங்கள், நற்பிட்டிமுனை சந்தித்த அனர்த்தங்கள், நற்பிட்டிமுனையின் வழக்கிலிருந்த கதையாடல்களும் கதை கூறும் கிராமிய விளையாட்டுக்களும் முதலான அத்தியாயங்கள் கிராமத்தின் கல்வி, சமய, கலை, இலக்கிய, கலாசார, பொழுது போக்கு மற்றும் விளையாட்டு அம்சங்கள் பூர்வீக காலம் முதல் இன்றுவரை வரலாற்று நோக்கில் ஆதாரங்களுடன் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டிருக்கின்றன. இந்த நூல் நற்பிட்டிமுனைக் கிராமத்துக்கு மட்டுமல்ல அக்கிராமத்தில் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்கும், கிராமிய வரலாறு எழுதுவோருக்கும் ஆதார நூலாக அமையப் போகின்றது.

வரலாற்று நூல்களில் பொதுவாகக் கோடல்கள், தவறுகள், செருகல்கள், முன்னுரிமைகள், பிரதி பண்ணல், இருட்டடிப்பக்கள், திணிப்புக்கள், மறைப்புக்கள் பொதுவாகக் காணப்படுவது இயல்பு. சஞ்சீவி சிவகுமார் தனது நூலில் கணிசமானளவு உண்மையைக் கூற முற்பட்டிருக்கின்றார். மஹாவம்சம் தொடக்கம் அண்மைக் காலத்தில் வெளிவந்த வரலாற்று நூல்கள் உட்பட மேற்போன்ற தவறுகள் இடம்பெற்றிருக்கின்றன. மஹாவம்சம் கூறும் வரலாற்றுக்கும் மட்டக்களப்பு மாண்மியம், பட்டக்களப்பு பூர்வ சரித்திரம் கூறும் வரலாற்றுக் காலத்துக்கும் இடையே சுமாராக அரை நூற்றாண்டு வித்தியாசம் காணப்படுகின்றது. பொ.ஆ.பி. நானகாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கலிங்கத்தை (தந்தபுரம் தற்போதைய ஒடிசா) ஆட்சி செய்த புத்தரின் பரம்பரை வாரிசான குகசீவன் மன்னனடம் இருந்த புத்தரின் புனித தந்த தாதுவைக் கைப்பற்றுவதற்காகச் சோழ, பாண்டிய மன்னர்களுடன் மன்னன் ஷிரதரனும் தொடர்ந்து போரிட்டுக் கொண்டே இருந்தனர். தந்த தாது குகசீவனிடம் இருப்பது காலப்போக்கில் இலங்கைத் தமிழருக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதனால் அதனைக் கைப்பற்ற முயற்சித்தனர். இறுதி உக்கிர யுத்தம் அண்டை நாட்டு மன்னன் ஷிரதரனின் படையுடன் நடைபெற்றது. அதனால் அதன் பாதுகாப்புக்கருதி, தனது மகள் இளவரசி ஹேமமாலாவிடமும் மருமகனன் இளவரசன் தந்தகுமாரனிடமும் அதனை ஒப்படைத்துப் பாதுகாப்பாக இலங்கை மன்னன் கீர்த்தி சிறிமேகவண்ணனிடம் கையளிக்குமாறு பணித்திருந்தார். இறுதிப் போரில் மன்னன் குகுசீவன் வீரமரணம் எய்தினார். ஹேமமாலாவின் கூந்தலில் மறைத்துக் கொண்டுவரப்பட்ட தந்ததாது பாதுகாப்பாக இலங்கை வேந்தன் கீர்த்தி சிறிமேகவண்ணனிடம் ஒப்படைத்து அவன் மூலமாக மட்டக்களப்பு அதபதி குணசிங்கனிடம் மண்முனைப் பெருநிலப் பரப்பைப் பெற்று, மண்முனையை இராசதானியாக்கி ஆட்சி செய்தாள் என்பது மஹாவம்சம், தாளுதா வம்சம் (தாதுவம்சம்) உட்பட மட்டக்களப்பு மாண்மியம், பட்டக்களப்பு பூர்வ சரித்திரம் கூறும் 50 வருட வித்தியாச வரலாறு.

இலங்கையின் வரலாற்றை புத்தரின் புனித தந்ததாதுவுக்கு முன்னைய காலம், தந்ததாதுவுக்குப் பிந்திய காலம் என வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. பொ.ஆ.பி நானகாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இலங்கையின் பௌத்த சிங்கள ஆட்சி அதிகாரம் புனித தந்ததாதுவை மையப்படுத்தியதாகவே அமைந்திருந்தது. தந்ததாதுவைக் கைப்பற்றி வைத்திருப்பவரே மன்னனாகவும் கருதப்பட்டான். அதன் பாதுகாப்புக் கருதியே இராச்சியங்கள் அனுராதபுரத்தில் இருந்து நகர்ந்து சென்றன. உறுகுணையில் தந்ததாது வைக்கப்பட்டிருந்தபோது பாண்டிய மன்னர்களின் படைகள் உட்பட இராசேநதிர சோழனின் படைகளும் அதனைக் கைப்பற்றுவதற்குப் பலமுறை முயற்சி செய்தன. பிற்காலத்தில் தமிழருக்கு எதிரான அரசியல் வரலாற்றினைப் பௌத்த சிங்கள அடிப்படைவாதிகள் எழுதுவதற்கு புனித தந்த தாதுவும் காரணமாக இருந்தன. ஹேமமாலாதான் மட்டக்களப்பு அண்முனைப் பிரதேசத்தை ஆட்சி செய்த உலகநாச்சி என்பது மறைக்கப்பட்ட 50 வருட வரலாற்று இடைவெளியில் நிருபிக்கப்படுகிறது. இதிலுள்ள துரோகம், இனத்துவ அடையாளங்கள், புறக்கணிப்புகள் மட்டக்களப்பு மாண்மியம், பட்டக்களப்பு பூர்வ சரித்திரம் இரண்டிலும் மூடி மறைக்கப்பட்டிருக்கின்றன.

இலங்கையில் பல பிரதேசஙஜகளில் ஆட்சி புரிந்த பூர்வீகத் தமிழ் குடிகளாகிய இயக்கர், நாகர்களில் இயக்கர்களை அழிப்பதில் பௌத்த மதத்தினரோடு நாகர்கள் இணைந்தே செயற்பட்டிருக்கின்றனர். கௌதம புத்தர் இரண்டு முறை இலங்கைக்கு வந்தபோது இலங்கை பௌத்த துறவிகளை அழைத்து “இங்கு பௌத்த மதம் நிலைநிறுத்தப்படுவதற்கு இயக்கர்களின் சைவ வழிபாடு தடையாக இருக்கும். ஆகையினால் நாகர்களின் துணையோடு அவர்களை இங்கிருந்து அகற்ற வேண்டும்” எனக் கூறிச் சென்றதாக மஹாவம்சம் கூறுகிறது. அன்றிலிருந்து இன்றுவரை பௌத்த சிங்கள அடிப்படைவாதிகளால் பல இனப்படுகொலைகள் நடாத்தப்பட்டிருக்கின்றன. நமக்குத் தெரிந்த முதலாவது இனப் படுகொலையாக இயக்கர் குல இளவரசி குவேனி உட்பட அவரது பரம்பரையும் விஜயனால் அழிக்கப்பட்டதைக் குறிப்பிடலாம்.

சஞ்சீவி சிவகுமார் தனது நூலின் மூலம் வரலாற்றை மூடி மறைக்காமல் சான்றாதாரங்களைத் திரட்டி தமிழர்களினதும், நற்பிட்டிமுனைத் தமிழர்களினதும் வரலாற்றினை உண்மை வரலாறாகவே தந்திருக்கிறார் என்பதை ‘நற்பிட்டிமுனை தமிழர் வரலாற்றுச் சால்புகள்’ நூலின் மூலம் நிருபித்திருக்கின்றார். நற்பிட்டிமுனையின் கல்வி வரலாறு, நற்பிட்டிமுனையின் ஆன்மீக வரலாறு, நற்பிட்டிமுனையின் கலை, இலக்கிய வரலாறு, நற்பிட்டிமுனையின் சமூக நிறுவனங்கள், நற்பிட்டிமுனை சந்தித்த அனர்த்தங்கள், நற்பிட்டிமுனையின் வழக்கிலிருந்த கதையாடல்களும் கதை கூறும் கிராமிய விளையாட்டுக்களும் என்ற தலைப்புக்களின் மூலம் அக்கிராம மக்களின் அரசியல், சமூக, பொருளாதார, கல்வி, கலை, பண்பாட்டு விழுமியங்களையும் வாழ்வியல் அம்சங்களையும் தூக்கணாங் குருவி கூடு கட்டுவது போல் தொகுத்துத் திரட்டி முழுமையாகத் தந்திருப்பது தனிச் சிறப்பாகும். இந்நூல் இலங்கையில் மட்டக்களப்பின் ஆரசுரிமை, அதிகாரம், அதன் பரம்பல், எல்லைகள், மன்னர்களினதும், திக்கதிபதிகளினதும் சிறப்புக்கள், அவர்கள் காலத்தில் இருந்த சமூக, பொருளாதார, வாழ்வியல் அம்சங்களைப் புரிந்து கொள்வதற்குச் சிறந்த நூலாக இருக்கப் போகின்றது. அதேபோல் நற்பிட்டிமுனைக் கிராமத்தை முழுமையாக விளங்கிக் கொள்வதற்குமான ஆதார நூலாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்நூலின் ஆசிரியர் சான்றாதாரங்களை நிருபிப்பதற்காக ஒவ்பொரு அத்தியாயங்களின் இறுதியிலும் ஏகப்பட்ட உசாத்துணை நூல் பட்டியலையும் பொருத்தமான இடங்களில் பொருத்தமான வரைபடங்கள், புவியியல் வரைபடங்கள், சான்றுகளைக் காட்டும் படங்கள் என்பவற்றை பயன்படுத்தித் தானும் ஒரு வரலாற்று ஆய்வாளன் என்பதை நிருபித்திருக்கின்றார்.

அதேபோல், அட்டைப்படம், அதன் வர்ணம், பக்க வடிவமைப்பு, பந்திகள் என்பவற்றிலும் கவனம் செலுத்தி இருக்கலாம். எழுத்துக்களைச் சிறிது கருமை (Dark) அக்கி இருக்கலாம். அத்தோடு அரிதாகக் கிடைக்ககூடிய அன்றைய, இன்றைய புகைப்படங்களையும் சேர்த்திருக்கலாம். சமூக, பொருளாதார, கல்வி, கலை, தொழில் முறைகள் என்பவற்றைத் தெளிவுபடுத்தப் புள்ளிவிபர ரீதியான் அட்டவணைகள் சிலவள்றைக் காட்டி இருக்கலாம். இவற்றைத் தவிர சிறப்பான வரலாற்று நூலொன்றை வாசித்த திருப்தி ஏற்பட்டது. அணிந்துரையில் கவிக்கோ வெல்லவூர் கோபால் நல்லதொரு வரலாற்றுப் பதிவொன்றினைத் தந்திருக்கிறார். அத்தொடு உமா வரதராஜனின் ‘நிலம் எனும் நல்லாள்’ பதிவு சிறப்பாக அமைந்திருக்கிறது. ஆசிரியர் நற்பிட்டிமுனைக் கிராமம் பற்றிய அன்றைய, இன்றைய தெளிவொன்றினை வரலாற்று நோக்கில் தன்னுரையில் தந்திருப்பது சிறப்புக்குரியது. சஞ்சீவி சிவகுமார் ஆரோக்கிமாக வாழந்து இது போன்ற பல நூல்களை ஆக்கித்தர வேண்டும் எனக் கோரிக்கை விடுப்பதோடு எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

 

 

*

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *