பலதும் பத்தும்

உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் பொடி கத்தரிக்காய் பொரியல்

பொதுவாகவே கத்தரிக்காய் ஊட்டச்சத்து மிக்க காய்கறிகளின் பட்டியலில் முக்கிய இடம் வகிக்கின்றது. குறிப்பாக இதில், போட்டோ நியூட்ரியெண்ட்ஸ் இருப்பதால் நினைவாற்றலை அதிகரிப்பதில் அதிக ஆற்றல் காட்டுகின்றது.

கத்தரிக்காயில் செரிந்து காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொழுப்பைக் கரைக்க உதவும். உடல் எடையை குறைக்கும் முயற்ச்சியில் இருப்பவர்கள் இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளது நன்மை பயக்கும்.

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதிலும் கத்தரிக்காய் அதிக ஆற்றல் வாய்ந்தது. மேலும் இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கும்.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கத்தரிக்காயில், எப்போதும் போல் குழம்பு செய்யாதல், அசத்தல் சுவையில், ஆந்திரா பாணியில் பொடி கத்தரிக்காய் பொரியல் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கத்திரிக்காய் – 250 கிராம்

எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் -3

கறிவேப்பிலை – 1 கொத்து

இஞ்சி – பூண்டு விழுது – 1 தே.கரண்டி

உப்பு – தேவையான அளவு

எலுமிச்சை சாறு – 1½ தே.கரண்டி

கடுகு – ½ தே.கரண்டி

சீரகம் – ½ தே.கரண்டி

மஞ்சள் – ½ தே.கரண்டி

மிளகாய் தூள் – 1 தே.கரண்டி

இட்லிப்பொடி – 1 தே.கரண்டி

வேர்க்கடலை -3 தே.கரண்டி

செய்முறை

முதலில் கத்தரிக்காயைக் கழுவி சின்ன சின் துண்டுகளாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்துக் கலந்து அதில் போட்டு தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெயை ஊற்றி சூடாக்கி, சீரகம் மற்றும் கடுகு சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் நறுக்கிய கத்திரிக்காய், உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து 3 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கி, பின்னர் இதை மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து நன்றாக கத்தரிக்காயை வேகவிட வேண்டும்.

அதன் பின்னர் வேர்க்கடலையை வாசனை வரும் வரையில், வறுத்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

கத்திரிக்காய் முழுவதுமாக வெந்ததும், அதனுடன் கறிவேப்பிலை, வேர்க்கடலை பொடி மற்றும் இட்லி பொடி ஆகியவற்றை சேர்த்து, 3 நிமிடங்கள் வாசனை வரும் வரையில் வதக்கிய பின்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து, நன்றாக கலந்துவிட வேண்டும்.

நன்றாக வதங்கியதும், கடைசியில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறிவிட்டு இறக்கினால், அவ்வளவுதான் அசத்தல் சுவையில், ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் பொரியல் தயார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *