அமெரிக்கா, மெக்சிகோவில் தேடப்பட்டு வந்த போதைப்பொருள் குற்றவாளி பலி

மெக்சிகோவின் ஜாலிஸ்கோ மாகாணத்தின் டபல்பா நகரில் போதைப்பொருள் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கியஸ்தர் நெமேசியோ ஒசேகுரா கொல்லப்பட்டார்.
‘எல் மென்சோ’ என்றழைக்கப்படும் நெமேசியோ ஒசேகுரா செர்வாண்டஸ், ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவராவார். 59 வயதான இவர், அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் தேடப்படும் குற்றவாளியாவார். அவரை கைது செய்ய தகவல் கொடுப்பவர்களுக்கு 15 மில்லியன் டொலர் சன்மானமாக வழங்கப்படும் என இரு நாடுகளும் அறிவித்திருந்தன. இராணுவத்தினருக்கும் போதைப்பொருள் கும்பலுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் அக்கும்பலின் தலைவர் கொல்லப்பட்டுள்ளார்.
மத்திய-மேற்கு ஜாலிஸ்கோ மாநிலத்தின் டபல்பா நகரில் நடந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் கொல்லப்பட்டதோடு மூன்று இராணுவ வீரர்களும் காயமடைந்துள்ளனர் என்று மெக்சிகன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவரின் மரணத்திற்கு எதிராக அவரது ஆதரவாளர்கள் வன்முறைகளில் ஈடுபட்டனர். இந்த வன்முறை பல மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில்11 பேரும், கொலை மற்றும் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் 14 பேரும் கைது செய்யப்பட்டதாக அமைச்சரவை கூறுகிறது.
வன்முறையினால் கடைகள் தீப்பிடித்தன. சுமார் 20 வங்கிக் கிளைகள் தாக்கப்பட்டன. கலவரத்தின் போது சுமார் 250 வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன என்றும் அமைச்சரவை மேலும் கூறியது.
இதேவேளை ஏர் கனடா, யுனைடெட் ஏர்லைன்ஸ் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் ஜாலிஸ்கோவிற்கான விமான சேவைகளை தற்காலிகமாக இரத்து செய்துள்ளன.
கலவரப் பகுதியில் சிக்குண்டிருந்த உல்லாசப் பயணிகளை பாதுகாப்பு பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல உடனடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அமெரி்க்கா தமது குடிமக்களுக்கு ஜாலிஸ்கோ, டமாலிபாஸ், மைக்கோகான், குரேரோ மற்றும் நியூவோ லியோன் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில் ஜலிஸ்கோவின் ஆளுநர் பப்லோ லெமஸ் நவரோ, மாநிலத்தில் ஒரு சிவப்புச் சட்டத்தை அறிவித்ததோடு அனைத்து பொதுப் போக்குவரத்தையும் நிறுத்தி, பொது நிகழ்வுகள் மற்றும் நேரடி வகுப்புகளை இரத்து செய்துள்ளார்.இந்நிலையில் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம், வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் மாநில மற்றும் மத்திய அதிகாரிகளுக்கு இடையே முழுமையான ஒருங்கிணைப்பு இருப்பதாகவும் மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
![]()